நிறுவனம்:அம்/ கல்முனை மெதடிஸ்த திருச்சபை

From நூலகம்
Name கல்முனை மெதடிஸ்த திருச்சபை
Category கிறிஸ்தவ ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை மெதடிஸ்த திருச்சபை,கல்முனை, அம்பாறை
Telephone -
Email -
Website -


கல்முனை மெதடிஸ்த ஆலயமானது கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் அருட்திரு. ஜோன் உவெஸ்லி ஆவார். இவர் 1752இல் இங்கிலாந்து திருச்சபைக் குருவாக இவர் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயிரக்கணக்கான மைல்களை கால்நடையாகவும், குதிரை மூலமும் பயணம் செய்து ஆன்மீக பணி செய்ததன் விளைவாகவே மெதடிஸ்த திருச்சபை உருவானது. மெதடிஸ்ற் என்பதன் அர்த்தம் ஒழுங்கை கடைப்பிடிப்பவர்கள் என்பதாகும்.

அருட்திரு. ஜோன் உவெஸ்லி அவர்களும் அவரது தம்பி அருட்திரு. சாள்ஸ் உவெஸ்லி அவர்கள் தனது பாடல்களாலும் பல்வேறு நாடுகளில் ஆன்மீகப் பணிபுரிந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ஆன்மீகப் பணி புரிய 66 வயது நிரம்பிய அருட்கலாநிதி தோமஸ் குக் முன் வந்தார். இவருடன் அருட்திரு. வில்லியம் ஓல்ட் அவர்களும் மனைவியும் சில இளைஞர்களும் கடல் பயணத்தை தொடங்கினர். கடல் பயணத்தின் போது தனது முதுமை காரணமாக அருட்கலாநிதி தோமஸ் குக் அவர்கள் உயிர் நீத்தார்.

அதன் பின்னர் அருட்திரு. வில்லியம் ஓல்ட் அவர்களின் மனைவியும் மரணமடைந்தார். இவ்விருவரது அடக்கமும் இந்து மகா சமுத்திரத்திலேயே நடைபெற்றது. எஞ்சியவர்களில் அருட்திரு. வில்லியம் ஓல்ட் அவர்களும் சில இளைஞர்களும் காலி துறைமுகத்தின் வெலிகம கடற்கரையை வந்தடைந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்தவாறே அவர்கள் தங்கள் பணிகளை கல்முனை வரை விஸ்தரித்தனர். அருட்திரு. வில்லியம் ஓல்ட் அவர்கள் 8 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த நிலையில் கடுங்காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிர் நீத்தார்.

இந்நிலையில் 1847ல் இலங்கையைச் சேர்ந்த அருட்திரு. ஜோன் சண்முகம் பிலிப் என்பவரது தலைமையில் முதல் முதலில் கல்முனையில் சபையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. 1882இல் பணிபுரிந்த அருட்திரு. G.J. Trimmer அவர்களின் காலத்திலேயே கல்முனையில் மெதடிஸ்த ஆலயம் அமைக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே கல்முனை மெதடிஸ்த திருச்சபை தனது பணிகளை விஸ்தரித்ததுடன் இப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காகவும் உழைக்கத் தொடங்கிற்று. அப்பணிகள் இன்று வரை தொடர்வது குறிப்பிடத்தக்கதாகும்.