நிறுவனம்:ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=ஸ்ரீ தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் அன்புவளிபுரம்
முகவரி ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் கோவில், அன்புவளிபுரம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலை நகரத்திலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் தவதிரு குன்றகுடி அடிகளாரால் பெயர் சூட்டப்பெற்ற அன்புவளிபுரம் என்ற கிராமம் இருக்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின் 1957 ஆம் ஆண்டு தோன்றிய சைவத்தமிழ் கிராமம். இங்கு குடியேறியவர்களுக்கு வழிபாட்டுக்கு கோவில் இல்லாத காரணத்தினால் இங்கு குடியேறிய திரு. சு. கந்தையா என்பவர் மக்களுக்கும், தனது வழிப்பாட்டுக்குமாக ஒரு கோவிலைக் கட்டினார். கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்குப் பிள்ளையார் திருவுருவமொன்றைச் செய்விப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, "கிராமத்தில் இருந்து தொலைவில் கல்லம்பத்தை என்னுமிடத்தில் நான் இருக்கின்றேன். என்னை நீ கட்டிய கோவிலில் வைத்து ஆதரிப்பாயாக" என்று கனவிலே பிள்ளையார் கூறினாராம்.

இதனால் கல்லம்பத்தை என்ற இடத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். கல்லம்பத்தை என்பது பண்டைக் காலத்தில் மக்கள் வாசம் செய்த பழைய கிராமமாகும். இப்போது காடாய்க் கிடக்கின்றது. அங்கே ஒரு குளம் இருக்கின்றது. அந்தக் குளத்து நீரைப்பாய்ச்சி விவசாயம் செய்து மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். மக்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் ஆலயமொன்றிருந்து அழிந்து விட்டது. இயற்கை ஏதுக்களினாலோ அன்றி வேறு காரணத்தினாலோ அந்த இடத்தை விட்டு மக்கள் வெளியேறி பின் அங்கிருந்த ஆலயம் பராமரிப்பற்று பற்றைக் காடு வளர்ந்து கோவில் அழிந்து விட்டது. பல்லாண்டுகளுக்குப் பின் அந்த இடத்திற்கு திரு. கதிர்காமர் என்பவர் சென்று விவசாயம் செய்து வந்தார். யானை, புலி, காடி முதலிய கொடிய வன விலங்குகளின் எதேச்சையான வாசஸ்தலமாயிருந்த பெரும் காட்டுப் பிரதேசத்தில் கதிர்காமருக்கு அங்கிருந்த பிள்ளையார்தான் துணை வேறு மனித நடமாட்டமே இல்லை. வேட்டையாடுபவர்கள் மாத்திரம் அங்கு இருந்தனர். அப்படியான இடத்தில் கதிர்காமர் துணிச்சலாக விவசாயம் செய்து வந்தார். விதைத்துப் பயிராகிய பின் பயிருக்கு மிருக அழிவுவராமல் எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள். பாதுகாப்பது உன் பொறுப்புத்தான் என்று கூறிவிட்டு வந்து விடுவாராம். பின்பு அறுவடைக்குத்தான் அங்கு போவார். அந்த இடத்தில் பகலிலும் இரவிலும் யானைகள் எதேச்சையாக சுற்றித்திரியுமாம். அப்படியிருந்தும் கதிர்காமருடைய காவலாளி போல் பிள்ளையார் பயிரைப் பாதுகாத்துக் கொடுப்பாராம். ஒருமுறை நெற்பயிர்கள் மழையின்மை காரணமாக அழியும் நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத கதிர்காமர் இன்று மழை பெய்ய வேண்டும். இல்லையேல் உன்னை கோடாரியால் கொத்துவேன் என்று சொல்லி கோடாரியால் கொத்தினார். இரவு முழுவதும் மழை. இத்தழும்பு இன்றும் மூர்த்தியின் வயிற்றடியில் காணலாம்.

இந்தச் செய்திகளை அறிந்த கந்தையா கிராமவாசிகளின் உதவியுடன் பல சிரமங்களின் மத்தியில் பிள்ளையாரை எடுத்து வந்து 1958ஆம் ஆண்டு அன்புவழிபுரம் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்து தில்லையம்பலப் பிள்ளையார் என்று திருநாமமும் சூட்டினார். அன்று முதல் அங்குள்ள மக்கள் இவ்வாலயத்தில் வழிபாடு செய்து வருகின்றார்கள். ஆலயம் சிறியது. ஆனால் மூர்த்தி கீர்த்தியுடையது. பூசைக்குரிய பணிகளைத் தாடி சாமியாரும், கிராமவாசியாகிய திரு. முத்துக்குமார் மேற்கொண்டு வந்தார்கள்.

கற்பக்கிரகம், அர்த்த மண்டபம் இரண்டும் கல்லால் கட்டப்பட்டு இருந்துள்ளன. மடாலயம், மகா பண்டபம் ஆகிய இரண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு நீண்ட காலமாக மகப்பேறு அற்ற நிலையில் இருந்தனர். திருமூர்த்திக்கு வேண்டுதலை முன்வைத்தனர். அவ்வருடத்திலேயே மகப்பேறு கிடைக்கப்பெற்று, அக்காலமே அவ்வேலைகள் தம்பதிகளால் செய்து கொடுக்கப்பட்டு மண்டபம் ஓலையால் வேயப்பட்டது. கருவறையில் பிள்ளையாரும், நாகதம்பிரானும், வைரவவர் வைக்கப்பட்டுள்ளது. சூலமும் 1960ஆம் ஆண்டு கிராம வாசிகளினால் ஆலய பரிபாலன சபை ஒன்று அமைக்கப்பட்டு இன்றுவரை இவ்வாலயம் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் திரு. கந்தையா அவர்களுக்கும், ஆலய பரிபாலள சபையினருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஆலயம் பூட்டப்பட்டது. ஒருசில பெரியோரின் முயற்சியினால் ஐவர் கொண்ட அறங்காவல் குழு அமைக்கப்பட்டு ஆலய பரிபாலன சபையினரிடம் கையளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் சிவராத்திரி, நவராத்திரி, திருவெம்பாவை, ஆவணி சதுர்த்தி போன்ற காலங்களிலும் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

1968ஆம் ஆண்டு புதிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டதுடன் தீர்த்தக்கினாறும் கட்டப்பட்டது. நாளடைவில் இம்முயற்சி பயன் அற்றதாகப் போனமை மிக வேதனைக்குரியதாகும். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற வன் செயலில் ஆலயம், நூல் நிலையம் ஆகியன சேதமடைந்தன. மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பொழுதும் சில பெரியோர் ஆலயத்தை தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றி வந்ததுடன், வெள்ளிக்கிழமை பூசையும் நடத்தி வந்தனர்.

ஆலய சபை சில அன்பர்களின் முயற்சியினால் 1993.02.28 ஆம் திகதி புதிய ஆலயத்திற்காக அடிக்கல் சுவாமி தந்திரதேவா அவர்களால் இடப்பட்டு சமய முன்னோடிகள், கிராமத்தில் வாழும் இளைஞர்கள், அன்பர்கள், பொதுமக்களின் உதவியினால் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு புதுப்பொழிவு பெற்று விக்கிரம வருடம் ஆவணி மாதம்16ஆம் (2000.09.01) திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்றும் ஆலயம் சிறப்புடன் அடுத்த கும்பாபிஷேகமும் கண்டு இயங்கி வருகின்றது.