நிறுவனம்:திரு/ மல்லிகைத்தீவு அருள்மிகு திருமங்களேஸ்வரர் ஆலயம்

From நூலகம்
Name மல்லிகைத்தீவு அருள்மிகு திருமங்களேஸ்வரர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place மல்லிகைத்தீவு, மூதூர்
Address மல்லிகைத்தீவு அருள்மிகு திருமங்களேஸ்வரர் ஆலயம், மூதூர்
Telephone -
Email -
Website -

திருகோணமலையிலுள்ள எந்தச் சைவக்கிராமத்தை எடுத்துக்கொண்டாலும் அவைகள் தெட்சணகயிலாயம் எனப்படும் திருக்கோணேஸ்வரத்திற்கு தொழும்புவகையில் தொடர்புபட்டவைகளாகவே காணப்படுகின்றன. அப்படிச் சொல்வதில் அந்தந்தக் கிராமத்தவர்கள் கௌரவமும் பெருமையும் அடைகின்றார்கள். குளக்கோட்ட மன்னனால் கோணேஸ்வரத்தோடு இணைக்கப்பட்ட கிராமங்களில் மல்லிகைத்தீவு கிராமமும் ஒன்று. பண்டைக்காலத்தில் கோணேசர் ஆலயத்திற்கு மல்லிகைத்தீவு மக்கள் மல்லிகைப்பூ அனுப்பும் திருத் தொண்டைச் செய்து வந்தார்கள். இதனால் அவ்வூர் மல்விகைத் தீவு எனப்பட்டது.

கொட்டியாபுரப்பற்றிலுள்ள மூதூரிலிருந்து வெருகலம் பதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் மூதூரிலிருந்து எட்டுக் கிலோமீற்றர் தூரத்தில் வலப்பக்கமாக ஒரு வீதி பிரிந்து செல்கின்றது. அந்த வீதி வழியாகச் சென்றால் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் இருப்பதைக் காணலாம். கொட்டியாபுரப்பற்றிலுள்ள திருக்கரைசையம்பதி மகோன்னத நிலையில் இருந்த காலத்தில் மல்லிகைத்தீவு என்ற கிராமம் அப்பதியோடு தொடர்புடையதாக இருந்திருக்கலாம். இங்குள்ள மக்கள் திருக்கரைசையம்பதி, அகத்தியர் ஸ்தாபனம், கங்குவேலி என்னுமிடங்களிலுள்ள சைவ ஆலயங்களுக்குத் தொண்டு செய்பவர்களாகவும், நிருவாகத்தில் பங்குடையவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். நானூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சோமநாத உடையார் என்பவர் கங்குவேலி சிவன்கோவிலைப் பராமரித்து வந்துள்ளதாக அறியக் கிடக்கின்றது. குளக்கோட்டு மன்னனால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிந்துநாட்டவர்கள் கொட்டியாபுரப்பற்றில் சில கிராமங்களில் குடியேற்றப்பட்டார்கள். விவசாயம் செய்து கோணேஸ்வரத்திற்கு நெல் முதலியவற்றை அனுப்பிவைக்கும் பெருந்தொண்டைச் செய்யும்படி குளக்கோட்டு மன்னனால் பணிக்கப்பட்டவர்கள்.

இவர்களுடைய பரம்பரை பெருகிச் செல்வாக்கடைந்த காரணத்தினால் ஆலய நிர்வாகங்களையும் நடத்தி வந்திருக்கின்றார்கள். கங்குவேலிச் சிவன்கோவில் இயற்கை ஏதுக்களால் அழிந்துவிட்டபோதிலும் ஆலயம் இருந்த இடத்தில் சிறுகோவில் கட்டி சோமநாத உடையார் பரம்பரையில் வந்தவர்கள் பராபரித்து வழிபட்டு வந்தார்கள். தற்பொழுது பாரிய அழகான ஆலயமாக அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கங்குவேலிச் சிவன்கோவிலுக்குத் தொன்று தொட்டுப் பணிபுரிந்து வந்தவர்கள் அந்த ஆலயம் இருந்த இடத்தைச் சுற்றி வாழ்ந்து வந்தார்கள். அந்த மக்கள் தற்போது பெருக்கமடைந்து அவர்களே இப்போது கங்குவேலிச் சிவன்கோவிலைப் பராமரித்து வருகின்றார்கள். திரு. சோமநாத உடையார் பரம்பரையில் வந்த மக்கள் மல்லிகைத்தீவில் நிலையாகக் காலூன்றிவிட்டதனால் சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன் தங்கள் ஊரிலேயே ஒரு சிவன் கோவிலைக் கட்டி சிவலிங்க மொன்றைத் தாபித்து வழிபட்டு வருகின்றார்கள். அரியமான் கேணிக் காட்டில் பெண்கள்கேணி என்ற இடத்தில் அழிந்து கிடந்த ஆலயத்திலிருந்த சிவலிங்கத்தை எடுத்துவந்து இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள். இவ் வாலயத்தை இப்போது ஒரு பரிபாலன சபை பரிபாலிந்து வருகின்றது.

புதிய ஆலயம் அமைப்பதற்கு இங்குள்ள மக்கள் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர். இப்போதுள்ள ஆலயத்திற்குப் பக்கத்தில் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம் என்பன கல்லால் கட்டப்பட்டிருக்கின்றது. ஆடி அமாவாசைக்குச் சுவாமியை எழுந்தருளச் செய்து மகாவலிகங்கைக் கரையில் "மடத்துத்தெத்தி" என்ற இடத்தில் தீர்த்தமாடுவார்கள்.