நிறுவனம்:அம்/ வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார்
Name | வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | வீரமுனை |
Address | வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார், அம்பாறை |
Telephone | - |
- | |
Website | - |
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை எனும் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலயமாகும். இங்கு வழிபடும் பிள்ளையார் திருவுருவச்சிலை சோழ நாட்டு அரசி சீர்பாததேவி கொண்டு வந்து வைத்தது என்று கூறப்படுகின்றது. சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்பதினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமானதாகக் காணப்பட்டது.
கப்பலிலே கடல்வழியாக சிங்கை நாட்டுக்கு பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. வட இலங்கையின் சிங்கை நகரினை கப்பல் அண்மித்த வேளையிலே அரசியின் வேண்டுகோளுக்கமைய கப்பலை கிழக்கு கரையோரமாக திருப்புமாறு கட்டளை பிறப்பித்தான். கிழக்கின் எழிலினை ரசித்தவண்ணம் உல்லாசமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்கள் கிழக்கின் முக்கிய இடமாக விளங்குகின்ற திருகோணமலை கடற் பிரதேசத்திலே பயணித்துக் கொண்டிருந்தபோது திருக்கோணேசர் பெருமானின் ஆலயம் அவர்களின் கண்களுக்குப் புலப்பட்டது. கோணேசப் பெருமானை மனமுருக வழிபட்டுக்கொண்டு இருக்கும்போது அவ்வேளையில் கப்பலில் கோளாறு ஏற்பட்டது போல் கப்பல் ஆலயத்திற்கு முன்பாக தடைப்பட்டு நின்றது. கப்பலின் இவ்வாறான நிலைமை அதிலிருந்த அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அவ்வேளையில் அங்கிருந்தவர்களில் சிந்தன் என்பவன் அதனை அறியும் பொருட்டு நீரிலே இறங்கி கப்பலின் அடியில் சென்று கப்பல் ஏதாவது பாறைகளில் முட்டி இருக்கின்றதா? என்பதனை ஆராய்ந்தான். எனினும் கப்பல் அப்படியான எந்த ஒரு பொருளிலும் முட்டி மோதவில்லை. சாதாரணமான நிலையிலேயே காணப்பட்டது.
அப்போது சிந்தனுடைய கண்களில் விக்கிரகம் ஒன்று தென்பட்டது. அதனை அருகே சென்று பார்த்தபோது அது ஒரு விநாயகர் விக்கிரகம் என்பது சிந்தனுக்கு தெளிவாகியது. இதனை அறிந்த அரசியார் மீண்டும் ஒரு முறை இறைவனை தியானித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவ்விக்கிரகத்தினை மேலே கொண்டு வருமாறு பணித்தாள். அதனைக் கண்ட மன்னன், அரசியார் உட்பட்ட அனைவரும் வியப்புற்றனர். எவ்வாறு இவ்விக்கிரகம் கடலில் வந்து சேர்ந்தது என பலவாறும் வினவினர். எது எவ்வாறாயினும் இறைவன் செயலாகத்தான் இவ்விக்கிரகம் தமக்கு கிடைத்ததாக நினைத்த சீர்பாததேவியார் அவ்விக்கிரகத்தின்பால் ஒரு நேர்த்திக்கடனை முன்வைத்தார்.
அதாவது நாங்கள் பயணம் செய்யும் இந்தக்கப்பல் எந்த இடத்தில் தரித்து நிற்கின்றதோ அவ்விடத்தில் இவ்விக்கிரகத்தினை வைத்து பிரம்மாண்டமான ஒரு ஆலயத்தினை அமைப்பதாகக் கூறி கப்பலினை தொடர்ந்து செலுத்துமாறு கூறினார். அதன்படி கப்பலும் தொடர்ந்து பயணத்தினை ஆரம்பித்தது. பயணத்தினை தொடர்ந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியின் தெற்குத் திசைநோக்கி பயணித்து வாவியின் அந்தமான வீரர்முனை என்ற இடத்தினை கரை தட்டியது. வீரர்முனையிலே ஆலயம் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பலனாக சோதிடர் குறிப்பிட்டதும் ஆகம முறைக்கு ஏற்றதுமான ஒரு சுப நாளில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம் ஆலயத்திலே எழுந்தருளப்பட்டு ஆலயத்திலே செய்து முடிக்க வெண்டிய கிரியைகள் அனைத்தையும் பாலசிங்கன் செய்து முடித்தான். சிந்து யாத்திரையின் பயனாக (அதாவது சிந்து என்பது கடல் எனவே கடல் யாத்திரை என்ற அர்த்தத்தினை கொண்டது) கிடைத்த விநாயகர் என்றபடியால் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என திருநாமம் சூட்டப்பட்டது. பின்னர் வீரர்முனையிலே சிந்தாயாத்திரைப் பிள்ளையாருக்கு திருவிழா எடுப்பித்து மகிழ்ந்தனர். இவ் வீரர்முனையே இப்போது வீரமுனையாக மருவி அழைக்கப்படுகிறது.