நிறுவனம்:தென்னமரவாடிப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name தென்னமரவாடிப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place தென்னமரவாடி
Address தென்னமரவாடிப் பிள்ளையார் கோயில், திருகோணமலை
Telephone -
Email -
Website -


இக்கோவில் கிழக்கு மாகாணத்தின் வடக்கெல்லையில், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைப் பட்டிணத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இவ்வாலயத்திற்குக் கிழக்குத் திசையில் கடற்கரையோரமாகவுள்ள கந்தசாமி மலையில் சிவன்கோயில் இருந்ததற்குரிய இடிபாடுகளும், சிதைந்த திருவுருவங்களும் காணப்படுகின்றன. இக்கோவில் கருங்கற் திருப்பணியாய் இருந்ததற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன.

தென்னமரவாடிப் பிள்ளையார் கோயிலுக்குத் தென் மேற்கே பறையனாற்றுக்கு அப்பால் மணற்கேணி என்ற ஒரு இடமிருக்கின்றது. அங்கு சைவ ஆலயம் ஒன்று இருந்ததற்கான சிதைந்துபோன அழிபாடுகள் காணப்படுகின்றன. கற்றூண்களும், கல்வெட்டும் அங்கிருந்ததாம். காடுகளை அழித்து வயல் வெளிகளை உண்டாக்கிய போது இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாக 1985 காலப்பகுதி தென்னமரவாடிப் பிள்ளையார் கோவில் பூசகராயிருந்த திரு. மா. சிற்றம்பலம் ஐயர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாறுகளைப் பின்நோக்கிப் பார்க்கும் போது தென்னமரவாடி ஒரு சைவத் தமிழ்ப் பிரதேசமாய் பண்டைக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். தென்னன்- மரபு - அடி, என்பது தென்னன்மரபடி என்று வழங்கிவந்து, அந்தப் பெயர் இன்று தென்னமரவாடியாகத் திரிந்து வழங்கி வருகின்றது. தென்னன் என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் பொதுப் பெயர். திருகோணமலை மாவட்டத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தமைக்கு வரலாறுகள் காணப்படுகின்றன. திருக்கோணேஸ்வரத்தைப் பாண்டிய மன்னர்கள் ஆதரித்து மானியம் வழங்கியதாகக் கோணேசர் கல்வெட்டில் காணப்படுகின்றது. பாண்டிய மன்னர்களின் "மீன் இலட்சினை" பொறிக்கப்பட்ட கற்றூண்கள் கோட்டை வாசலில் இன்றும் காணப்படுகின்றது. திருகோணமலையிலுள்ள "செம்பியனாறு" என்ற ஊர்ப்பெயரும் பாண்டியர் மரபு வழிப்பெயரே. எனவே பாண்டியர் ஆட்சிக்காலத்தில் செம்பியனாறு சிறப்புடன் விளங்கியிருக்கலாம்.

தென்னமரவாடி ஆலயம் இன்று கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், தரிசன மண்டபங்களைக் கொண்ட ஆலயமாக இருக்கின்றது. கருவறையில் சுமார் மூன்றடி உயரமான பிள்ளையார் சிலை பீடத்துடன் காணப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் தாமிரத்தாலான பிள்ளையார் விக்கிரகமும், வெள்ளிவேலும், அம்மன் விக்கிரகமும், மூஷிகம், பலி பீடம் என்பனவும் காணப்படுகின்றன.

1935 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்று சிறப்பாக பூசை, விழாக்கள் நடைபெற்று வந்தது. மாதசதுர்த்தி, பிள்ளையார் கதை முதலிய அலங்காரப் பூசைகளும், சித்திரை மாதத் தொடக்கத்தில் கந்த புராணப் படிப்பு ஆரம்பித்து நிறைவேற்றுவதும் இங்கு நடைபெற்று வந்தன. 1941 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பெற்று திருப்பணிவேலைகள் நடைபெறாமல் இருந்தது.

