நிறுவனம்:பன் மதவாச்சி கிராமம்

From நூலகம்
Name பன் மதவாச்சி கிராமம்
Category கிராமம்
Country இலங்கை
District திருக்கோணமலை
Place பன் மதவாச்சி
Address பன் மதவாச்சி கிராமம், திருக்கோணமலை
Telephone -
Email -
Website -

திருக்கோணமலை நகரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் பாதையில் 25வது கிலோமீட்டர் தூரத்தில் பன் மதவாச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் நீண்டகால பூர்வீக கொண்ட தமிழ் கிராமம் ஆகும். சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் திருக்கோணமலை நகரின் திருக்கோனேச்சர ஆலயத்திற்கு பாதுகாப்பாக காணப்படுவதற்காக திருக்கோணமலையின் எல்லைப் பகுதிகளில் எல்லை காளியம்மன் ஆலயங்களை அமைத்தனர். அவ்வாறு பன்குளம் நல்லகுட்டியாறு பகுதியில் காணப்படும் எல்லை காளியம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியிலேயே இந்த கிராமம் காணப்படுகின்றது.

அரச இராசதானி காலத்திற்கு பின்னர் 1961 ஆம் ஆண்டு கங்காதரன் சுவாமி அவர்களால் திருக்கோணமலையைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியில் குடியேற்றப்பட்டு 45 குடும்பங்கள் வசித்து வந்ததுடன், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஏக்கர் அண்ணளவாக உள்ள குடியேற்ற காணிகளையும், ஐந்து ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்களையும் கொண்டிருந்தனர். இந்தக் கிராமம் 1983 ஆம் ஆண்டு சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு, பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் இடம்பெயர்வுக்கும் உற்பட்டது. இந்த கிராமத்தில் வாழும் பலரது குடும்பங்களில் அந்தக் காலப்பகுதியில் இறந்த நபர்களை இன்றும் அடையாளம் கூறுகின்றனர். இந்தக் கிராமத்தில் இப்பொழுது 56 குடும்பங்கள் காணப்படுகினர். 2010 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் பெருமளவிலான மக்கள் வேறு மாவட்டங்களிலும், இந்தியாவிலும் வசித்து வருகின்றனர். இன்னும் அவர்கள் கிராமத்திற்கு திரும்பவில்லை.

மேலும் முன்னர் இந்தக் கிராமம் தற்பொழுது கிராமம் இருக்கும் பகுதிக்கு கிழக்கு திசையில் பிரதான வீதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விலகியே காணப்பட்டுள்ளது. அதே சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் அவர்களது வீடுகளை சூழ பாரிய அளவிலான நெற்பயிர் செய்கைகளையும், விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்கள் பன்குளம் பகுதியில் வசித்த மக்களுடன் தொடர்பில் காணப்பட்டதுடன், திருக்கோணமலை நகரச் சேர்ந்த மக்களுடைய தொடர்பை பேணி வந்துள்ளனர். கிராமத்தில் தற்பொழுது மூன்று பிரதான ஆலயங்கள் காணப்படுகின்றது. சமாயத்துப் பிள்ளையார் என்ற பழமையான சிதைவடைந்த ஆலயமும், பன்மதவாச்சி பிள்ளையார் ஆலயம் என்ற பழமை வாய்ந்த ஆலயம் விமானப்படையின் முகாமுக்கு முன்னால், வீதியோரத்தில் சிறிதாக ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள ஆலயமும், செல்லப்பிள்ளையார் ஆலயமும் காணப்படுகின்றது. இக்கிராம மக்களின் பல காணிகள் வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில், வைக்கப்பட்டுள்ளது.