நிறுவனம்:திரு/ தம்பலகாமம் தில்லையம்பலப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name தம்பலகாமம் தில்லையம்பலப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place தம்பலகாமம்
Address தில்லையம்பலப் பிள்ளையார் கோவில், தம்பலகாமம், திருகோணமலை
Telephone
Email
Website


திருகோணமலை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆதிகோணநாயகர் எழுந்தருளியிருக்கும் தம்பலகாமத்தில் பட்டிமேடு என்னுமிடத்தில், திருகோணமலை நகரில் இருந்து இருபத்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கின்றது.

தற்போது இந்தக் கோவில் இருக்குமிடத்தில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் கீழ் முட்டைவடிவமான ஒரு பிள்ளையார் கல்லை சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் வைத்து வழிபட்டு வந்தார்கள். இந்தப் பிள்ளையாரை வைத்து ஆதரித்து வந்தவர்களோடுள்ள உட்பகை காரணமாக யாரோ ஒருவர் இந்தக் கல்லை இரவோடிரவாகத் தூக்கிக் கொண்டுபோய் தூரத்திலுள்ள வயல் வெளியில் போட்டு விட்டார்கள். அடுத்த நாள் பிள்ளையார் கல்லைக் காணாமையால் துயரமடைந்த திரு. காளியப்பு என்பவர் பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்துத் தேடிச்சென்று பிள்ளையாரைக் கண்டுபிடித்தார். அதனைத் தூக்கியபோது தூக்கமுடியாமல் மிகப் பாரமாயிருந்ததாம். பின்னர் மற்றவர்களின் துணையுடன் தூக்கி வந்து முன்புபோல ஆலமரத்தடியில் வைத்து வழிபட்டு வந்தார்கள்.

பல வருடங்களுக்குப்பின் திரு. கா. சுப்பிரமணிய உடையார் என்பவர் அந்த இடத்தில் ஒரு கொட்டில் கோவிலைக் கட்டி அந்தப் பிள்ளையாரை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்கள். அக்காலத்தில் ஆலடிப்பிள்ளையார் கோவிலென்று அந்தக் கோவிலுக்குப் பெயரிருந்தது. இந்தக் கோவிலைப் பரம்பரையாகப் பராமரித்து வந்தவர்களும், பொதுமக்களும் பயபக்தியோடு வழிபட்டு வருங்காலத்தில் திரு. சு. காளியப்பு என்பவரும், திரு. கோணாமலை வைராவியாரும், தோம்பர் திரு. கதிர்காமத்தம்பி என்பவரும் சேர்ந்து கொட்டிற்கோவில் இருந்த இடத்தில் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபங்களைக் கொண்ட கற்கோவிலைக் கட்டிக் கருவறையில் பிள்ளையார் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பண்டு தொட்டு வழிபட்டுவந்த பிள்ளையார் கல்லை அர்த்தமண்டபத்தில் ஸ்தாபித்து 1932 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார்கள்.

காலக்கிரமத்தில் மக்களுடைய ஆதரவு பெருகப் பெருக மீண்டும் கோவிலில் புதிய திருப்பணிகளைத் தொடங்கி ஸ்நபன மண்டபம், தரிசன மண்டபம் என்பவைகளையும் சுற்று மதிலையும் கட்டி 1951ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.

அழகிய தூபியையுடைய கருவறையில் விநாயகரும், மகாமண்டபத்தில் எழுந்தருளி பிள்ளையாரும், ஸ்நபன மண்டபத்தில் மூஷிகம், பலிபீடமும் காணப்படுகின்றது. உச்சிக் காலம், மாலைச் சந்தியாகிய இரண்டுகால நித்திய பூசைகளும், ஆவணி மாதத்தில் கும்பாபிஷேக தினத்தை ஆரம்ப நாளாகக் கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவமும், ஆவணிச் சதுர்த்தி, நவராத்திரி, திருவெம்பாவை, பிள்ளையார் கதை முதலிய விசேஷ பூசைகளும் நடைபெற்றுவந்தன.

ஸ்ரீ சு. சோமசுந்தரக் குருக்கள் ஆலயத்தின் பிரதம குருவாயிருந்து பூசைசெய்து வந்துள்ளார். புதிதாக மணிக் கோபுரமும், வைரவர், நாகதம்பிரான் என்னும் மூர்த்திகளுக்குத் தனிக் கோவில்களும் 1988 காலப்பகுதிகளில் கட்டப்பட்டிருக்கின்றன. 1914ஆம் ஆண்டு தம்பலகாமத்தில் வாந்திபேதி நோய் பரவி மக்களை வருத்தியபோது சிந்தாமணிப் பிள்ளையார், தான் எழுந்தருளியிருக்கும் பட்டிமேட்டு மக்களுக்கு இந்த நோய்வராமல் காப்பாற்றினார் என்ற நம்பிக்கையும் உள்ளது.