தென்னமரவாடியைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய வரலாறுகள் காலத்தால் மறைந்தும், மறைந்து கொண்டுமிருக்கின்றன. தென்னமரவாடியைச் சுற்றிப் பறையன்குளம், பறையனாறு, பறையன்வெளி, பறையனோடை என்னும் இடங்கள் பழைய வரலாறொன்றைக் கூறுகின்றது. பறையனாறு பதவியா குளத்திலிருந்து உற்பத்தியாகிக் கிழக்கேயோடித் தென்னமரவாடிக்கு அருகாமையில் கடலில் சங்கமமாகின்றது. தற்போது பதவியா என்றழைக்கப்படும் இடத்தில் முற்காலத்தில் சைவத் தமிழ்மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் மன்னராட்சிக்குள் அந்தப் பிரதேசம் இருந்திருக்கின்றது. 1965 ஆம் ஆண்டு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது ஒரு தங்கப்பதக்கம் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஒரு பட்டயமென்றும் கொள்ளலாம். வட்டவடிவமான அந்தப் பதக்கத்தில் நடுவில் நந்தியும், அதற்கிரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகளும், மேற்பக்கம் இரண்டு சாமரைகளும் பொறிக்கப்பட்டு கீழ்ப்பக்கத்தில் "மகேஸ்வரபூமி, ஸ்ரீபதிக்கிராமம், பிராமணர்களுக்குத் தானம் செய்யப்பட்டது" என்று எழுதப்பட்டிருந்தது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பதக்கம் தொல்பொருட்காட்சிச்சாலையில் இருக்கலாம். இதனைவிட சிவலிங்கங்களும், சிவன், அம்பாள் விக்கிரகங்களும் இங்கு கிடைத்திருக்கின்றன. பதவியாவிலுள்ள மெரறக்காவ, தித்தக்கொணாவ, காட்டுக்கொல்லாவ, ஏராமடு என்னுமிடங்களில் பிள்ளையார் விக்கிரகங்கள் காணப்படுகின்றன.

இந்த பதவியாவைத் தமிழ் மன்னனொருவன் ஆண்ட காலத்தில் பகையரசனொருவன் படையெடுத்து வந்தானாம். அவனுடைய படையெடுப்பைத் தடுக்க நினைத்த மன்னன் பதவியாக் குளத்தின் குளக்கட்டைக் "கொழுமோர்" காய்ச்சி ஊற்றி உடைக்கும்படி ஆணையிட்டானாம். கொழுமோர்ப் பிரயோகம், கற்பாறைகளையும் உடைக்கும் பண்டைக்கால விஞ்ஞானப் பிரயோகம். அதாவது குளக்கட்டில் நெருப்பை எரித்து சூடேற்ற வேண்டும். நன்கு சூடேறிய பின் அந்த இடத்தில் மோரைக்கரைத்து ஊற்றவேண்டும். அப்படிச் செய்யும்போது குளக்கட்டில் வெடிப்பு ஏற்படும். இப்படிச் செய்தபோது குளக்கட்டு வெடித்து நீர் கசிந்து ஓடத் தொடங்கியது. அது பெரியகுளமாதலால் குளத்திலுள்ள பெரிய மீனொன்று வெடிப்பை அடைத்துக்கொண்டதாம். அந்த மீனை வெட்டி வெளியேற்றும்படி அரசன் ஆணையிட்டான். இதனைச் செய்ய அஞ்சி யாரும் முன்வரவில்லை. ஒரு பறையன் துணிந்து முன்வந்தானாம். அதனைச் செய்யும் போது வெள்ளம்புரண்டு தன்னை அள்ளிக்கொண்டுபோகும் என்பதை உணர்ந்த அவன் தனது அங்கங்கள் எங்கெங்கு கிடக்கின்றனவோ அங்கெல்லாம் தன்பெயர் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு பறையன் அந்த மீனை வெட்டி குளத்தைத் திறந்தான். வெள்ளம் புரண்டு பறையனை அள்ளிக்கொண்டு சென்று சிதைத்துத் தள்ளியது. மாற்றான் படையும் சிதைந்து அழிந்ததாம். பறையன் கேட்டுக்கொண்டபடி அவனுடைய அங்கங்கள் தெறிக்கிடந்த இடங்களுக்கு பறையன்குளம், பறையன்வெளி, பறையனோடை, பறையனாறு என்று பெயர் இடப்பட்டதாக திரியாயில் ஓய்வுபெற்ற கிராமத் தலைவர் திரு. சி. பூ. பொன்னம்பலமவர்கள் தகவல் கூறியுள்ளார். இந்தப் பறையனாறு தான் தென்னமரவாடிப் பிள்ளையார் கோவிலுக்குச் சமீபமாக ஓடுகின்றது.

தற்போது ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அழகுடன் காணப்படுகின்றது. கிராம மக்களால் இயன்றளவு பராமரிக்கப்பட்டும் வருகின்றது.