நிறுவனம்:அம்/ தம்பட்டை ஆறுமுக சுவாமி கோயில்

From நூலகம்
Name அம்/ தம்பட்டை ஆறுமுக சுவாமி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place தம்பட்டை
Address தம்பட்டை, அம்பாறை
Telephone
Email
Website


தம்பட்டை ஶ்ரீ ஆறுமுக சுவாமி கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தம்பட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 150 வருடகாலத்திற்கு முன்னர் தற்போதைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பனங்காடு எனும் கிராமத்தின் அண்மையில் பாமங்கை என்னும் இடம் அமைந்திருந்தது. அக்காலப்பகுதியில் அங்கு மரக்கறி மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை செய்பவர்களே வாழ்ந்து வந்தனர்.


ஒருநாள் அங்குள்ள விவசாயி ஒருவரின் மகள் தமது தோட்டத்தில் தண்ணீருக்காக துரவு வெட்டிக்கொண்டிருக்கும் போது கணீர் என்ற ஓசை எழுந்தது. வியப்படைந்த அந்தச் சிறுமி மேலும் துரவினை தோண்டியவுடன் ஒரு விக்கிரகம் தென்பட்டது. அப்போது மெதுமெதுவாகத் தோண்டி விக்கிரகத்தினை மண்ணிற்கு வெளியே எடுத்த போது ஆறுமுகங்களுடன் கூடிய முருகப் பெருமானுடைய விக்கிரகம் காட்சியளித்தது.

தோண்டும் போது மண்வெட்டி பட்டதன் காரணமாக பெருமானுடைய ஒரு பக்கத்தோள் பகுதியில் இருந்து இரத்தம் கசிவதனைக் கண்ட அந்தச் சிறுமி விரைந்து சென்று தன் தந்தையாரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். தந்தையார் அங்கு சென்று அந்த அற்புதக் காட்சியினைக் கண்டு பயபக்தியுடன் விக்கிரகத்தினை எடுத்து மனமுருகித் தொழுது மன்றாடி பந்தல் ஒன்றினை அமைத்து அதனுள்ளே விக்கிரகத்தினை வைத்துவிட்டு செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார். விவாசாயி மனச் சஞ்சலத்துடனே பந்தலின் கீழே உறங்கிவிட்டார். அப்போது விவசாயினுடைய கனவில் முருகப் பெருமான் காட்சி கொடுத்து தன்னை தம்பட்டை எனும் இடத்தில் வைக்கும்படி ஆணையிட்டார். தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த விவசாயி தாம் கண்ட கனவினை எண்ணிக் கொண்டு அந்த அதிகாலை வேளையில் வண்டி கட்டிக்கொண்டு தம்பட்டை நோக்கிப் புறப்பட்டார். தம்பட்டையினை அடைந்ததும் அங்குள்ள ஆதிசைவப் பட்டர்களிடம் விக்கிரகத்தை ஒப்படைத்தார்.

பெருமானுடைய விக்கிரகத்தினைப் பெற்றுக்கொண்ட குருமார் அதற்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து கிடுகினால் ஒரு பந்தல் அமைத்து ஆறுமுகப் பெருமானை எழுந்தருளச் செய்தனர். தானாக விரும்பி வந்து தம்பட்டையில் உறைந்த ஶ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் திரு. சின்னத்தம்பி வைத்தியர் என்பவரால் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் நெடுங்காலமாக அலயத்திற்கான கும்பாபிஷேகம் இடம் பெறாமையினாலும், ஆலயத்தினை பெரிதாக அமைக்க ஊர்மக்கள் விரும்பியதாலும் அப்போதைய திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. வி. ஆர். வேதநாயகம் மற்றும் அப்போதைய தம்பட்டை அ.த.க. பாடசாலை ஆசிரியர் திரு. கணபதிப்பிள்ளை என்பவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ச்சியாக பலருடைய திருப்பணிகளால் ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் நிறைவு செய்யப்பெற்று 18.03.2012 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ச்சியான கிரம பூசைகளும் ஆண்டு அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றது.