ஆளுமை:சிவை, குகநேசன்

From நூலகம்
Name சிவை
Pages மகாலிங்கம்
Pages இராசலட்சுமி
Birth 1964.02.02
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்

சிவை, குகநேசன் (1964.02.02) யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பிறந்த கலைஞர். தந்தை மகாலிங்கம்; தாய் இராசலட்சுமி. யாழ் கொல்லங்கலட்டி, சைவத்தமிழ் வித்தியாலயம், யாழ்மகாஜனக் கல்லூரி, யாழ் விக்டோரியாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் வாய்ப்பாட்டினைப் பிரதான பாடமாகக் கற்று இசைக்கலைமணி என்னும் பட்டத்தினையும் வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையில் தரம் 6இல் சித்தி பெற்று ஆசிரியர் தரப் பத்திரத்தினையும் பெற்றுள்ளார். தொழில்சார் தகைமையாக கல்வி டிப்ளோமா, கல்வி முதுகலைமாணி என்னும் பட்டங்களைப் பெற்றவர். 1996ஆம் ஆண்டு இசை ஆசிரியராகவும் 2002ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இசைத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். உரும்பிராயில் ஸ்ரீசாயி கலைக்கழகம் என்னும் பெயரில் கலை நிறுவனத்தை 1993ஆம் ஆண்டு நிறுவி நடாத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை 2018ஆம் ஆண்டு கொண்டாடினார். வெள்ளி விழாவின் போது 25 ஆண்டுகளாக இந்த நிறுவனம் முன்னெடுத்த நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், சாதனைகள் என்பன அடங்கிய ஸ்ருதிலயம் என்னும் ஆவணப் பதிவேட்டினை வெளியிட்டுள்ளார். சிவை இந்நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாக இருக்கிறார். ஸ்ரீசாயி கலைக்கழகம் வட இலங்கை சங்கீதசபை பரீ்ட்சை, இந்தியாவின் பிறிஜ் பல்கலைக்கழக பரீட்சை ஆகியவற்றிற்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது. தேசிய இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட சாஸ்திரிய இசை, கிராமிய இசை, மிருதங்க இசை, வயலின் இசை, ஓர்கன் இசை என்ற துறைகளில் மாவட்ட, மாகாண மட்டங்களில் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந் நிறுவனத்தின் ஊடாக இப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் பக்தி இசை நிகழ்ச்சிகளையும் பிரதேச செயலகங்களில் நடாத்தப்படுகின்ற கலாசார விழாக்களில் இசை, நடன நிகழ்ச்சிகளையும் ஆற்றுகைசெய்து பலதரப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி சிறந்த வெற்றிகளையும் ஈட்டி வருகிறது. புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பிள்ளையார் மீது பாடப்பட்ட 10 பக்திப் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் சிறுவர் சிந்தனை கவிதைகள் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் இவரால் பாடப்பட்டு தேசிய கல்வியற் கல்லூரி, தினக்குரல் பத்திரிகையின் அனுசரணையுடன் உரும்பிராய் ஸ்ரீசாயி கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது.

விருது

புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பிள்ளையார் மீது பாடப்பட்ட 10 பக்திப் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் சிறுவர் சிந்தனை கவிதைகள் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் இவரால் பாடப்பட்டு வெளியிடப்பட்டமைக்காக தினக்குரல் பத்திரிகை இவருக்கு கலைக்குரிசில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.


குறிப்பு : மேற்படி பதிவு சிவை, குகநேசன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.