நிறுவனம்:கிளி/ குமுழமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை
| Name | கிளி/குமுழமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை |
| Category | பாடசாலை |
| Country | இலங்கை |
| District | கிளிநொச்சி |
| Place | மாசார் |
| Address | மாசார் |
| Telephone | |
| - | |
| Website | - |
தொன்மையான வரலாற்றைக் கொண்ட குமுழமுனை கிராமத்தில் வாழும் சிறார்களிற்கு சிறந்த கல்வியறிவைப் புகட்ட வேண்டுமென்ற அவாக் கொண்டு இரணைதீவு பங்குத் தந்தையாயிருந்த அருட்தந்தை டிலான் அடிகளாரின் பெருமுயற்சியால் தற்போதைய புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் ஓலையால் வேயப்பட்ட கொட்டிலில் கிளி/குமுழமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு அந்தோனிப்பிள்ளை என்பவர் ஆசிரியராக கடமையாற்றினார்.
அக்காலத்தில் பல்லவராயன்கட்டு, குமுழமுனை, நாச்சிக்குடா போன்ற கிராம மாணவர்களின் வசதிகருதி கார்த்திகேசு குஸன்ரேபு என்பவரால் வழங்கப்பட்ட ஒயாமார் குளத்தை அண்டியகாணியில் அரசாங்க நிதியுதவியுடன் 1933ஆம் ஆண்டு தற்காலிகமாக கட்டப்பட்ட பாடசாலையில் கல்வி தொடரப்பட்டது. இங்கு குமுழமுனை, நாச்சிகுடா, பல்லவராயன்கட்டு பிரதேசங்ளைச்சேர்ந்த மக்களின் பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 1935.08.10 அன்று பாடசாலை நிரந்தக்கட்டடமாக அமைக்கப்பட்டு ஆசிரியர் விடுதி, மலசலகூடவசதி, கிணற்று வசதி என்பன ஏற்படுத்தப்பட்டது.. இக்காலப்பகுதியில் தரம் 08 வரையான வகுப்புக்கள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் காலப்பகுதியில் அயல் கிராமங்களில் பாடசாலைகள் நிறுவப்பட்டமையால் இப் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கள் குறைவடைய தரம் ஐந்து வரையான வகுப்புக்களாக தரம் குறைக்கப்பட்டது.
இப் பாடசாலை வரலாற்றிலே 1997ஆம் ஆண்டு செல்வி. ச. அகிலா என்ற மாணவி தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் தரம் ஐந்து புலமைப்பரீட்சைக்கு வழிகாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் திருமதி ச.செல்வராஜேஸ்வரன் ஆசிரியர் ஆவார். இப் பாடசாலையின் வளர்ச்சிப் படியிலே பாடசாலையானது கிராமத்தின் மத்தியில் அமைக்கப்பட வேண்டும் என்ற முயற்சி செயல்வடிவம் பெற்றமை முக்கியமான விடயமாகும். அந்த வகையில் 2000ஆம் ஆண்டு தை மாதம் குமுழமுனை விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு புதிய இடத்தில் பாடசாலை நடைபெற்றது. இக்காலத்தில் பாடசாலைக்கான சொந்தக்காணி இல்லாத குறை நீக்கப்பட வேண்டுமென கிராம மக்களும் நலன் விரும்பிகளும் குறிப்பாக அப்போது அதிபராக கடமையாற்றிய திரு.த.பிரபாகரன் அவர்களதும் பங்குத்தந்தை ஞா.பீற்றர் அடிகளாரதும் அரும் பெரும் முயற்சிகளினாலும் கல்வித்திணைக்களத்தின் பண உதவிபெற்று குமுழமுனை விளையாட்டு மைதானத்திற்கருகிலுள்ள இரண்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனியாருக்குச் சொந்தமான காணி ரூபா 25000ற்கு வாங்கப்பட்டு பாடசாலைக்கு சொந்தமாக்கப்பட்டது.
புதிய காணி சிரமதான முறையில் திருத்தப்பட்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இக்காலத்தில் 2003ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இப் பாடசாலை தரம் ஒன்பது வரை தரம் உயர்த்தப்படுவதற்கான அனுமதி கல்வியமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து 2004ஆம் ஆண்டு தரம் ஆறும் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தரம் ஏழு தரம்எட்டு வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. தரம் ஒன்பது வகுப்பு நடத்துவதற்கு வேண்டிய பௌதிக வளமும்; ஆசிரியர் வளமும் இன்மையால் அப்போது தரம் பெருக்கிக் கொள்ள அரைநிரந்தரக்கட்டம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் கல்வியமைச்சினால் ஏற்படுத்தப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அருட்தந்தை ஞா.பீற்றர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்டது தொடார்ந்து கிணறு, சிறுவர் விளையாட்டு முற்றம் என்பன அமைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது அடுத்து 2008 ஆம் ஆண்டு ஏற்கனவே கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைவாக தரம் ஒன்பது வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது இவ்வாறு இப் பாடசாலை வளர்ச்சியுற்று வந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 21.07.2008ஆம் ஆண்டில் பாடசாலை வன்னேரிக்குளத்திற்கு இடம்மாற்றப்பட்டது.
தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக பிரமந்தனாறு பாடசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் கல்விச்செயற்பாடு முன்னெடுக்கபட்டு கடமையான யுத்தத்தின் காரணமாக பாடபசாலையினுடைய வளங்கள் ஆவணங்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகிய 10.012009 ஆண்டில் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீள்குடியேற்றம் செய்யபட்டதோடு எமது பாடசாலையும் தனது செயற்பாடுகளை 2009.12.03.ஆம் திகதியன்று அதிபர் திரு.அ றொபேட் கெனடி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில் வலயக்கல்வித் திணைக்களமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து நூறு அடி அரைநிரந்தரக்கட்டடமும் இந்திய மக்களின் அனுசரணையோடு வகுப்பறைகளைக் கொண்ட நிரந்தர கட்டடமும் அமைக்கப்பட்டு பன்னிரெண்டு நிரந்தர ஆசிரியர்களும், 175 மாணவர்களையும் கொண்டு மிளிர்வதோடு காலத்திற்குகாலம் சிறந்த கல்விப்பணியின் மூலம் பல்கலைக்கழகமாணவர்கள், ஆசிரியர்கள், ஏனைய அரச உத்தியோகத்தவர்கள், அருட்தந்தையர், திருநிலைகளுக்குள் பணியாற்ற பயிற்சி பெறுபவர்கள் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களையும் உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்த பெருமைக்குரியது என்பதோடு இனிவரும் காலங்களில் பல்வேறு சாதனைகளுக்கு தோற்றுவாயாக அமையும் என்பது திண்ணம்.