ஆளுமை:ஜமுனாதேவி, பொன்னம்பலம்

From நூலகம்
Name ஜமுனாதேவி
Pages பொன்னம்பலம்
Pages இராசம்மா
Birth 1958.09.19
Place புங்குடுதீவு
Category சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜமுனாதேவி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் இராசம்மா. ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு பெருங்காடு அமெரிக்கமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை புங்குடுதீவு மகாவி்த்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ஜமுனாதேவி தனது 19ஆவது வயதில் சர்வோதய சிரமதானச் சங்கத்தில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் சர்வோதயத்தின் மாதர் சங்கத்தில் இணைந்து சரியைத் தொண்டாற்றினார். மகாத்மாகாந்தி முன்பள்ளியில் ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். 1977ஆம் ஆண்டு சர்வோதய நிதிப் பிரிவின் பொறுப்பை ஏற்று சர்வோதய இயக்கத்தின் ஜீவதானியாகவும் இயக்குநர் சபையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்றார். இந்நிறுவனத்தின் தாபகரான தொண்டர் க.திருநாவுக்கரசு அவர்களின் மறைவின் பின்னர் 2001ஆம் ஆண்டு வடமாகாண சர்வோதய அமைப்பின் அறங்காவலர் பொறுப்பினைப் போர்ச் சூழலிலும் துணிவுடன் செய்துவருகிறார். 2003ஆம் ஆண்டு முதல் தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். சமாதான நீதவானான இவர் வேலணைப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் உள்ளார். 43 ஆண்டுகளாக யாழ்ப்பாண மண்ணில் சமூகசேவையை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார் செல்வி ஜமுனாதேவி. சமூகசேவையில் பல்வேறு நிறுவனங்களில் இணைந்து பயிற்சிகளையும் பெற்றுள்ளார். வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் முதல்தர சிறந்த பெண் தொழில்முயற்சியாளர் விருதுகளைப் பெற்றிருந்த இவர் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் Excellence Award எனப்படும் மதிப்பையும் பெற்றவர். UNDP நிறுவனத்தின் யாழ் மாவட்ட கிராம செயற்றிட்ட இணைப்பாளராகவும் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் உபதலைவராகவும் யாழ் மாவட்ட கைப்பணிப் பொருட்கள் நிறுவனத்தின தலைவராகவும், செஞ்சிலுவைச் சங்கத்தின் வேலணைப் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

விருது

தேசிய கௌரவ விருது 2019ஆம் ஆண்டு