நிறுவனம்:அம்/ கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்

From நூலகம்
Name கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்
Category முஸ்லிம் ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல், கல்முனை
Telephone -
Email -
Website -


கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் ஆனது அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரைக்கு அண்மித்ததாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதைவிட அப்பிரதேசங்களில் ஏதாவது ஒரு பிரதான வரலாற்றுச் சான்றும் காணப்படும். இவ்வாறுதான் கல்முனை மாநகரத்திற்கு அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களுக்கும் மிக நீண்ட சுவாரசியமான வரலாறு நிறைந்து காணப்படுகின்றது. கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் கல்முனை மாநகர மக்கள் பெற்ற ஒரு வரலாற்றுச் சான்றாகும்.

கல்முனை மாநகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதனால் இதனை எல்லோரும் கடற்கரைப் பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். இப்பள்ளிவாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்புச் சேர்ப்பதுதான் இப்பள்ளிவாசலின் வருடா வருடம் நடத்தப்படும் கொடியேற்ற விழாவாகும். வருடா வருடம் ஜமாதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழாவானது சங்கை மிகு சாகுல்ஹமீது ஒலியுல்லாவின் வருடாந்த நினைவு வைபவமாகும்.

இந்நாளில் தான் இருளகற்றி ஒளியூட்ட வந்த நபி பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்களின் 23 வது தலைமுறையில் செய்யது ஹஸன் குத்தூஸ், செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபீயுளல் அவ்வல் மாதம் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மனிக்கபூர் எனும் ஊரில் பிறந்தவர்தான் சங்கைமிகு சாகுல்ஹமீது ஒலியுல்லா அவர்கள். தனது 8 வது வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தார். அதன்பின்பு தமது இளம் வயதில் இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகில் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார்.

இவர்களின் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது நாட்டிற்கும் வந்து தப்தர் ஜெய்லானி எனும் இடத்தை அடைந்தார். இலங்கையின் தென் பகுதிக் கரையை அவர் அடைந்தார். அவர் புனித ஸ்தலங்களில் ஒன்றாகிய நபி ஆதம் (அலை) அவர்களின் பாதம் பட்ட இடத்தினையும் தரிசித்துவிட்டு தொடர்ந்தும் கரையோரப் பகுதியாக தென் கிழக்கு நோக்கி வந்தார். அந்த சமயத்தில் கல்முனைக்குடியில் வசித்தவர்கள்தான் மர்ஹம் முகம்மது தம்பிலெப்பை. இவர்கள் மார்க்கத்திலும் கல்வி ஞானத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

உயர் பண்பு ஒழுக்க சீடராக வாழ்ந்து வந்த இவர், இக் காலப் பகுதியில் கடுமையாக நோய்வாய்ப்படுவார். கடும் நோயினால் அவஸ்தைப்பட்டு இவர் கடலில் நீராடவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் கல்முனைக்கூடி கடற்கரையோரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக் கடமையை செய்து வரத் தவறவில்லை. கால ஓட்டத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின்னர் அயர்ந்து தூங்கிவிட்ட முகம்மது தம்பிலெப்பை அவர்களின் கனவில் ஒருவாட்ட சாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிறத் தலைப்பாகையுடன் தோன்றி உமது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தின் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கிறேன்.

நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்கும் இடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மைப் பிடித்துள்ள நோயும் அகன்றுவிடும் என் பெயர் சாகுல் ஹமீத் என்று கூறி மறைந்துவிட்டார்கள். கண் விழித்துப் பார்த்த போது பொழுது புலர்ந்து இருந்தது. அவர்களின் உடலின் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனேயே இறைவனைப் புகழ்ந்தவர்களாய் குறிப்பிட்ட மண் குவியலைத்தேடி, கண்ணுற்று அருகிலிருந்த மரங்களை தறித்து கம்புகளை கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைத்தார்.

இச் சம்பவங்களை அன்றைய ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பொதுமக்களிடம் கூறினார். பொது மக்களும் அவ்விடத்து வந்து அடையாளப் பொருட்களை கண்ணுற்றதோடு அவர்களின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலைச் செப்பனிட்டு தர்ஹாவாக மாற்றினர். சாஹுல் ஹமீத் ஒலியுல்லா பெயரில் மெளலத்து ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவர்களின் பெயரில் அன்னதானமும் வழங்கினர்.

தொடர்ந்து மக்கள் இத்தர்ஹாவில் கூடத் தொடங்கினர். சங்கைமிகு சாஹுல் ஹமீத் ஒலியுல்லாஹ் அவர்களின் பெயரில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் கூடத் தொடங்கினர். இதனால் சங்கைமிகு சாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் வபாத்தானார்கள். ஜமாத்துல் ,கீர் மாதம் தலைப்பிறையுடன் இத் தர்ஹாவில் தொடர்ந்தும் பன்னிரண்டு நாட்கள் அவர்களின் பெயரில் மெளலத்து ஓதப்பட்டு பன்னிரண்டாம் நாள் மாபெரும் கந்தூரி அன்னதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் 3 அடுக்குகளைக் கொண்ட சிறிய மினராவும் கம்பீரமாக காட்சி தருகின்றன. இத்துடன் முற்றாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத்தர்ஹாவில் மேலும் மூன்று சிறிய மினராக்களும் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன. இவற்றிலேதான் வருடா வருடம் கொடியேற்றப்படுகின்றது. கல்முனைக் கடற்கரை எல்லையிலிருந்து 40 மீற்றர் எல்லையில் இருக்கும் அழகிய தர்ஹாவும் பெரிய சிறிய மினராக்களும் சென்ற 10 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி பேரலைகளினால் தாக்கப்பட்ட போதிலும் இத்தர்ஹாவுக்கும் மினராக்களுக்கும் எவ்வித சிறு சேதங்களும் இல்லாமல் கம்பீரமாக காட்சி தருவது பேராச்சரியமாகும்.