நிறுவனம்:அம்/ ஶ்ரீ வீரபத்திரர் ஆலயம்

From நூலகம்
Name ஶ்ரீ வீரபத்திரர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place காரைதீவு
Address காரைதீவு, அம்பாறை
Telephone -
Email -
Website -


ஶ்ரீ வீரபத்திரர் ஆலயம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ளது. காரைதீவில் வாழ்ந்து வந்த தமிழ் பழம்பெரும் குடிகள் பல. அவற்றுள் “கவுத்தன்” குடியும் ஒன்றாகும். இசை பற்றி ஆராய்ந்து யாழ்நூலை அமைத்த சுவாமி விபுலானந்தரும் இக் குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குடியைச் சேர்ந்தவர்கள் தனியானதொரு ஆலயத்தை அமைப்பதற்கு முற்பட்டனர்.

கந்தப்பர் கண்ணப்பர் என்பவரால் நன்கொடையளிக்கப்பட்ட காணியில் 1889ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பத்தாந் திகதி (1889.10.10) அதே தினத்தில், திரு க. தோ. கதிரமலை, திரு. க. கண்ணப்பர், திரு. க. வேலாயுதம்.என்பவர்களால் ஓலைக் கொட்டில் அமைக்கப்பட்டு, வழிபாடு பூசைகள் செய்யப்பட்டு வந்தன. காலக்கிரமத்தில் சந்தானத்தாரின் ஒத்துழைப்புடன் நிரந்தர ஆலயம் அமைக்கும் பணிகள் கட்டிட ஆரம்பமாயின. 1900ஆம் ஆண்டு ஆவணி மாதம் இவ்வாலயம் நிரந்தர ஆலயமாக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

சீரான நடைமுறை நிர்வாகம் செய்வதற்கு நிதி தேவைப்பட்டது. சந்தானத்தார் இதற்கு உதவ முன்வந்தனர். இவ்வண்ணம் உதவிக்கு முன்வந்தவர்களில் காதிராகிப்பிள்ளை, மயிலாத்தை, பெரியனாச்சி, கண்ணாச்சி, பாரியாத்தை ஆகிய 05 பெண்களும் தங்களுக்குரியதும் செங்கற்படையிலுள்ளதும் துறையவெளியென்னும் 22% ஏக்கர் பரப்புள்ள நெற்காணியை 1901.01.24ஆம் திகதியிட்டு 794ம் இலக்க உறுதி மூலம் இவ்வாலயத்திற்கு நன்கொடையாக அளித்தனர்.

1901ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை மூலம் ஐயாத்துரை பரமசாமிப்பிள்ளை ஐயர் என்பவரை ஆலயப்பூசகராக ரூபா 36/- வருட வேதனத்தில் நியமிக்கப்பட்டார். இவர் பிள்ளையார் கோயில் பூசகராகவும் இருந்தபடியால் வேதாகம முறைப்படி பூசைகளை இங்கும் செய்து கொண்டு வந்தார். இவரது காலத்தின் பின்னர் 1915ஆந் ஆண்டு முதல் இப்பூசை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. புரட்டாதி பூரணையை மையமாக வைத்து ஊர் சுற்றல், தெய்வமாடல் சடங்குகள், பலியிடல் முதலியன ஆரம்பிக்கப்பட்டு 1957 முதல் பலியிடுதல் நிறுத்தப்பட்டு சடங்குப் பூசைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இது திரு. கந்தையா கட்புகன் என்பவரால் செய்யப்பட்டு வந்தது.

ஆண்டு தோறும் விஷேட பூசைகளான தைப்பொங்கல், மகாசிவராத்திரி, சித்திரை வருடப்பிறப்பு, ஆடிமாதப் பூரணை ஆகியவைகளுடன் புரட்டாதிச் சடங்கு, கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை, திருவாதிரை என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் புரட்டாதி சடங்கே விஷேடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இது பூரணைத் தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் கடல் நீர் எடுத்து வருவதோடு ஆரம்பமாகி, கும்பம் வைத்து நான்கு நாட்கள் பகல், இரவு பூசைகளுடன் ஐந்தாம் நாள் விஷேட ஊர்வலமும் அன்றிரவு பெரிய பூசை பள்ளயத்துடன் முடிவுற்று எட்டாம் நாள் சடங்குப்பூசையும் நடைபெற்று வந்தது.

இப்பூசைகள் யாவும் ஆலய வருமானத்திலிருந்தே நடைபெற்று வந்தது. 1985ஆம் தொடக்கம் 1990ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக அழிவுற்று மிகவும் பாதிக்கப்பட்டது. எனினும் மக்களின் ஒத்துழைப்பாலும், நிருவாகத்தின் செயற்திறனாலும் 2000ஆம் ஆண்டு இவ்வாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, மிகுந்த செலவில் 08.11.2000ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று ஒருமண்டல மண்டலாபிஷேகம் நடைபெற்று, ஈற்றில் சங்காபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சகல பூசைகளும் ஆகம முறைப்படி தினமும் மூன்று நேரப்பூசைகள் குருக்கள் மூலம் நடைபெற்று வந்தன. 26.12.2004இல் ஏற்பட்ட சுனாமிப்பேரலையின் தாக்கத்தினால் இவ்வாலயம் பேரழிவுக்குள்ளானது. அதன்பின் பாதிக்கப்பட்ட இவ்வாலயம் புனரமைப்புக்காக 2006.06.29ஆந் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு நித்தியபூசைகள் நடைபெற்று வருவதோடு அதன் பின்னர் பெரிய ஆலயமாக கட்டப்பட்டு திருவிழாக்கள் இடம்பெறுகின்றன.