பால் நிலை தொடர்பான கலந்துரையாடல்கள் இன்றைய சூழலில் முக்கியமானதாக காணப்படுகின்றன. பால்நிலை அடிப்படையிலான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் அனைவருக்கும் காணப்படும் நிலையில் சமய மற்றும் பண்பாட்டு போர்வையில் பால்நிலை அடிப்படையில் எளிதில் பாதிப்படையும் குழுக்களான தன்பாலீர்ப்புடைய பெண்கள் (Lesbians), தன்பாலீர்ப்புடைய ஆண்கள் (Gay), இருபால் பாலீர்ப்பு உடையவர்கள் (Bysexual persons), திருநர்கள் (Transgenders), மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொணடவர்கள் (Queer) மற்றும் ஏனைய LGBTQ+ போன்றவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை வரலாற்று காலம் முதல் இன்று வரை எதிர்கொள்கின்றனர். பால்நிலை அடையாள வெளிப்பாடு தொடர்பாக பொதுவான நிலைமைகளை விட வேறுபட்ட மனநிலை மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்கும் இவ் சமூக குழுக்களை பொதுவாக Queer சமூக குழுக்கள் என அழைக்கலாம். சமூகத்தில் பல்வேறுபட்ட அடக்குமுறைகள் மற்றும் பாரபட்சங்களுக்கு உள்ளாகும் Queer சமூக குழுக்கள் தொடர்பான எழுத்தாக்கங்கள் மற்றும் எழுத்துசாரா கலைசார் விடயங்களை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் Queer சமூக குழுக்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு உதவுதல், அவர்கள் தொடர்பான விழிப்புணர்வு மேம்படுத்தல் மற்றும் ஆவணப்படுத்தல் ஊடாக அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தினை ஏற்படுத்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலை நோக்கமாக கொண்டு நூலக நிறுவனம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது.