"நூலகம்:மெய்நிகர் பள்ளிக்கூடம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(" == இலக்கு == <br/> இலங்கையில் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:31, 7 டிசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இலக்கு
இலங்கையில் உள்ள தமிழ் மொழிமூல மாணவர்கள் மற்றும் கல்வி கற்பிப்பவர்களின் பயன்பாட்டிற்காக திறந்த, இலவசமான, இலகுவாக கையாளக்கூடிய, மெய்நிகர் கற்றல் சூழல்களினை உருவாக்குதல்.
பின்னணி
ஒரு சமூகம் அறிவு சார் சமூகமாக பரிணமிக்கும் போது உயர் கல்விக்கும், குறிப்பிட்ட துறைகளில் விசேடத்துவத்தினை எய்துவதனை நோக்கிய கல்விக்குமான தேவை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான கற்றல், பயிற்றுவித்தல், மற்றும் புதிய திறன்களை உள்வாங்கிக் கொள்வதற்கான தேவை நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாக உருவாகின்றன. எனினும், கல்விக்கான எமது செலவு, மருத்துவம் மற்றும் உணவுக்கான எமது செலவினை விடவும் அச்சமூட்டக்கூடிய வகையில் அதிகரித்துச் செல்கிறது. பெருந்தொகையான மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அல்லது அவர்கள் தரமான கல்வியினைப் பெறுவதற்கு மேற்கொள்ளும் செலவினைச் சுமக்க முடியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக, யுத்த காலப்பகுதியில் கல்விக்கான வளங்களினைப் பெற்றுக் கொள்ள முடியாது போன வடக்கு, கிழக்குப் பகுதிகளினைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். கல்வி இடையிலேயே பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இளையோர்கள் எம்மத்தியில் உள்ளனர். இவர்களுக்கு தொழில்சார் கல்வி தேவைப்படுகின்றது. அண்மைக் காலத்தில் உருவாகி வருகின்ற இணையத்தினை அடிப்படையாகக் கொண்ட கல்வி தொழினுட்ப வசதிகளினால் உருவாக்கப்பட்ட வேர்ச்சுவல் கற்றல் சூழல்கள் இவ்வாறான மாணவர்களுக்கு தரமான கல்வி வளங்களை குறைந்த செலவில் வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியுள்ளன.
மெய்நிகர் கற்றற் சூழல்கள் பல்விதமானவை. அவற்றினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
நிலை 1: மெய்நிகர் கற்றல் வளங்கள் (பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், பாடக் குறிப்புக்கள், ஒப்படைகள்/பயிற்சிகள்/ஆய்வுகூடங்கள், குறுவினா பரீட்சைகள்/பரீட்சைகள், கற்பித்தல் வழிகாட்டிகள்)
நிலை 2: மெய்நிகர் கற்கை முகாமைத்துவத் தொகுதிகள் (பாட அலகுகள், வீடியோ/மல்ரி மீடியா, அசைவூட்டங்கள், இயங்கு கருவிகள், இணைந்து பணியாற்றுவதற்கான கருவிகள், மதிப்பீடு, முகாமைத்துவம்)
நிலை 3: சமூக ரீதியான கற்கைத் தொகுதிகள் (சுயமாகவே தொடர்ந்தும் முன்னெடுக்கக் கூடிய இணைந்த கற்றல், இணைப் பங்களிப்பு, இணைந்து உருவாக்கப்படும் கற்றற் சமூகங்கள்)
மெய்நிகர் கற்கை சூழல்களின் மட்டங்களின் உயர்விற்கேற்ப, வெற்றிகரமான சூழல்களை அமைப்பதற்கான தொழினுட்பம் மற்றும் வளங்களிற்கான தேவை அதிகரித்துச் செல்கிறது.
செயற்றிட்டத்தின் நோக்கங்கள்
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் மற்றும் கல்வி போதிப்பவர்களின் பயன்பாட்டிற்காக திறந்த, இலவசமான, இலகுவாக கையாளக்கூடிய, மெய்நிகர் கற்றல் சூழல்களினை உருவாக்குதல் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த செயற்றிட்டம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு கட்டமும் அதன் முன்னர் உள்ள கட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டு, கூடுதலான மக்களைச் சென்றடையும் வகையில் முன்னெடுக்கப்படும். தொழினுட்பத்தின் தரம், அதனது செயற்றிறன் மற்றும் செலவுகளும் அதிகரித்துச் செல்லும். பாடநூல்சார் கல்வி வளங்களை உடனடியாக இணையத்திற்கு கொண்டுவருவதும், அவற்றினை மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய வழிகளை ஏற்படுத்துவதும் செயற்றிட்டத்தின் முதற் கட்டமாக அமையும். திட்டம் மாணவர்களினைச் சென்றடைவதனை உறுதிப்படுத்துவதாகவும், மாணவர்கள் எவ்வாறு திட்டத்தினைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதாகவும் முதற்கட்டப் பணிகள் அமையும்.
ஒரு விரிவான மெய்நிகர் கற்றற் சூழலினை அல்லது வகுப்பறையினை உருவாக்குதல் செயற்றிட்டத்தின் இரண்டாவது கட்டமாகும். மாணவர்கள் தம்து கற்கைநெறியினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இணையத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். வீடியோ மூலமான விரிவுரைகள், சுய மதிப்பீட்டுக் கருவிகள், இணைந்த பங்களிப்புக்கான கருவிகள், இணையம் சார் கல்விக்கான கருவிகள், மற்றும் உருப் போலிகள் போன்றன இவ்வாறான கற்றல் சூழலின் சில பிரதானமான அம்சங்களாகும். மாணவர்களுக்கு இடையிலும், ஆசிரியர்களுக்கு இடையிலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலும் தொடர்ச்சியான தொடர்புகளினைப் பேணக்கூடிய பலமுள்ள, தன்னைத் தானே தொடர்ந்தும் கொண்டு செல்லக்கூடிய, இணையத்தினூடாகச் சமூகமாகக் கற்கக்கூடிய ஒரு குழுவினை உருவாக்குதல் மூன்றாவது கட்டத்தில் இடம்பெறும். புலம் பெயர்ந்தவர்கள், இலங்கையில் உள்ள மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் இணைந்து கற்கவும், பணிபுரியவும் இக்கட்டம் வாய்ப்பளிக்கும்.