நிறுவனம்:திரு/ கந்தளாய் கட்டளைப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name கந்தளாய் கட்டளைப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place கந்தளாய்
Address கந்தளாய் கட்டளைப் பிள்ளையார் கோயில், கந்தளாய், திருக்கோணமலை
Telephone 0743437333
Email
Website

திருக்கோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் கந்தளாய் என்ற புரதான இடத்தில் கந்தளாய் குளக்கட்டுக்கு அண்மையில், கந்தளாய் சிவன் ஆலயத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் இந்தப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மேற்கு எல்லையாக குளக்கட்டு வீதி அமைந்துள்ளது.

இவ்வாலயம் குளக்கோட்டன் மன்னன் கந்தளாய் குளத்தை அமைக்கும் பொழுது அதன் பணிகளை ஆரம்பிக்கும் நோக்கில் வழிபட்டு, ஆரம்பிக்கப்பட்ட இடமாக கூறப்படுகின்றது. தம்பலகாமத்தை சேர்ந்த விவசாயிகள் மழை வேண்டும் பொழுது மழையையும், வெயில் வேண்டும் பொழுது வெயிலையும் பெறுவதற்காக விதைப்பு, அறுவடை காலங்களில் திருக்கோனேச்சர ஆலயத்திற்கு நேர்த்தி வைப்பார்கள். அப்பொழுது மழை வேண்டும் என்றால் பச்சைப் பட்டும், வெயில் வேண்டும் என்றால் சிவப்பு பட்டும் நேர்த்தி வைத்து திருகோணேச்சர ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க எடுத்து வந்து கந்தளாய் குளக்கட்டுக்கு அண்மையில் உள்ள கட்டளை பிள்ளையார் ஆலய திருவடிகளில் ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து வழிபாடு செய்வார்கள். பின்னர் அடுத்த நாள் காலை சூரிய உதயத்தில் அந்த பட்டை எடுத்துச் சென்று கந்தளாய்க் குளத்தில் அதற்குரிய இடத்தில் சாந்தி வழிபாடு செய்வார்கள். இந்த நடைமுறை இன்றும் பேணப்பட்டு வருகின்றது.

கற்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கொண்ட இந்த ஆலயத்தின் கருவறையில் குளக்கோட்டன் மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் பெருமானின் திருவுருவம் காணப்படுகின்றது. மேலும் மூஷிகம், பலிபீடம் என்பனவும் காணப்படுவதுடன், இவ்வாலயத்திற்கு அண்மையில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்றும் காணப்படுகின்றது. இது விடம் தீர்க்கும் புஜங்க பெருமானாகிய ஐந்து தலை நாகதம்பிரான் சிலை உடைய விசேட ஆலயமாகும்.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு கந்தளாய் அணைக்கட்டு எதிர்பாராமல் உடைபடுத்த போது இந்த ஆலயமும் பாதிப்புற்றது. 64 உயிர்களும் பலியானது. எனினும் கிராம மக்கள் மீண்டும் இந்த ஆலயத்தை குடமுழுக்கு செய்து பேணிப் பாதுகாத்து வருகின்றனர். புது ஆலயம் 1999 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் ஆறாம் திகதி திருமுழுக்கு கண்டு, பின்னர் 12 வருடங்களுக்குப் பின் மீண்டும் 2015ம் ஆண்டில் இரண்டாவது கும்பாபிஷேகத்தை கண்டுள்ளது.

இந்த ஆலயம் 1874 ஆம் ஆண்டு முதல் அடியார்களின் நிதி உதவி மூலம் நித்திய பூஜைகள் வழிபாட்டுடன் இருப்பதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இவ்வாலயத்திற்குரிய நிரந்தர வருமானம் இல்லாத சூழ்நிலையில் 1906 ஆம் ஆண்டு கோயிலின் முகாமையாளராக இருந்த கந்தளாய் வாழ் இரத்தினசபாபதியின் தகப்பனார் அமரர் கந்தப்பர் வள்ளிபுரம் அவர்களால் அவரது சொந்த பணத்தில் ஏழு ஏக்கர் உடைய ஒரு வயல் காணி ஆங்கில ஆட்சியாளரிடம் வாங்கப்பட்டு, "கோயில் வயல்" எனும் பெயரில் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறுபட்ட புகழுடைய ஆலயம் தனது ஆலய பரிபாலன சபை ஊடாக தொடர்ச்சியாக பேணப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபையாக தலைவர் T. பாக்கியராஜா, உப தலைவர் வ. இ. சோமானந்தன், செயலாளர் ஆ. சண்முகராசா, பொருளாளர் T. ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான பரிபாலன சபை ஆலயத்தை இயக்கி வருகின்றது.