நிறுவனம்:அம்/ கல்முனை தரவை சித்திவிநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்/ கல்முனை தரவை சித்திவிநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி பிரதான வீதி, கல்முனை, அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் கல்முனையில் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஏறக்குறைய 400 வருடகால வரலாறு கொண்டது. ஆனாலும் இற்றைக்கு 500 வருடங்களுக்கு முன்னர் இப்போதுள்ள ஆலயத்திற்கு சமீபமாக உள்ள குளக்கரையிலிருந்தே இதன் மூலமூர்த்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இப்பகுதியில் அண்மித்திருந்த குளக்கரையின் ஓரம் மணல் திட்டியும், அதன் சமீபத்தில் பள்ளமாகவும் காணப்பட்டது. இப்பள்ளம் நீர் நிறைந்து தாமரை மலர்களைக் கொண்ட தடாகமாக விளங்கியது.

இத்தடாகத்தின் கரையோரமாக செல்லும் சிவனடியான் என்பவரது காலில் ஒரு பெரிய கருங்கல் தட்டுப்பட்ட போது அவர் கல்லை எடுத்து குளத்தினுள் தூக்கிப்போட்டார். மறுநாள் காலை அதே கல் அதே இடத்தில் காணப்பட்டது. இவ்வாறு நிறைய தடவைகள் தொடர்ந்து நடந்தது. பின்னர் ஒரு நாள் இரவு சிவனடியானின் கனவில் தோன்றிய உருவம் அடியானே நீ ஒவ்வொருநாளும் தூக்கியெறியும் கல் சாதாரண கல் அல்ல எனக் கூறியதுடன் மறைந்து விட்டது. மறுநாள் காலையில் அவ்விடத்திற்கு வந்து குறிப்பிட்ட கல் விநாயகர் முகத்த ஒத்திருப்பதைக் கண்டு அதிசயித்து அங்கு உள்ள மணல் மேட்டிலே வைத்து விநாயகப்பெருமானின் விக்கிரகமாக உருவகித்து பச்சிலைகளால் பந்தல் கட்டி அதனை வழிபட்டு வந்தனர்.

இப்பிள்ளையார் தரையில் கண்டெடுக்கப் பட்டமையினால் தரவைப்பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. இதனைக் கேள்வியுற்ற அயல் கிராம மக்கள் நாள்தோறும் வருகை தந்து தரிசித்துச் சென்றனர். இதனால் ஆலயத்தின் பெருமை அனைத்து இடங்களுக்கும் பரவியது. பிள்ளையாரின் பக்தர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவ்விடத்தில் நிரந்தர ஆலயம் ஒன்றை அமைத்தனர். தினப்பூசை ஏற்பாடுகளும் தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் ஆலயத்தை பரிபாலிப்பதற்கு பரிபாலன சபை ஒன்று நிறுவப்பட்டது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கு காரியதரிசி, தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இப் பிள்ளையார் தரவையில் கண்டெடுக்கப்பட்டமையாலும் சகலருக்கும் சித்திகள் செய்தமையாலும் இவ்வாலயத்திற்கு தரவைச்சித்தி விநாயகர் கோவில் என பெயர் சூட்டப்பட்டது. 1942 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாகாண அரச பிரதிநிதி சேர். ஹென்றிக் வோட்ஸ் என்பவர் அக்கரைப்பற்றை நோக்கி குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த போது இக் கோவில் முன் வண்டி நகராமல் நின்று விட்டது. பின்னர் தனது கடமைகளை மேற்கொள்ளும் போது ஆலயத்தை வழிபடுவதனை வழக்கமாகக் கொண்டார்.

அன்றைய காலப்பகுதியிலிருந்த பரிபாலனசபைக்கு சட்டபூர்வமான அதிகாரத்தினை வழங்கி தென்புறம் தற்போதைய செய்லான் வீதியின் மேற்குப் பக்கம் இருந்த வடிகான் வாயிலிலிருந்து வடக்கு நோக்கி குடியிருப்புக் காணி 7 சங்கிலிப்பூமியும் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக அக்காலத்தில் குடியிருந்த மக்களுக்கு 73 ஏக்கர் விவசாய நிலத்தினையும் சட்டபூர்வமாக வழங்கினார்

அத்தோடு அவரால் ஒரு சிற்பக் கலைஞர் அனுப்பப்பட்டு கர்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம் என்பவற்றுடன் பரிவார மூர்த்திகளையும் அழகுற ஸ்தாபிக்கப்பட்டது. 1907 ஏற்பட்ட சூறாவளி, 1915 இல் பெருஞ்சூறாவளி, 1957 இல் பெருவெள்ளம், 1978 இல் சூறாவளி போன்ற அனர்த்தங்களினால் ஒரு பாதிப்பும் இக்கோவிலுக்கு உண்டாகவில்லை. ஆனால் 1986 இல் உண்டான தமிழ், முஸ்லிம் இனக் கலவரத்தின்போது இது பலத்த சேதத்திற்குள்ளாகியது அத்தோடு 1986.12.13 அன்று சில விஷமிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பிரச்சினைக்கு பிற்பாடு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பாளர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2014 இல் மூலமூர்த்தியாக விநாயகப் பெருமானும் அவரைச்சுற்றி அனைத்துப் பரிவாரங்களும் வீற்றிருக்க மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோவிலின் வருடாந்த உற்சவம் ஆண்டுதோறும் மாசிமாத்தில் நடைபெறும் பூர்வாங்கக் கிரியைகளைத் தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் 11 ஆவது நாள் தீர்த்தோற்சவமும் இறுதி ஊர்வலத்தில் யானைகளின் நடைபவனியும் மயில் ஆட்டம் மற்றும் கரகாட்டங்களும் கண்கொள்ளாகக் காட்சிகளாகும். 13 ஆவது நாள் வைரவருக்கான பூசையுடன் நிறைவுபெறும்.