நூலக நிறுவனமானது கிடைத்தற்கரிய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றது. இலங்கையின் வரலாற்றில் இலக்கியங்களுக்கென ஓர் தனித்துவமான இடமுண்டு. ஆரம்பங்களில் இலங்கையின் எழுத்தாவணங்கள் இந்தியாவிலேயே பதிப்பிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே.
இலங்கையில் பதிப்புத்துறை வளர்ச்சி அடைவதற்கு முன்னதாக இலங்கை சார்ந்து சுவடியில் எழுதப்பட்ட விடயங்களை இலங்கையில் நூல்களாக பதிப்பித்து வெளியிடுவதில் பல பிரச்சினைகள் இருந்தமையினால் அதிகமான எழுத்தாவணங்கள் இந்தியாவில் பதிப்பு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேலும் பல ஆவணங்கள் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றினை இனங்கண்டு ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் ஆரம்பங்களில் இலங்கை இந்தியாவுடன் கொண்டிருந்த கடல் வழி தொடர்புகள்,வியாபார தொடர்புகள்,கல்விகற்பதற்கான இந்தியப்பயணங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் தொடர்ச்சியாக இந்தியா சென்றுவந்துள்ளனர். ஈழத்து எழுத்தாளர்களில் சிலர் இந்தியாவிலேயே தங்களது பதிப்புகளையும் வெளியீடு செய்தனர். அவை சார்ந்த விடயங்களை ஆவணப்படுத்தல் முக்கியமாகிறது.