நிறுவனம்:அம்/ கல்முனை ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்

From நூலகம்
Name கல்முனை ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயம், கல்முனை அம்பாறை
Telephone -
Email -
Website -


கல்முனை ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயமானது அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் கல்முனை 02 இல் அமைந்துள்ளது. இது இற்றைக்கு 170 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இப் பிரதேச மக்களின் வழிபாட்டிற்கு கிட்டிய தூரத்தில் ஒரு ஆலயம் இல்லை எனும் குறைபாட்டை போக்குவதற்காக கல்முனையைச் சேர்ந்த கார்த்திகேசு கதிரமலை என்பவர் தனது சொந்தக் காணியில் சிறியதொரு ஆலயமாக இதனை அமைத்து ஊர்மக்களுடன் இதனை வழிபட்டு வந்தார்.

பின்னர் அவர் தனது முதுமை காரணமாக 1888ல் இவ்வாலயத்தை சட்ட ரீதியாக ஊர் மக்களுக்கு கையளித்தார். இவ்வாறு ஊர் மக்களுக்குக் கையளிக்கப்பட்ட ஆலயம் சிறிய காணியில் அமைந்திருந்தமையால் அதனைச் சுற்றி இருந்த காணிகள் சட்டரீதியாக விஸ்தரிக்கப்பட்டு அவை ஆலயத்திற்குச் சொந்தமாக்கப்பட்டன. இதன் பின்னர் திருப்பணி வேலைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

கார்த்திகேசு கதிரமலை அவர்களின் மறைவுக்கு பின்னர் அவரது பேரன் வேலுப்பிள்ளை கதிரமலை என்பவர் ஆலய நிர்வாகத்திற்கு தலைமை தாங்கி ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு நிரந்தக் கட்டிடத்தை ஆகம விதிப்படி அமைத்ததுடன் திருவிழா உபயகாரர்களையும் நிருவாகத்தையும் ஒழுங்காக்கினார். இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி 1947ம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெற்றது.

காலத்திற்கு காலம் சிறிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் ஆலயத்தின் வருடாந்த உற்சவங்களும் பூசைகளும் ஒழுங்காகவே நடைபெற்று வந்தன. 1978ல் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஆலயம் சிறு சேதத்துக்குள்ளாகியது. அவை சீர் செய்யப்பட்டு மூல மூர்த்திக்குரிய பூசைகள் அனைத்தும் ஒழுங்காகவே நடைபெற்றன. 1947 இற்கு பின்னர் 1981ம் ஆண்டு மூலமூர்த்தி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் பாரிய அளவில் செய்யப்பட்டன.

மாமாங்கப்பிள்ளையாரை மூலமூர்த்தியாக எழுந்தருளச் செய்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாகதம்பிரான், வயிரவர் முதலிய பரிவார மூர்த்திகளுக்கும் வெகுசிறப்பாகச் செய்யப்பட்ட மஹா கும்பாபிஷேகம் 1981ம் ஆண்டு ஆடி மாதம் 8ம் திகதி நடைபெற்றது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இவ்வாலயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மூல மூர்த்தி அமைந்திருந்த மூலஸ்தானம் உட்பட அனைத்து மண்டபங்களும் சுனாமி அலையில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனாலும் இவற்றால் மனம் தளராத மக்கள் ஆலயப் புனரமைப்பிற்கென ஒரு குழுவை அமைத்து மீண்டும் அதனை அழகுற நிர்மாணித்தனர். இதன் கும்பாபிஷேக நிகழ்வு 2009 இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மூலமூர்த்தி மாமாங்கப்பிள்ளையாருக்கு வருடந்தோறூம் ஆடி மாதத்தில் உற்சவம் நடைபெறும். முன்னருள்ள பத்து நாட்களும் வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடைபெற்று அமாவாசை தினத்தன்று சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறும். இதன் பின்னர் வயிரவர் பூசைகளுடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.