நிறுவனம்:அம்/ காரைதீவு மாவடி ஶ்ரீ கந்தசுவாமி கோயில்

From நூலகம்
Name காரைதீவு மாவடி ஶ்ரீ கந்தசுவாமி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place காரைதீவு
Address காரைதீவு, அம்பாறை
Telephone -
Email -
Website -


காரைதீவு மாவடி ஶ்ரீ கந்தசுவாமி கோவிலானது கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம் காரைதீவில் அமைந்துள்ளது. நிந்தவூர்க் கிராமத்தின் எல்லைக்கு அண்மித்ததான பகுதி மாவடித் தோட்டமென அழைக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 1921 ஆம் ஆண்டளவில் இங்குள்ள ஒரு புளிய மரத்திலே ஒரு வேல் இருப்பதாகவும் ஒரு பக்தர் வழிபாடு செய்து வருவதாகவும் மற்றும் பல சித்துகள் நடைபெறுவதாகவும் மக்கள் கேள்வியுற்றனர். அதன் பின்னர் மக்கள் பலர் ஒன்று சேர்ந்து தற்காலிக ஆலயம் அமைத்து வழிப்பாடாற்றி வந்தனர்.

1925 ஆம் ஆண்டளவில் முறண்டப்போடி தம்பையாப்பிள்ளை ஓவசியர் அவர்களின் சொந்த செலவில் முதலாவது கல்லாலயம் அமைக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு காரைதீவு மகாசன சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இவ்வாலயத்தை காரைதீவு கிராமமே கையேற்று நடாத்தவேண்டுமென விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் ஆறு பேர் கொண்ட குழுவினை நிறுவி ஆலய பரிபாலனத்தை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்கப் பணித்தனர். அத்தோடு அறுபது பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களையும் நியமித்தனர்.

ஆலய கட்டுமாணம் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து பரந்து பட்ட இடத்தில் ஆலயம் விசாலமாகவும் மணிக்கூட்டு கோபுரத்தையும் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டது. இக் காலப்பகுதியிலே முதலாவது சம்புரோட்சண கும்பாபிஷேகம் நடைபெறலாயிற்று. அதன்பின்னர் 1978.05.26 அன்று புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் தினப்பூசைகள் கோயிற் பொறுப்பிலே நடாத்தப்பட்டு வருகின்றது.

மாதந்தோறும் வரும் கார்த்திகை விரதத்தன்று விசேட அபிஷேகம், பூசை, சுவாமி வீதிவலம் வருதல் என்பன நடாத்தப்படுகின்றன. இப்பூசைகளை வெவ்வேறு உபயகாரர்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றனர். ஆடித்திருவிழா கதிர்காம உற்சவத்துடன் வளர்பிறை பிரதமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். விசேட அபிஷேகம் நடைபெறுவதுடன் முருகப்பெருமானின் வீதி உலாவும் சிறப்புடன் நடைபெறும். தீர்த்தோற்சவத்துக்கு முன் இரவில் சப்பற ஊர்வலம் நிகழும். இதனை இந்து வாலிபர் சங்கம் பொறுப்பேற்று நடாத்துகின்றனர். 16 ஆம் நாள் சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நிகழும். கந்தசஷ்டி விரதப் பூசைகளில் விரதகாரர்களால் ஒரு பூசையும் அன்னதானமும் நடாத்தப்படுவதுடன் இறுதிநாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. திருவெம்பாவை பத்து நாட்களும் விசேட அபிஷேக பூசைகள் நடைபெறும். அத்தோடு சித்திரா பூரணை, தைப்பூசம், மாசிமகம், நவக்கிரக பூசை என்பனவும் இடம்பெறுகின்றன.