நிறுவனம்:அம்/ கல்முனை ஶ்ரீ முருகன் கோயில்

From நூலகம்
Name கல்முனை ஶ்ரீ முருகன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை ஶ்ரீ முருகன் கோயில், அம்பாறை
Telephone -
Email -
Website -


கல்முனை ஶ்ரீ முருகன் தேவஸ்தானமானது அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் ஆர்.கே.எம் வீதியில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததெனக் கருதப்படும் இவ்வாலயம் ஆரம்பகாலத்தில் நாவல் மரக் காடுகளுக்கு மத்தியில் தாமரையும் அல்லியும் நிறைந்து காணப்பட்ட சந்தாங்கேணி தடாகக் கரையில் தோற்றம் பெற்றுள்ளது.

அக்காலத்தில் வருடா வருடம் பக்தர்களுடன் கால்நடையாக கதிர்காமத்திற்கு யாத்திரை செய்து வந்த ஆறுமுகத்தான் போடி என்னும் பெரியார் ஒருநாள் பயணத்தை மேற்கொள்ளும் போது வழியில் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். இனிவரும் காலங்களில் தனது முதுமை காரணமாக யாத்திரையை இனி தொடரமுடியாமல் போகும் என கவலையுற்றார்.

அவரது பக்தியையும் கவலையும் அறிந்த முருகப்பெருமானே அவரது கவலையை தீர்க்க திருவுளங்கொண்டார். அவரது பாதயாத்திரையின் போது இடைவழியில் கனவில் தோன்றிய முருகப்பெருமான் நீ என்னைத் தேடி கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளாமல் உடனடியாக உனது ஊருக்கு திரும்பச் சென்று உனது குல தெய்வமாகிய கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சமீபமாக இன்னுமொரு கோவில் கட்டி என்னை வழிபட்டால் கதிர்காமத்திற்கு வந்து வழிபட்ட பயன் கிடைக்கும் என அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தான் போடி தனது யாத்திரையை இடைநிறுத்தி ஊர் திரும்பினார். பின்னர் ஊர் மக்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் புற்று மண்ணால் ஒரு ஆலயம் அமைத்து அதில் ஒரு ‘வேலை’ யும் வைத்து வழிபட்டு வந்தார். இதனால் இவ்வாலயம் வேல் கோயிலென மக்களிடையே பிரசித்தி பெற்றது. சில வருடங்களின் பின் புற்று மண்ணால் அமைக்கப்பட்ட சுவர்கள் சிதைவுற்றுப் போக அதனைக் கற்களால் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாலயம் செங்கற்களைக் கொண்டு ஆகம விதிப்படி ஆறு மண்டபங்கள் கொண்ட மடாலயமாக புனரமைப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்ட இவ்வாலயத்தின் குடமுழுக்கு 1945ல் வெகுவிமர்சையாக நடந்தேறியது. இதன் பின்னர் வருடாந்த உற்சவங்களும், விசேட பூசைகளும் ஒழுங்காக நடைபெற்று வந்ததன. பக்தர்கள் விசேட காலங்களில் விரதமிருந்து வழிபட்டு செல்வார்கள்.

1978 சூறாவளியால் ஆலயம் சிறு சேதத்திற்குள்ளாகியது. இருந்தும் பூசைகளை அது பாதிக்கவில்லை. நீண்ட காலத்திற்குப் பின்னர் 2004ல் இவ்வாலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பரிபால மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2013ல் ஆலயத்திற்கென விஷேடமாக அமைக்கப்பட்ட அறுகோணத்தேரில் வருடாந்த உற்சவத்தின் போது ஆறுமுகப்பெருமான் நகர் உலா வருவார்.

வருடாந்த மகோற்சவத்தில் ஆவணி அமாவாசையின் போது முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறுவதனால் அதற்கு முந்தய பன்னிரு நாட்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் 6ஆம் நாள் பாற்குட பவனியும், 8ஆம் நாள் வெட்டைத் திருவிழாவும், 10ஆம் நாள் சப்பறத் திருவிழாவும், 12ம் நாள் தேரோட்டமும், 13ஆம் நாள் தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும், 14ஆம் நாள் சங்காபிஷேகமும், 15ஆம் நாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.