இச் செயற்றிட்டமானது முஸ்லிம் மக்களது கலை, வாழ்வியல் மற்றும் அரசியல், கலாசாரம் போன்றவற்றைப் பாதுகாத்து ஆவணப்படுத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும். இச் செயற்றிட்டமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் மக்களை மையமாகக் கொண்டு அமைந்தது.
இம் மாகாணமானது முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இவர்களின் வாழ்வியல் அம்சங்கள் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் குறிப்பிட்ட சில விடயங்களில் தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இவர்களின் பேச்சுவழக்கு, நாட்டாரியல் கூறுகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இலங்கைத் தமிழ் இலக்கியப் பங்களிப்பில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வகிபாகம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. குறித்த ஒரு சில எண்ணிக்கையானவர்களைத் தவிர அனைவரும் சுன்னி பிரிவினராகவும் ஸாபி சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம் மக்கள் தங்களைப் பள்ளிவாசல் வாரியாக பகுத்துக் கொண்டுள்ளனர். இது ‘மஹல்லா’ எனப்படும். குறித்த மஹல்லா பகுதியைச் சார்ந்தவர்களின் திருமணம், மரணம் மற்றும் அத்தாட்சிப்படுத்தல், சிறு பிணக்குகளை சமரசப்படுத்தல், மார்க்க வழிகாட்டல் போன்றவற்றிற்கு குறித்த மஹல்லா பொறுப்பாக அமையும். அதே போன்று வெள்ளிக்கிழமை விசேட கூட்டுத்தொழுகைக்காக பல மஹல்லாக்கள் ஒன்று சேர்ந்து தெரிவு செய்யப்பட்ட சில விசாலமான பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகையும் வெள்ளிக்கிழமைப் பிரசங்கமும் நடைபெறும்.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வு முஸ்லிம்களிடையே ஒரு வாராந்தப் பெருநாள் போல
வர்ணிக்கப்படுவதுண்டு. விற்பனை நிலையங்களும் குறித்த நாளின் மதியத்திலிருந்து மூடப்பட்டிருக்கும். இது ஒரு ஓய்வு நாளாகவும் கருதப்படுகின்றது. இந்த வெள்ளிக்கிழமை ஒன்றுகூடல்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் ஒரு மரபு நிலவி வருகின்றது. குறிப்பிட்ட இடத்தை வாழ்விடமாக கொண்ட மக்கள் மற்றும் அனைத்து குடும்பத்தலைவர்களும் ஒரே இடத்தில் சேரும் இந்நிகழ்வை இவ்வாறு தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.
இந்தத் துண்டுப்பிரசுரங்கள் பலவகைப்படுகின்றன. அவையாவன;
வாழ்த்துப்பாக்கள்
வாழ்த்துச் செய்திகள்
இரங்கற்பாக்கள் , சரமகவிகள்
பொது அறிவித்தல்கள்
பொது அழைப்பிதழ்கள்
திறந்த கடிதங்கள்
விளம்பரங்கள்
அரசியல் தேர்தல் விஞ்ஞாபனங்கள்
தனிப்பட்டவர்களின் தன்னிலை விளக்கக் கடிதங்கள்
இவ்வாவணங்கள் குறுகிய கால நோக்கில் தயாரிக்கப்படுபவை, உடன் வாசித்து வீசுபவையாக அல்லது ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டும் பேணுப்படுபவைகளாக காணப்படும். அத்துடன் இவை தயாரிக்கப்படும் காகிதப்பொருட்கள் மலிவானவையாகவும் குறுங்காலப் பயன்பாட்டுக்குமானவை. ஆதலால் காலக்கிரமத்தில் இலகுவில் சிதைவடையக்கூடியவையாகக் காணப்படுகின்றன. இதனால் இக் குறுங்கால ஆவணங்களை எண்ணிமப்படுத்தி பாதுகாப்பதற்கான அவசியமுள்ளது.