நிறுவனம்:தி/ ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம்

From நூலகம்
Name தி/ ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District திருகோணமலை
Place ஜமாலியா
Address தி/ ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம், திருகோணமலை
Telephone 0262221011
Email -
Website -


இலங்கைத் தீவின் பசுமையும் வளமும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் தலைநகர் திருக்கோணமலை நகர எல்லைக்குள் வடக்காக 2 Km தூரத்தில் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது இந்த பாடசாலை. அந்த வகையில் இப்பாடசாலை ஆரம்பத்தில் உப்புவெளி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை என்னும் பெயரில் முதல் அதிபராக திரு. எஸ். கே. செல்வநயினாரைக் கொண்டு 28 மாணவர்களுடனும் ஒரு ஆசிரியருடனும் ஓலையால் வேயப்பட்ட சுண்ணாம்பு சுவர்களை கொண்ட ஒரு கட்டிடத்துடன் மெதடிஸ்த மிஷனால் ஆரம்பப் பாடசாலையாக 1928ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலை வரலாற்றில் 1973ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் அதிபராக ஏ. ஆர். எம். இல்யாஸ் அவர்கள் கடமை ஏற்றிருந்தமை பாடசாலை எழுச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இப்பாடசால 1985.03.22ம் திகதி முதல் முஸ்லிம் பாடசாலையாக மாற்றம் பெற்றது. ஆரம்ப காலத்தில் பிரித்தானிய இராணுவத்தினர் இங்கு குடிகொண்டிருந்தமையால் பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தின் அடையாளச் சின்னமாக சில கட்டிட அமைப்புக்கள் காட்சி தருவதை இங்கு இன்றும் காணலாம்.

இந்தப்பாடசாலையின் வளாகத்தைச் சுற்றி 1992ஆம் ஆண்டு சுற்றுமதில் மிக நேர்த்தியாகவும் பாதுகாப்புக்கேற்ற விதத்திலும் கட்டப்பட்டது. சுற்றுமதிலினுள் மைதானமும் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடசாலைக்குரிய காணியானது 1964 இலிருந்து முழுமையாகக் கிடைத்தமை ஒரு சிறப்பம்சமாகும். 1993இல் அதிபருக்கான இல்லம் அமைக்கப்பட்டது.

ஜமாலியா மக்களின் முன்பள்ளி கல்வி மேம்பாடு கருதி 2005ஆம் ஆண்டு People in Need மற்றும் சர்வோதய நிலையத்தின் ஊடாக முன்பள்ளிக் கட்டடம் பாடசாலை வளாகத்தினுள்ளே அமைக்கப்பட்டுள்ளமையானது இப்பாடசாலைக்கு மாணவர்களை ஆரம்பப்பிரிவினுள் உள்வாங்குவதற்கு பெரிதும் துணைபுரிகின்றது எனலாம்.

பாடசாலையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தினுள்ளும் ஒவ்வொரு படிநிலை முன்னேறி இருக்கின்றமையை அவ்வப்போது உணரக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் ஜமாலியா மகாவித்தியாலயமாக 2000ஆம் ஆண்டில் தரமுயர்த்தப்பட்டமையானது ஒரு வளர்ச்சிப் போக்கிற்கான அடித்தளமாகும் என்பதை மறுக்கமுடியாது.

ஆரம்பகாலத்தில் நூலகம் இயங்கி வந்தது ஒரு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும். அந்த வகையில் நூலகத்திற்கான கட்டட வசதியோ அதற்கான தளபாட வசதியோ இல்லாத நிலையில் வகுப்பறைக் கட்டடத்தின் ஒரு பகுதியையும் மாணவர்களுக்குரிய தளபாடங்களில் சிலவற்றையும் பயன்படுத்தி நூலகம் இயங்கி வந்திருக்கின்றது. பிற்பட்ட காலப்பகுதியான 1999இல் நூலகம் புனரமைக்கப்பட்டு ஜமாலியா நகரில் ஒரு முழுமையான நூலகமாக போதுமான வசதிகளுடன் மாணவர்களுக்கு பயனளிக்கின்றமை ஒரு மகிழ்ச்சியான விடயமாகும்.

மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளின் தேவை கருதி விவசாயம், மனையியல் ஆக்கத்திறன் வெளிப்பாட்டிற்கான சித்திர செயற்பாட்டிற்குமான செயற்பாட்டறைக் கட்டிடம் 1995 கட்டப்பட்டமையானது ஒரு விசேட அம்சமாகும். 1996 காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பழைய கட்டிடங்களிலேயே நடைபெற்றன. காலப்போக்கில் நெக்கோட் நிறுவனம் 2007ம் ஆண்டில் இரண்டு மாடிக்கட்டடம் ஒன்றை அமைத்துக் கொடுத்து இந்தப் பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்தமையானது மிக வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

ஆசிரியர், மாணவர்களின் காலை உணவு தொடர்பான கரிசனை நிமித்தம் இந்தக் கல்லூரி வளாகத்தினுள்ளேயே சிற்றுண்டிச் சாலை ஒன்றும் அமைக்கப்பட்டமையானது மாணவர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றது. இந்த சிற்றுண்டிச் சாலை 2000 - 2001 ஆண்டுப்பகுதியில் அமைக்கப்பட்டதாகும். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் புதிய நுட்பத்திறன்களை வளர்க்கும் முகமாக இன்றைய உலகமயமாக்கலின் வேகத்திற்கேற்ப தகவல் தொழினுட்பத் தேவையினைக் கருதி மாணவர்களுக்கு வழங்கும் முகமாக (CLC) அதாவது கணினி கற்கை நிலையம் இந்தப்பாடசாலை வளாகத்தினுள்ளேயே 2004ம் ஆண்டு அமைக்கப்பட்டது ஒரு போற்றுதற்குரிய விடயமாகும். இதனூடாக மாணவர்கள் பெரிதும் பயனடைகின்றனர்.

தொடர்ந்து 2012இல் 58 செயற்திட்டம், 6S, 3R செயற்திட்டம் ஊடாக இப்பாடசாலை பல்வேறு மட்டங்களில் அபிவிருத்தி அடைந்து வருவதுடன் மாணவர்கள் சார்ந்ததும் சமூகத்தற்குத் தேவையானதுமான வழிப்புணர்வு செயற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு வருவதோடு எதிர்காலத்தில் பாடசாலையும் சமூகமும் மேம்பாடடையும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் இப்பாடசாலை நிர்வாகம் திட்டமிட்டு வருகின்றது.

  • திரு. எம். கே. மகர சிதம்பரபிள்ளை - 1928.06.03
  • திரு. எஸ். கே. செல்வநயினர் - 1958.07.31
  • திரு. செல்லையா
  • திரு. எஸ். கே. செல்வநயினர்
  • திரு. டீ. வீ. மார்க்கண்டு
  • திரு. என். கணபதிபிள்ளை
  • திரு. ஏ. நடராஜா
  • திரு. எஸ். எஸ். அந்தோனிப்பிள்ளை
  • திரு. டீ. வீ. மார்க்கண்டு
  • ஜனாப். ஏ. ஆர். எம். இல்யாஸ்
  • ஜனாப். என். எம். கே. ஆப்தீன்