நிறுவனம்:சமாதுப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name சமாதுப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருக்கோணமலை
Place திருக்கோணமலை
Address சமாதுப் பிள்ளையார் கோவில், பிரதான வீதி, திருகோணமலை
Telephone -
Email -
Website -

இந்த ஆலயம் திருக்கோணமலைப் நகரின் பிரதான வீதியில், திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில், மடத்தடி சந்திக்கு அருகில் இருக்கின்றது. "சமாதிப் பிள்ளையார்" என்ற பெயர் திரிபுபட்டுச் "சமாதுப் பிள்ளையார்" என வழங்கி வருகின்றது. சமாதி என்ற சொல்லுக்குள் அடங்கியிருக்கும் பழைய வரலாறென்றின் காரணத்தினாலேயே இவ்வாலயத்திற்குச் சமாதுப் பிள்ளையார் கோவில் எனப் பெயர் வழங்கிவருகின்றது.

இவ்வாலயத்தை உள்ளடக்கிய காணிக்குச் சமாதிவளவு என்று பெயர். சுமார் நூற்றி எழுபது வருடங்களுக்கு முன் கனகசபைச் சாமியார் என்னும் பெரியாரின் சமாதி ஒன்று அந்த வளவில் இருந்தது. சமாதி வைக்கப்பட்டிருந்த வளவு சிலகாலங்களின்பின் தோட்டக் காணியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தோட்டத்திற்கு நீரிறைக்கும் கிணற்றடியில் லிங்கவடிவமான கல்லொன்றிருந்ததாம். அந்தக் கல்லைச் சிறுவர்கள் அந்த வளவின் ஓரிடத்தில் வைத்துப் பூசைசெய்து விளையாடுவார்களாம். சிறுவர்களின் சிறுபிள்ளை விளையாட்டை, இத் தோட்டக்காரருக்கு இடைஞ்சலாகவும், தோட்டப் பயிர்களின் அழிவுக்குக் காரணமாகவும் இருந்தது. அதனால் தோட்டக்காரர் சிறுபிள்ளைகளின் விளையாட்டை நிறுத்துவதற்காக அந்தக் கல்லையெடுத்துக் கிணற்றினுள் போட்டுவிட்டார்கள். அடுத்தநாள் அந்தக்கல் கிணற்றுக்கு வெளியே வந்திருந்ததாம். மறுநாளும் தோட்டக்காரர் அந்தக் கல்லைத்தூக்கிக் கிணற்றினுள் போட்டார். திரும்பவும் அந்தக் கல்லு வெளியே வத்திருந்தது. இப்படிப் பலமுறை நிகழ்ந்த காரணத்தினால், இச்செயல் தோட்டக்காரருக்கு ஆச்சரியமாகவும் பயமாகவுமிகுந்ததாகவும் இருந்தது. இதனால் இந்தக் கல்லின் வரலாற்றை அறிய முயன்றபோது இந்தக் காணியில் சமாதி வைக்கப்பட்டிருக்கும் கனகசபைச் சாமியார் ஆத்மார்த்தமாகப் பூஜை செய்து வழிபட்டுவந்த பிள்ளையார் என்பது தெரியவந்தது.

அக்காலத்தில் வாழ்ந்த சுப்பு உடையார் என்பவரின் கனவில் பிள்ளையார் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதனால் சுப்பு உடையார் இந்த ஆலயத்தைச் சிறிய அளவில் கட்டி மேலே கூறப்பட்ட அற்புதக் பிள்ளையாராக வைத்துப் பிரதிஷ்டைசெய்து வழி பட்டுவந்தார்கள். இக்காரணத்தினலேயே இவ்வாலயம் சமாதுப்பிள்ளையார் கோவிலெனப் பெயர் பெற்றது. இக் கோவிலுக்கருகில் சமாது ஒழுங்கை என்ற பெயருடன் ஒரு வீதி இன்றும் இருக்கின்றது. கோவிலின் கருவறையில் முற் கூறப்பட்ட லிங்கவடிவ வட்டக்கல்லையே பிரதிஷ்டைசெய்து இன்றும் வழிபட்டு வருகிறர்கள். இந்த அமைப்பிலுள்ள கல்லை விநாயகலிங்கம் என்று கூறுவதுண்டாம். இது சுமார் பன்னிரண்டு அங்குல உயரமுடையது. முன்பக்கம் புருவ முடையதாய் முப்பட்டை வடிவில் இந்த விநாயகலிங்கம் காணப்படுகின்றது. பூசை நடைபெறும் போது வெள்ளியிலான பிள்ளையார் அங்கியைத் தரித்துப் பூசைசெய்து வருகின்றார்கள். தங்க விநாயகரென்றும் இதனைக் கூறுவர்.

சுமார் நூற்றி அறுபது வருடங்களுக்கு முன் திரு. சுப்பு உடையாரால் கட்டப்பட்ட சிறிய கோவிலை, திரு. வேலுப்பிள்ளை என்பவர் 1928ஆம் ஆண்டு ஆலயத்தில் சில திருத்தங்ளைச் செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார். அதன்பின் திரு. த. இராமலிங்கம் என்பவர் பொதுமக்களின் உதவியுடன் பல திருப்பணிகளைச் செய்து 1968ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவைத்தார். வடக்கு நோக்கிய, பிரதான வாசலைக் கொண்டதாக அமைந்திருக்கும் இவ்வாலயம் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்ட பங்களையுடைய சிறிய ஆலயமாயிருந்த போதிலும், மூர்த்தி விசேடத்தினாலே கீர்த்திமிகவுடையது.

மகாமண்டப வாசலில் மணிக்கோபுரம் இருக்கின்றது. கருவறை அழகிய சிறிய தூபியையுடையது. அலங்கார உற்சவம் நடைபெறும் போது சுவாமி எழுத்தருளியிருப்பதற்காக மகா மண்டபத்துடன் இணைத்து வசந்தமண்டபம் அமைத்திருக்கின்றர்கள். அர்த்தமண்டபத்தில் இடது பக்க மேடையில் பிள்ளையார், சில விக்கிரகமும், வலது பக்க மேடையில் எழுந்தருளிப் பிள்ளையாரும், பைரவரவருமுண்டு. ஆடியமாவாசையைத் தீர்த்த தினமாகக் கொண்டு, பத்து நாட்களும் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது.

தண்டிகைத் திருவிழாவும், பூங்காவன விழாவும் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுவதுண்டு. மாத சதுர்த்தி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, நவராத்திரி என்பன விசேடபூசைத் தினங்களாகும். காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டு காலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தில் விசேட ஸ்நபனாபிஷேகமும், நகர் வலமும் நடைபெறுகின்றது. ஆடியமாவாசையன்று சுவாமி கடற்றீர்த்தமாடுவார். இவ்வாலயத்தில் புலவர். வை. சோமாஸ்கந்த குருக்களவர்கள் பூசை செய்து வந்தார். இவருடைய முன்னோரே பரம்பரையாகத் தொடர்ந்து பூசை செய்து வந்திருக்கின்றர்கள்.

தற்சமயம் இந்த ஆலயம் புணருத்தானத்திற்காக உடைக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக ஒழுங்கான வழிபாடுகள் இன்றி சிதைவடைந்து காணப்படுகின்றது.