நிறுவனம்:திரு/ பத்தாம் குறிச்சி கம்பனிப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name பத்தாம் குறிச்சி கம்பனிப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place பத்தாம் குறிச்சி
Address கம்பனிப் பிள்ளையார் கோவில், பத்தாம் குறிச்சி, திருகோணமலை
Telephone
Email
Website


திருகோணமலைப் நகரில் ஆரியநாட்டார் குடியிருப்பாகவுள்ள இடத்தில் இவ்வாலயம் இருக்கின்றது. ஆரிய நாட்டார் என்று குறிப்பிடப்படுபவர்களை 'பட்டணவர்' என்றும் கூறுவார்கள். நாகபட்டினத்திலிருந்து வந்த மக்கள் இங்கு வசிப்பதால் பட்டணவர் எனப்பட்டனர். இந்தியாவிலிருந்து வந்தவர்களும் இவ்வூர் மக்களும் சேர்ந்து இந்த இடத்தில் ஒரு கொட்டில் கோவிலைக் கட்டி 'காமன் பண்டிகை' என்ற விசேட விழாவை நடத்திவந்தார்கள். இவ்விழாவில் “லாவணி” என்ற பாடல் பாடப்படும். திருகோணமலைச் சிவன் கோவிலில் இருந்து சுவாமியை இவ்வாலயத்திற்கு எழுந்தருளச்செய்து இவ்விழாவை நடத்துவார்கள். காமன் உருவத்தைச் செய்து ஆலயத்திற்கு முன்னே நிறுத்தி "லாவணி" என்ற பாட்டு பாடப்படும். இரண்டு கட்சியினராக மக்கள் பிரிந்து நின்று இப்பாட்டைப் பாடுவார்கள். காமனை எரித்த வரலாறு இதில் கூறப்படும். பாடி முடித்துக் காமனை எரிப்பார்கள். இது 'காமன் பண்டிகை' எனப்படும்.

அக்காலத்தில் பிரித்தானியப் படையில் சேவையிலிருந்த இந்திய இந்துக்களும், ஆர்வத்தோடு இவ்விழாவிற் பங்கெடுத்து நடத்தி வந்ததாகவும் அறியக் கிடக்கின்றது. இவ்வாலயத்தில் பங்குனி மாதத்தில் மன்மதன் திருவிழாவும், புரட்டாதி மாதத்தில் நவராத்திரி விழாவும் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடை பெற்று வந்தன. இக்கோவிலை மன்மதன் கொட்டில் என்றும் அழைப்பார்கள். காமன்விழா இப்போது கைவிடப்பட்டுள்ளது. மன்மதன்கொட்டில் கம்பனிப் பிள்ளையார் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது.

1928ஆம் ஆண்டு பத்தாம் குறிச்சியில் பிரபல செல்வந்தராயிருந்த திரு. கண்ணுச்சாமி என்பவர் பிள்ளையார் ஆலயம் ஒன்றை அமைக்க விரும்பி இந்தியாவில் இருந்த தனது நண்பனாகிய திரு. அரசப்பர் என்பவரிடம் ஒரு பிள்ளையார் திருவுருவத்தைக் கொண்டுவரும்படி வினயமாக வேண்டிக்கொண்டார். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அரசப்பர் அப்பணியை நிறைவேற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தார். அக்காலத்தில் நாகபட்டினத்தில் சிலை வடிக்கும் கலைக்கூடம் ஒன்றிருந்தது. இந்தக் கலைக்கூடத்திலே பிள்ளையார் சிலையொன்றை வைத்து வழிபட்டு வந்தார்கள். இந்தக் கலைக் கூடத்திற்குக் கம்பனிப் பிள்ளையார் கலைக்கூடம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்தக் கலைக்கூடம் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டிருந்தது. இதையறிந்த அரசப்பர் இந்தக் கலைக்கூடத்திலே வைத்து வழிபட்டுவந்த பிள்ளையார் சிலையைப் பெற்றுக்கொண்டு வந்து திரு. கண்ணுச்சாமி என்பவரிடம் கொடுத்தார். அவர் இந்தப் பிள்ளையாரைக் கொட்டிலாயிருந்த கோவிலில் வைத்து வழிபட்டு வந்தார். கம்பனிப்பிள்ளையார் கலைக்கூடத்திலிருந்து பிள்ளையாரைக் கொண்டுவந்ததால் இது கம்பனிப்பிள்ளையார் கோவில் எனப் பெயர் பெற்றது.

இந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவேகானந்தா தொழிற் சங்கத்தினர் பத்தாம் குறிச்சி மக்களுடைய ஒத்துழைப்புடன் இந்த ஆலயத்தைக் கற்கோவிலாகக் கட்டி புனருத்தாரணம் செய்து 1973ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 22ம் திகதி மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திவைத்தார்கள். அன்று தொடக்கம் அந்தணர்களைக் கொண்டு ஆலயத்திற்குப் பூசை செய்வித்து வருகின்றார்கள்.

இது கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபங்களைக் கொண்ட ஆலயம். கருவறையில் பிள்ளையார் சிலா விக்கிரகமும், அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி விக்கிரகமும் வைக்கப்பட்டிருக்கின்றது. காலை, மாலை இரண்டு காலப் பூசை நடைபெற்று வருகின்றது. ஆடியமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு அதற்கு முந்திய பத்து நாட்களும் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. மாதசதுர்த்தி, ஆவணிச் சதுர்த்ததி, நவராத்திரி, திருவெம்பாவை முதலியன விசேட பூசைகள் நடைபெறுகின்றது. பரிபாலன சபை ஆலயத்தைப் பரிபாலித்து வருகின்றது.