நிறுவனம்:கிளி/ நல்லூர் ஆலங்கேணி மேளாய் ஸ்ரீ கண்ணகை அம்மன்ஆலயம்

From நூலகம்
Name நல்லூர் ஆலங்கேணி மேளாய் ஸ்ரீ கண்ணகை அம்மன்ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place நல்லூர்
Address பூநகரி
Telephone
Email -
Website -


கண்ணகை தங்கிச் சென்ற ஈழத்தின் பல இடங்களிலும் ஆலயமமதைத்து மக்கள் வழிபடத் தொடங்கினர். அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே மேளாய் ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமாகும். இவ் ஆலயம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் நல்லூர் கிராம சேவகர் பிரிவில் பரந்தன் பூநகரி வீதியில் நல்லூர்ச் சந்தியில் இருந்து தெற்குப்பக்கமாகச் செல்லும் வீதியில் 1 கி.மீ தூரத்தில் மேளாய்க்குளப்பகுதியில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் நல்லூர், ஆலங்கேணிப்பகுதியில் தெய்வ பக்தி மிக்க ஒருவர் வாழ்ந்தார். ஓர்நாள் அவர் கனவிலே கண்ணகை அம்பாள் தோற்றமளித்து மேளாய்க்குளத்தின் தென் திசையின் மத்தியிலுள்ள ஓர் திருக்கொன்றை மரத்தடியிலே தாம் இளைப்பாறிச் சென்றதாகவும் இதற்குச் சான்றாக அவ்விடத்தில்தமது சின்னங்களாக ஓர் காற்சிலம்பும், சிறு பிரம்பும் தோன்றும் எனவும் அச்சின்னங்களை அவ்விடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்து இதற்குரிய பூசை விதிமுறைகளை அனுசரித்து யாபேரும் வழிபட்டு வந்தால் கூன்,குருடு,செவிடு, சப்பாணி போன்ற அங்கவீனப் பிறப்புக்களின்றியும்,கொள்ளை நோய்களால் இறப்புக்களின்றியும் இக் கிராம மக்களைக் காத்து வளமாக வாழ்வதற்கு அருள் புரிவதாக அலுள்வாக்களித்து மறைந்தாள். கனவு கண்ட அப்பெரியார் விழித்தெழுந்து வேறும்பலரை அழைத்துக் கொண்டு கனவில் அம்பாள் குறிப்பிட்ட இடம் சென்று பார்த்த போது அருள்வாக்குப்படி திருச்சின்னங்கள் இருக்கக் கண்டார்கள். அங்கே காணப்பட்ட ஒன்பது பரல்கள் பதிக்கப்பெற்ற அழகிய காற்சிலம்பையும் சிறுபிரம்பையும் ஸ்ரீ கண்ணகையாகக் கொண்டு ஆலயம் அமைத்து பிரதிஷ்டை கண்ணகையின் பூசா விதி முறைப்படி பூசைகள் நடாத்தி மெய்யன்புடனட வழிபட்டு வந்தனர்.தற்போதைய சந்ததியினருக்கு சரியாகப் பத்து சந்ததியினருக்கு முற்பட்ட காலப்பகுதியில் கண்ணகை அம்பாள் விக்கிரகம் செய்யப் பெற்று அம்பாளின் ஓர் திருக்கரத்தில் அதே காற்சிலம்பும், மறு கரத்தில் அதே சிறு பிரம்புமாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கிய கண்ணகை அம்பாளையே இன்றும் நாம் வழிபடுகின்றோம். அருள் மிகு இப்பத்தினித் தெய்வம் தோன்றிய போது அருளப்பெற்ற அருள்வாக்குப்படி அன்று தொட்டு இன்று வரை இவ்வாலயம் சென்று மெய்யன்புடன் வழிபடும் பக்தர்களுக்கு கொள்ளை நோய்களால் இறப்போ, கூன்,குருடு, செவிடு,முடம், போன்ற அங்கவீனப்பிறப்போ ஏற்படுவதில்லை. இவ்வருட் செயல் ஒன்றே மேளாய் கண்ணகை அம்பாளின் பேரருளுக்கு எடுத்துக் காட்டாக கூறப்போதுமானதாகும்.