நிறுவனம்:குமாரத்தன் சடங்கு தளவாய்

From நூலகம்
Name குமாரத்தன் வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place தள்வாய்
Address தளவாய்,ஏறாவூர், மட்டக்களப்பு
Telephone 761515008
Email -
Website -


இலங்கையின் கரையோர வேடர் என்போர் தீவின் கிழக்குக் கரையோரமாக இன்று வரைக்கும் வாழ்ந்து வருகின்றனர். அவர்தம் இருப்புக்கு இன்றும் மாறாத உதாரணமாய் விளங்குவன அவர்கள் பின்பற்றி வருகின்ற சடங்கு நடவடிக்கைகள் தாம். அவ்வாறான பண்பாட்டுக் கூறுகள் இன்றும் பின்பற்றப்படுகின்ற கரையோர வேடர்களின் தொல்கிராமங்களுள் ஒன்றான ‘தளவாய்’ எனும் கிராமத்தில் காணப்படும் வேடர் வழிபாட்டு மையமாக குமாரத்தன் வேடர் வழிபாட்டிடம் காணப்படுகின்றது. இது கி.பி. 1853 இல் தான குறித்த இடத்தில் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இதன் கப்புறாளைமார்களான பனுவள சீயா, செல்லாப்பத்து சீயா, நல்லமாப்பான சீயா, பட்டியடி சீயா, திருக்காகனி சீயா, வெம்புத்தவறனை சீயா, புளியட்டி சீயா, நாகமுத்து, வீரக்குட்டி ஆகியோருக்குப் பின்னர் வாழும் தலைமுறையாக கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக வேலுப்பிள்ளை என்பவர் காணப்படுகின்றார்.

இவ்வழிபாட்டிடமானது முற்றுமுழுதாக ஓர் கரையோர வேடர்களின் வழிபாட்டமைப்பாகக் காணப்பட்டாலும் இன்றைய நிலையில் நவீனத்தாக்கம், பார்ப்பனீய இடைச்செருகல் முதலான பல விடயங்களை தன்னுள் உட்செரித்துக் கொண்டதாகவே காணப்படுகின்றது. அவ்வகையில் கட்டுமான அமைப்புக்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. வழிபாட்டிடமானது ஶ்ரீ குமாரர் ஆலயம் எனப்பெயர் மாற்றப்பட்டுள்ளது. வருடாந்தச் சடங்கு நிகழ்வுகள் ஓர் தமிழர் வழிபாட்டுடன் ஒத்த திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஆனால் என்னதான் நவீன மாற்றங்கள் உட்படுத்தப்பட்டாலும் சடங்கு முறைமையானது இன்னும் வேடர் மன்றாட்டுடன் காணப்படுகின்றமையானது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இங்கு தோரணச்சடங்கு எனும் தனித்த தொல் வழிபாட்டுப் பண்பு இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது.