நிறுவனம்:அம்/ தம்பிலுவில் களுதாவளை ஶ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயம்

From நூலகம்
Name தம்பிலுவில் களுதாவளை ஶ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place தம்பிலுவில்
Address தம்பிலுவில் களுதாவளை ஶ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயம், அம்பாறை
Telephone -
Email -
Website -


தம்பிலுவில் களுதாவளை ஶ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயமானது அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் கிராமத்தின் தெற்காக உள்ள கண்டங்குடா என்ற பெருவெளியை அண்டியதான மணல்மேட்டில் அமைந்துள்ளது. இதன் பிரதான பாதையூடே பயணம் செய்வோர் தமது பிரயாண நலனுக்காக விக்கினேஸ்வரப் பெருமானை மன்றாடித் தட்சணையும் உண்டியலில் இட்டுச் செல்லும் நடைமுறை மிகவும் பக்தி பூர்வமான நம்பிக்கையாகும்.

1931ம் ஆண்டு காலப்பகுதியில் ஓர் நாள்… அப்போது அந்த முகத்துவாரத் தாம்போதி கட்டுமாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு பொறியியலாளராகச் சேவை ஆற்றிக் கொண்டிருந்தவர் ஒரு இந்தியர். இவரது பிள்ளை ஒன்று வாய்பேச முடியாதபடி பிறப்பிலே ஊமையாகும். பேசாத பிள்ளையை பேச வைப்பான் களுதாவளையான் என அந்த வேலைத்தளத்தில் தொழில் புரிந்த களுதாவளைக் கிராமத்தவர் சிலர் பேசக் கேட்ட அந்த பொறியியலாளரும், களுதாவளைக்குப் போய் அந்த ஆலயத்தில் பிள்ளையாருக்குப் பெரும் பூசை பொங்கலிடுவதற்காக ஒரு நேர்த்தி வைத்தார்.

பொறியியலாளரின் நேர்த்தி களுதாவளையில் உறைந்துள்ள பிள்ளையாரின் திருவருளால் நிறைவேறி அந்த பிள்ளைக்கும் பேசும் திறன் உண்டாயிற்று. தன் வேண்டுதலை நிறைவேற்றிவைத்த களுதாவளையானுக்கும் பெரும் பொங்கல் பூசை நடாத்த அந்த பொறியியலாளர் நாள் குறித்து பழவகை முதலான பொருட்களைச் சேகரித்தார். ஆனால் இறை சித்தம் வேறு விதமாக இருந்தது. குறித்த நாளுக்கு முன் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களது போக்குவரத்தும் தடைப்பட்டது.

இதனால் மனமுடைந்த அந்தப் பொறியியலாளர் கவலையுடன் தூங்கப் போனார். அப்போது அவரது கனவில் ஒருவர் தோன்றி கவலைப்படாதே அந்த மரத்தடியில் ஒரு கல்லை நீர்ப்படை செய்து வைத்துப் பூசை புரிந்து பொங்கலிடு நான் உள்ளேன்…, என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த பொறியியலாளர் உளம் பூரித்து மற்றவர்களிடம் கூறினார். பின்னர் அந்தக் கடலோரம் உடைந்து கிடந்த பெரியகல்லைச் செப்பனிட்டு சமுத்திரத்தில் நீர்படை செய்து இந்த ஆலயம் அமைந்துள்ள நிலத்திற்கு சற்றுத் தெற்குப் பக்கம் ஒரு துவரை மர நிழலில் வைத்துப் பொங்கலிட்டு பூசை செய்தார்.

இந்த வேலைத்தளத்தில் களுதாவளை மக்கள் அநேகமானோர் வேலைசெய்ததனாலும் களுதாவளை பிள்ளையார் நேர்த்தி நிறைவேற்றிய இடம் என்பதனாலும் இந்த இடம் அன்றிலிருந்து களுதாவளைப் பிள்ளையார் என வழங்கலாயிற்று. பின்பு மேற்படி இடத்தில் பிள்ளையாருக்கு ஓர் ஆலயம் அமைக்கப் பிரதேசப் பொதுமக்கள் முயன்றனர். அது நிறைவேறாமற் போயிற்று. தென் இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் நாலுகால் தாலுக்காலைச் சேர்ந்த முதுமொந்தன் மொழி சுயம்பு நாராயணன் என்பவர் இதற்கு சாதாரண ஆலயம் அமைத்து 26.06.1971 அன்று குடமுழுக்கு செய்து சில வருடங்கள் பராமரித்து வந்தார். அன்றிலிருந்து ஆனி உத்தரம் தோறும் ஆண்டு தீர்த்த உற்சவம் நடைபெற்று வருவது சிறப்பாகும். பின்பு அந்த நாராயணன் தனது தாய்நாடு செல்லும் போது மேற்படி ஆலயப் பராமரிப்பினை விஸ்வகுலத்தினைச் சேர்ந்த திரு.சோ. பாலசுந்தரம் ஆச்சாரியிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

தொடர்ந்து கிராம மக்களின் பங்களிப்புடன் சில காலம் ஆலயத்தைப் பராமரித்து வந்தார். 2014ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது அந்த ஆலயம் சேதமாயிற்று. அதன் பின் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஶ்ரீ சிவலிங்கப் பிள்ளையார் ஆலயம் எனும் பெயரில் மிகவும் பக்திபூர்வமாக பூசை புணர்க்காரங்களுடன் நடந்தேறி வருகின்றது.