நிறுவனம்:அம்/ கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

From நூலகம்
Name தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
Category கிறிஸ்தவ ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை, அம்பாறை
Telephone -
Email -
Website -


அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1975ம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் மத்தியில் இப்பிரதேசத்தில் அன்னைக்கு ஒரு ஆலயம் இல்லையெனும் குறைபாடு உணரப்பட்டது. புதிய ஆலயமொன்றை அமைப்பதில் எதிர் நோக்கவேண்டிய சவால்களுக்கு அஞ்சி நீண்டகாலமாக இம்முயற்சி பேச்சளவிலேயே இருந்து வந்துள்ளது.

கல்முனை உடையார் வீதியில் வசித்த முத்துலிங்கம் ஞானப்பிரகாசம் அவர்களும் அவருடைய துணைவியார் பொன்னம்மா அமலோற்பவம் அவர்களும் இவ்வாலயத்தை அமைப்பதற்கு தமது சொந்தக் காணியை நன்கொடையாக 1978ம் ஆண்டு உடையார் வீதியில் உள்ள 80பேர்ச் அளவிலான காணியை திருச்சபைக்கு வழங்கினர். அருட்தந்தை றாகல் அடிகளாரின் விடா முயற்சியால் அவ்விடத்தில் ஓலைக் குடிசையொன்று அமைக்கப்பட்டது.

இவ்வேளையில் பொன்னம்மா அமலோற்பவம் இந்தியாவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலிருந்து மாதாவின் சிறிய அளவிலான சொரூபமொன்றைக் கொண்டு வந்தார். அச்சொரூபம் ஓலைக்குடிசையில் வைக்கப்பட்டு வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ்வேளையில் ஏனைய மக்களும் இன மத வேறுபாடின்றி ஆலயத்திற்கு கல்லினால் நிரந்தர கட்டிடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு 1980இல் அதனைப் பூர்த்தி செய்தனர்.அதே ஆண்டில் முதலாவது திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இங்கு பூசையானது ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற பூசையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களும் கலந்து கொள்வர். கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய 45வது வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெற்று 9வது நாள் நவநாள் இரவு அன்னையின் சொரூப ஊர்வலம் கல்முனையின் பிரதான வீதிகளில் நடைபெற்று 10வது நாள் திருப்பலியுடன் நிறைவுபெறும்.