நிறுவனம்:அம்/ மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் கோயில்

From நூலகம்
Name மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place நிந்தவூர்
Address செங்கற்படை, நிந்தாவூர், அம்பாறை
Telephone -
Email -
Website -


இலங்கையில் இருக்கும் ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயமாக அம்பாறை மாவட்ட நிந்தவூர் பிரதேசத்தின் மருதநிலசூழலில் எழுந்தருளி மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம் சுமார் 500வருடங்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது. சுற்றிவர பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளுக்கு மத்தியில் ஆலமரம், அரசமரம், மாமரம், கமுகு, வில்வை மரம், தென்னை மரங்கள் நிறையப் பெற்ற ஒரு மனோரம்மியமான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

போர்த்துகீசர் காலத்தில் அதாவது 15ம் நூற்றாண்டு காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக் காலத்தில் சிற்சில பிராந்தியங்களில் வன்னிமையின் சிற்றாட்சி நிலவியது. மட்டக்களப்பில் மண்முனைப்பற்று வன்னிமைகளான அம்பிளாந்துறை கந்தப்போடி, சத்துருக்கப்போடி, கதிரமலைப்போடி, அறுமக்குட்டிபோடி, ஆகியோரின் கண்காணிப்பில் சில ஆலயங்கள் பரிபாலிக்கப்பட்டு வந்தன.

அதே போல் மட்டக்களப்பின் தெற்கே நற்பிட்டிமுனையில் வாழ்ந்த கரவாகுப்பற்று வன்னிமைகளான சின்னத்தம்பி செல்லையா வன்னிமையின் கண்காணிப்பில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், நற்பிட்டிமுனை மாணிக்கப் பிள்ளையார், சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்பாள் ஆலயம் என ஐந்து ஆலயங்கள் பரிபாலிக்கப்பட்டு வந்தன.

அதே போன்று அட்டப்பள்ளத்தை மையமாகக் கொண்டு நிந்தவூர் பற்று வன்னிமையான சிங்காரபுரி வன்னிமை ஆட்சி நிலவியது. சிங்காரபுரித் தோட்டத்தில் இருந்து அந்தக்காலத்தில் அட்டப்பள்ளம் தொடக்கம் காரைதீவு வரையான பிரதேசத்தை பூபால கோத்திரத்து வன்னிமை பரிபாலனம் செய்துவந்தான். அதனை சிங்காரத் தோப்பு எனக்கூறுவர். அங்கிருந்து வன்னிமை யானை மீதேறி அப்பிரதேசமெங்கும் வலம்வருவது வழமை. ஒரு தடவை காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு யானையில் வந்து வணங்கியபோது இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கண்பார்வையை இழந்த தனது மனைவிக்கு அம்மனின் அருளால் கண்பார்வை கிடைத்தமைக்காக காணி வழங்கிய நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.

அதனை கண்கண்டவெளி என்று பெயரிட்டனர். அது கண்கண்வெளி என மருவிற்று. சிங்காரபுரி வன்னிமை இந்த மடத்தடி எனும் இடத்தில் ஆலயமொன்றை அமைத்து அருகில் தீர்த்தக்கேணியையும் அமைத்து வழிபட்டுவந்தான் . அதே சூழலில் அவனது மாளிகை அமைந்திருந்த காரணத்தினால் அருகே பாதுகாப்பிற்காக செங்கண்படை ஒன்றையும் வைத்திருந்தான். அவனது மாடுகள் பட்டிபட்டியாக அந்தச் சூழலில் வளர்க்கப்பட்டன. இவை தான் இன்று இவ்வாறு மருவி அழைக்கப்படுகின்றன.

பிற்காலத்தில் 'காளி ஓடை' என்பது 'களியோடை' என்றும் 'செங்கண்படை' என்பது 'செங்கற்படை' என்றும் சிங்காரபுரித்தோட்டம் என்பது தோப்புக்கண்டம் என்றும் வன்னிமையின் மாடுகள் வளர்க்கப்பட்ட இடம் மாட்டுப்பளை என்றும் தற்போது அழைக்கப்படுகிறது. இவ்வாலயமானது போத்துக்கீசர் ஆட்சிக்காலத்தின் பிற்கூற்றில் புளியந்தீவிலிருந்து வந்த படைகளினால் சேதமாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்கள் போத்துகீசரால் சேதமாக்கப்பட்டமை தெரிந்ததே . அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயத்தின் எச்சசொச்சங்களை, சிதைவுகளை இன்றும் புதிய ஆலயத்தின் மேற்கே காணலாம். சிதைவுக்குள்ளான நீர்க்கேணியையும் காணலாம்.

