நிறுவனம்:யாழ்/ நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place
Address நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை, இப்பாடசாலை 1932ம் ஆண்டு இராப்பாடசாலையாகவே (திண்ணைபள்ளி) ஆரம்பிக்கபட்டது. இருப்பினும் 1935ம் ஆண்டு கார்த்திகை விளக்கீடு அன்று முதல் பகல் பாடசாலையாக நடைமுறைக்கு வந்தது.

1932 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதுவருடப்பிறப்பு அன்று அம்பாள் வீதியில் வைத்தியர் திரு.இ.தியாகராசா அவர்களால் தந்துதவப்பட்ட வைத்தியசாலை மண்டபத்தில் ஓர் இராப்பாடசாலை [திண்ணைப்பள்ளி] நடத்துவது என்ற சங்கத்தின் தீர்மானத்தின் படி இராப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் முப்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் அளவிற்கு வளர்ந்துவிட்டது தொடர்ந்து இராப்பாடசாலை பகல் பாடசாலையாக மாறினால் என்ன? என்ற எண்ணம் சங்க அங்கத்தவர்களின் மனதில் உதித்தது. 1935 ஆம் ஆண்டில் இராப்பாடசாலையில் படித்த பல பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சகிதம் ஒரு பகிரங்க கூட்டம் நடந்தது. காப்பாளர் திரு.வெ. சிவசம்புவின் வேண்டுகோளுக்கினங்க இந்து சாதனப்பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். சங்கத்தின் சேவைகளை பாராட்டி பேசியதுடன் இவ்வூருக்கு ஒரு சைவப்பாடசாலை இல்லாத குறையை நீக்குவதற்குப் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் சொற்பொழிவினால் உந்தப்பட்ட ஊர் பொது மக்கள் பலரும் தம்மால் இயன்ற பொருளுதவி, சரீர உதவிகளை தந்துதவினர். சோதிடர் க.திருஞானசம்பந்தர், ச.சிவசிதம்பரம் , மு.குமாரசாமி, வெ.சிவசம்பு ஆகியோர் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் முகாமையாளர் க.இராசரத்தினம் அவர்களைத்துணை கொண்டு பாடசாலை கட்ட முயற்ச்சி செய்தனர். இக்காலகட்டத்தில் சொந்தகருமமாகச் சென்னை சென்று வீரு திரும்பிய வைத்திய கலாநிதி திரு.வே.சி.இராமநாதன் அவர்கள் நாயன்மார்கட்டு இளைஞர்களின் நன்முயற்சிக் கண்டு அகமகிழ்ந்து மேற்படி இளைஞர்கள் செய்யப்புகுந்த பணிகளைத் தம்பணியெனக் கொண்டு பாடசாலைக் கட்டிடத்திற்கு ஏற்பட்ட செலவுகளில் தம்மாலான பெரும்பகுதியை தாமும் வேறு பல நன்கொடையாளர்களிடமும் இருந்து நிதி திரட்டி சிறப்பானதொரு பங்களிப்பினை நல்கி இருந்தார். இவ்வாறு 1935 ஆண்டு கார்த்திகை விளக்கீடு அன்று நாட்பள்ளி ஆரம்பமானது. சங்க அங்கத்தவர்களின் அபிப்பிராயத்தின்படி ‘மகேஸ்வரி வித்தியாசாலை’’ என பாடசாலைக்கு பெயர் சூட்டப்பட்டது. சங்க இளைஞர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்ததுடன் பற்றையாக கிடந்த பாடசாலை வளவைத்துப்பரவு செய்து விளையாட்டுப் போட்டிகளை பாடசாலை வளவிலும் மகேஸ்வரி பாலர் ஞானோதய சங்க கூட்டங்களை பாடசாலை மண்டபத்திலும் தொடர்ந்து நடத்தினர் இவ்வாறு பல்வேறு சிறப்புக்களையும் பண்புகளையும் கொண்ட மகேஸ்வரி வித்தியாசாலை மாணவ செல்வங்களுக்கு கல்வி எனும் பெரும் செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது.