நிறுவனம்:அம்/ தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்
Name | தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | தம்பிலுவில் |
Address | தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம், அம்பாறை |
Telephone | - |
- | |
Website | - |
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயமானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான தம்பிலுவில் ஆலயம், ஈழத்தின் பழைமைவாய்ந்த கண்ணகி ஆலயங்களில் ஒன்றாகவும் கணிக்கப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த இலங்கைத்துறை எனும் துறைமுகத்தினூடாக பாண்டிய நாட்டின் மதுரையிலிருந்து மூன்று அம்மன் விக்கிரகங்கள் கொண்டு வரப்பட்டது.
அவற்றில் ஒன்று இலங்கை துறையிலும், மற்றையது சம்பூரிலும் ஆலயங்கள் அமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டதாகவும் மற்ற அம்மன் சிலையானது தம்பிலுவில் கிராமத்தில் கோயில் கொண்டிருப்பதாகவும் வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றது. கி. பி 2ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட “செம்பகநாச்சி” என்ற கண்ணகி சிலை தம்பிலுவிலைச் சேர்ந்த ஊரக்கைவெளி என்னும் இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டது.
அக்காலத்தில் இவ்வாலயம் அமைந்த இடமானது காடாக இருந்தது. ஒரு சமயம் அங்கு வேட்டைக்கு செனற் குழுவினர் ஒரு பெண் புறா வந்ததையும் அவை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கண்ணகை என்று கூறிச் சற்று இருந்துவிட்டு திடீரென ஓர் இடத்தில் சென்று மறைந்ததை கண்டு அவ்விடத்தில் கொத்துப் பந்தல் அமைத்து கண்ணகியம்மன் என்று வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் கோயிலில் தொண்டு செய்தார்களே தவிர முறையான பூஜைகளை செய்ய முடியாமல் திண்டாடினர். இவ்வேளையில் வந்திறங்கிய அன்னப்புறவர், ஈச்சம்வத்தையார் எனும் இரு வம்சத்தினரும் கோயில் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கேரளப்பாணியில் அமைந்த ஓட்டு மடாலயமாகவே இவ்வாலயம் அமைந்து விளங்குகின்றது. பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் ஆகியோருக்கு மூன்று பரிவார சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்தின் முதலாம் வீதியைச் சுற்றி, அட்டதிக்குப் பாலகருக்கான எட்டு பலிபீடங்கள் அமைந்துள்ளன. வடக்கு கிழக்கு வாயிலுடன் சுற்றுமதிலும் அமைந்துள்ளது. கிழக்கு வாயில் இருந்து வடக்கு வாயில் வழியாகவே அம்மன் பவனி வருவதுண்டு. கிழக்கு வாயில் வழியில் நோய் தீர்க்கும் தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. தீர்த்தக்கிணற்றுக்கு எதிரே விநாயகர் ஆலயமானது சேகரம், கும்பம், கற்பக்கிரகம், மண்டபம் என்பவற்றுடன் காட்சியளிக்கிறது. இவ்வாறு உட்பிரகாரத்தினுள் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், வெளி மண்டபம் என்பவற்றோடு கண்ணகியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் கொத்துப்பந்தலில் அமைந்திருந்த கர்ப்பக்கரகம் சிறு குடிசையாக மாறி காலப்போக்கில் கற்கோயிலாக மாற்றமடைந்தது. பின்பு இவ்வாலயமானது ஆலய நிர்வாகத்தினராலும், மக்களின் நன்கொடையினாலும் புனரமைக்கப்பட்டது.
ஆலயத்தை சுற்றி ஆல், வம்மி, தென்னை, போன்ற மரங்கள் நிறைந்து குளிர்ச்சி அளிக்கின்றன. இவ்வாலயமானது ஒரு பாடல் பெற்ற தலமாகும். அதன்படி அக்காலத்தில் ஊரக்கைவெளி என்பது இவ்வூர் மக்களின்பூர்வீக சொத்தாகும். ஒருமுறை மழையில்லாமல் வரட்சி நிலவிய காலத்தில் இவ்வூரை சேர்ந்த கண்ணப்பர் என்பவரினால் மழைக்காவியம் பாட மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய சடங்குமுறை கட்டமைப்பு கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தமிழகத்தில் பழந்தமிழர்கள் இடையே நிலவி வந்த கண்ணகியம்மன் ஆலய சடங்கு முறைகளை ஆராயும் போது ஆரம்ப காலத்தில் கண்ணகை அம்மன் ஆலயங்கள் மடங்களாக விளங்கி வந்தமையால் பூசைகளும் வழிபாட்டுமுறைகளும் முழுக்க முழுக்க பத்ததி அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பத்தாசி என்றும் கூறுவர். கட்டாடி அல்லது கப்புகனார் என்று குறிப்பிடப்படும் பூசாரி பூஜைகளை நடத்தி வந்தார். இவர் கி.பி 17 ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்து அம்மன் விக்கிரகங்களை கொண்டு வந்தவர்களின் சந்ததியினராவர். இன்று மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலயங்களில் இத்தகைய பூசாரிமாரே பணியாற்றி வருகின்றனர். மடை, படையல் ஆகிய பூசையில் கல்யாணக்கால் நடுதல் போன்ற சடங்குகள் இடம்பெறுவதும் மரபாகும்.
ஆலய நிர்வாகம், மட்டக்களப்பு நாட்டின் பூர்வீக வழக்கமான குடிவழி வண்ணக்கர் பாரம்பரியத்தின் படி இடம்பெறுகிறது. தம்பிலுவில் வேளாளரும் விஸ்வப்பிரம குலத்தினரும் குருக்கள் குலத்தாரும் (வீரசைவ சங்கமர்) கோவில் பரிபாலனத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள். வண்ணக்கர் எனும் தலைமைப் பதவி கட்டப்பத்தன் குடி வேளாளருக்கு உரியது. சமீப காலமாக சிங்களக் குடியிலிருந்து தலைவரையும், வேடக்குடியிலிருந்து செயலாளரையும் கோரைக்களப்புக் குடியிலிருந்து பொருளாளரையும் தெரிவுசெய்து வழக்கமான நிர்வாகமும் இடம்பெற்று வருகிறது. அறுபது முன்னங்கைச் சவடிக்குடியினர், விஸ்வப்பிரம குலத்தினர், குருக்கள் குலத்தின் ஒரு தத்தியினர் ஆகியோர் நிர்வாகத்தில் பங்குவகிக்கும் ஏனைய குடிகளும் குலங்களும் ஆவர். ஏனைய வேளாளக்குடிகளும் முக்குவரும் முன்பு வடசேரிக் கோவிலை நிருவகித்து வந்தனர்.
இக்கோயிலின் சிறப்பம்சமாக விளங்குவது இவ்வாலயத்தில் வருடாவருடம் வைகாசிப் பூரணையையொட்டி நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கும் திருக்குளிர்த்தியுமாகும். இவ்வாலயத்தில் வருடாந்த உற்சவமானது வைகாசிப் பௌர்ணமியை ஒட்டி வரும் ஏழு நாட்களை அண்டிய ஒரு செவ்வாய்க் கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசைகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடைபெறும். ஆறாவது நாள் அம்மன் ஊர்வலமும் ஏழாவது நாள் பொங்கலும் குளிர்த்தியும் நடைபெற்று திங்கள் இரவு கதவு அடைத்தலுடன் உற்சவம் நிறைவுபெறும்.