இங்கு ஆலயத்தைச் சூழ பாம்புப்புற்றுகள் நிறையவுள்ளன. அதாவது இங்கு அம்மன் வழிபாட்டிற்கு மேலதிகமாக நாகவழிபாடும் நிலவுகிறது. வெள்ளி பௌர்ணமி மற்றும் விசேட தினங்களில் இங்கு கதவு திறந்து அம்மனுக்கு பொங்கல் செய்வது வழக்கம். அந்நாட்களில் இங்கு 1000க்கு மேற்பட்ட பக்தர்கள் ஒன்றுகூடுவர். பூரணையன்று அங்கு கண்டெடுக்கப்பட்ட பிரதிஸ்டை செய்த சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூச்சொரிந்து வழிபடுவர்.

ஆரம்பத்தில் இது தனியார் ஆலயமாகவிருந்தது. அதாவது ஒரு குடும்பத்திற்குரிய சொந்த ஆலயமாக இருந்தது. 1985களில் இவ்வாலயம் பதியப்பட்டிருந்தது. தம்பிமுத்து என்பவரின் சொந்தப்பராமரிப்பிலே இயங்கி வந்தது. பிற்பட்ட 1990களில் தம்பிமுத்து என்பவரின் ஏகபுதல்வரான விநாயகமூர்த்தி அவர்கள் தொடர்ந்து தன்னந்தனியாக அவ்வாலயத்தை பராமரித்துவந்தார். இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தின் தாய்த்தமிழ்க் கிராமமாக வித்தகன் பிறந்த காரைதீவு மண்ணில் இருந்து விநாயகமூர்த்தி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது.

பல இளைஞர்களும் சிரமதானம் செய்து கை கொடுத்ததுடன் புதிதாக நிருவாக சபை அமைப்பதற்கும் பொதுக்கோயிலாக மாற்றுவதற்கும் வழி சமைக்கப்பட்டது. 1996களிலிருந்து இவ்வாலயம் காரைதீவை மையமாகக் கொண்டு பலகிராமங்களின் பல பிரமுகர்களைக் கொண்ட நிருவாகசபையினரால் பொதுக் கோயிலாக நிருவகிக்கப்பட்டு வந்தது.

காரைதீவைச் சேர்ந்த திரு. விநாயகமூர்த்தி என்பவர் பலவருடகாலம் பலரது உதவியையும் பெற்று பரிபாலனம் செய்து வந்தார். 1999இல் விநாயகமூர்த்தி அவர்கள் இறைபதமடைந்தார்கள். அதன் பிற்பாடு தம்பிலுவிலைச் சேர்ந்த அதிபர் வ.ஜெயந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்டு பரிபாலனச பையொன்று அமைக்கப்பட்டு இயங்கிவந்தது. இவரது காலத்தில் அதாவது 2012களில் தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கிலங்கையின் இந்து குருமார் சங்கத்தலைவரான சிவஸ்ரீ நீதி நாதக்குருக்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு பூப்போட்டுப்பார்த்து புதிய அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் முதலாவது அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்து வைத்தார். கருவறைக்குரிய அடித்தளம் இடப்பட்டது. அத்தோடு நிர்மாணப்பணி பல்வேறு சூழ்நிலைகளால் ஸ்தம்பிதமானது.

இடைக்காலத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த திரு.வினோஜன் என்பவர் தலைவராக இயங்கினார். அதன் பின்பு காரைதீவைச் சேர்ந்த திரு.கோ. கமலநாதன் தலைமையிலான பல ஊர்களையும் சேர்ந்த நிருவாக சபையினர் தெரிவாகி ஆலய நிர்மாணப்பணி முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று. திருக்கோவில். ஆலயடிவேம்பு, காரைதீவு போன்ற கிராமங்களின் பரோபகாரிகளின் பெரும்பங்களிப்பினால் புதிய ஆலயம் ஒருவாறாக அமைக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான கும்பாபிஷேகம் கடந்த 6வருடகாலமாக தடைப்பட்டு வந்தது. இதன் முதலாவது கும்பாபிஷேகமாக 2022ம் ஆண்டு இடம்பெற்றது.