ஆளுமை:ஸோபா, ஜெயரஞ்சித்

From நூலகம்
Name ஸோபா, ஜெயரஞ்சித்
Pages சின்னத்தம்பி
Pages மங்களநாயகி
Birth 1974.09.02
Place வாழைச்சேனை
Category எழுத்தாளர், சமூகசேவையாளர், அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸோபா, ஜெயரஞ்சித் (1974.09.02) வாழைச்சேனையில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் மங்களநாயகி. தனது பாடசாலைக் கல்வியை வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றார். அதன் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்று பொதுக்கலைமாணி BA (Hons) பட்டம் பெற்றார். தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை கல்வி முகாமைத்துவ கற்கை நெறியினைப் பூர்த்தி செய்து பட்டப்பின் கல்வி பட்டய (டிப்ளோமா) பட்டத்தினைப் பெற்றார். அத்தோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின் தமிழ் பட்டயம் (டிப்ளோமா) பாடநெறியினைப் பூர்த்திசெய்து பட்டம் பெற்றுள்ளார். 1998ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமனம் பெற்று தனது கற்பித்தல் பணியினைத் தொடங்கிய இவர் தற்பொழுது கல்குடா வலயத்திற்குட்பட்ட கல்லூரிகளில் ஒன்றான பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் உப அதிபராகவும் விளங்குகிறார்.

கல்லூரிக் காலம் முதலே எழுத்திலக்கியத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் கல்லூரி மலரான செவ்வாழை இதழில் 1993இல் எழுதத் தொடங்கியவர். பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் வெளிவந்துள்ள இலக்கிய மலர்கள், சிறப்பு மலர்களில் பல படைப்புக்களை எழுதியுள்ளார். அவற்றுள் செவ்வாழை, தாழை, இளம்பரிதி, சைவநாதம் போன்ற சிறப்பு மலர்களில் வெளிவந்த இவரது படைப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

கோறளைப்பற்று பிரதேசத்தின் மரபு வழியான நாடகம், கூத்து, சோதிடம், வாய்மொழி இலக்கியங்கள் எனப் பலதரப்பட்ட துறைகளில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அவற்றுக்காக மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகின்ற பொழுது 2005ஆம் ஆண்டில் மகூலம் எனும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டார். பின்னர், பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் வெளியிடப்படும் தாழை எனும் கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்குகின்றார். பிரதேச மட்டத்தில் மேற்கொண்டு வருகின்ற கலை, இலக்கியப் பணிகளுக்காக கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 2019ஆம் ஆண்டு கலைஞர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நாட்டார் கலை கற்றல், இலக்கிய விவரணம், சிறந்த கட்டுரையாக்கம் போன்ற பிரிவுகளின் கீழ் தொடர்ந்து 04 வருடங்கள் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

கோறளைப்பற்றில் பாரம்பரியம் மிக்கதொரு சோதிடர் பரம்பரையில் கணபதிப்பிள்ளை அவர்களின் மரபுவழி வந்த ஸோபா அவர்கள் கலை, இலக்கியத் துறையில் கவிதை, கட்டுரை, திறனாய்வு, ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகள் எனப்பல்துறைப் படைப்பாளியாகத் திகழ்ந்து, கோறளைப்பற்று இந்து மகாசபை, கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவை, வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றம், கோறளைப்பற்று பாரதி மொழிச்சங்கம், பாரதி சமூக, கலை, இலக்கிய மேம்பாட்டுக் கழகம் போன்ற பல சமூக, சமய, கலை, இலக்கிய அமைப்புக்களில் செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எனப்பல பதவிகள் வகித்துப் பணிபுரிந்து வருகின்றார்.

இலக்கியத்துறை மாத்திரமல்லாது சமயத்துறை சார்ந்து சிறுவயது முதலே ஆன்மீகச்சொற்பொழிவுகளில் ஈடுபட்டு வருகின்ற இவர், அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற இளஞ்சைவப் புலவர் பரீட்சையில் முதலாம் வகுப்பிலும், சைவப் புலவர் பரீட்சையில் இரண்டாம் வகுப்பிலும் சித்திபெற்று இளஞ்சைவப் புலவர், சைவப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். அதன்பின்னர், புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்படுகின்ற இந்துதர்மாசிரியர் பரீட்சையில் சித்திபெற்று இந்து தர்மாசிரியர் பட்டம் பெற்றுள்ள இவர், தன்னிடம் பயில்கின்ற மாணவர்களை இளஞ்சைவப் புலவர் மற்றும் சைவப்புலவர், இந்து தர்மாசிரியர் பரீட்சைகளில் தோற்றச்செய்து, அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டுவதோடு மாவட்ட அளவில் சைவப் புலவர் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடைபெறுகின்ற விரிவுரை வகுப்புக்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

ஸோபா ஜெயரஞ்சித் சமயம், சமூகம், இலக்கியம் சார்ந்து கோறளைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பல அமைப்புக்களில் இளமைப்பருவம் முதல் பல்வேறு பதவிகளை வகித்து வருவதனைப் போன்று, அரசியல் துறையில் காலடி பதித்து, கடந்த 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, பிரதேச சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, கோறளைப்பற்று பிரதேச கௌரவ தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோறளைப்பற்றின் முதலாவது பெண் தவிசாளராகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது பெண் தவிசாளராகவும் விளங்குகின்றார். தவிசாளராகப் பதவியேற்ற காலம் முதல் 05க்கு மேற்பட்ட தேசியக் கட்சிகளின் 23 உறுப்பினர்களைக் கொண்டதும், 03 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டதாகவும் தமிழ், முஸ்லிம் எனும் இருவினப் பிரிவு மக்களைக் கொண்டதாகவும் விளங்கும் கோறளைப்பற்றின் தவிசாளராக கடமையேற்று, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார், கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொது நூலகத்துறை வளர்ச்சிக்கு பாரியளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றார். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடந்த வருடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, தற்பொழுது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்க அபாயச் சூழ்நிலைக் காலகட்டங்களில் தனது சபை உத்தியோகத்தர்கள், கட்சி உறுப்பினர்கள், தன்னிடம் பயின்ற மாணவர்கள் எனப் பல தரப்பினரின் உதவிகள், பங்களிப்புடன் நேரடியாகக் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றார்.

கோறளைப்பற்று பிரதேசத்தில் கல்வி, கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனப் பல்துறைகளில் சாதனை புரிந்துவரும் மிக முக்கியமானதொரு பெண் ஆளுமையாக விளங்கும் ஸோபா அவர்களின் கணவரான ஜெயரஞ்சித் அவர்களும் கோறளைப்பற்றின் புகழ்பூத்த ஆசிரியர்களில் ஒருவர். பல்வேறு கலை, இலக்கிய விருதுகளையும், கல்விசார் பட்டங்களையும் பெற்றுள்ள இவர்கள் இருவர் மட்டுமல்லாது இவர்களது குழந்தைகளான அம்றிதா, அத்விஹா இருவரும் கூட பேச்சுத்துறை மற்றும் கவிதை, கட்டுரை போன்ற கலைத்துறையிலும் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளைப் பெற்று ஒரு கலைக்குடும்பமாகத் திகழ்ந்து வருகின்றனர்.

விருதுகள் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 2019ஆம் ஆண்டு “கலைஞர் விருது“ வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்

குறிப்பு : மேற்படி பதிவு ஸோபா, ஜெயரஞ்சித் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.