ஆளுமை:சிவராமலிங்கம், தர்மலிங்கம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:33, 26 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தர்மலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மலிங்கம் சிவராமலிங்கம்
தந்தை தர்மலிங்கம்
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1939.04.20
இறப்பு 1997.01.06
ஊர் திருகோணமலை
வகை கலைத்துறை செயற்பாட்டாளர்
புனை பெயர் பிரமிள், தரும், ஆரூப் சிவராம், பானுச்சந்திரன், பானு, அஜித்ராம், தருமு சிவராமு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தர்மலிங்கம் சிவராமலிங்கம் அவர்கள் திருகோணமலையில் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தர்மலிங்கம் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் மகனாக பிறந்தார். இவர் ஒரு கலைத்துறை செயற்பாட்டாளர் ஆவார். இவர் பிரமிள், தரும், ஆரூப் சிவராம், பானுச்சந்திரன், பானு, அஜித்ராம் போன்ற பல்வேறு புனைப்பெயர்களை கொண்டிருக்கின்றார்.

இ. கி. ச. இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே எழுத்துத் துறையிலும், கலைத்துறையிலும் அதிக நாட்டம் காட்டிய இளைஞனாக காணப்பட்டார். சிவராமு, தன் மாணவப் பருவத்திலிருந்து எழுதத் தொடங்கினாலும், அவரை இலக்கிய உலகுக்கு அறிமுகமாக்கிய பெருமை, சி. சு. செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'எழுத்து' சஞ்சிகையையே சாரும்.

தனது இருபதாவது வயதில் எழுதிய முதலாவது கவிதை 'நான்' என்ற தலைப்பில், எழுத்து சஞ்சிகையில் 1960 ஜனவரி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இவர் பிரமிள், தரும், ஆரூப் சிவராம், பானுச்சந்திரன், பானு, அஜித்ராம் என்ற பல்வேறு புனைபெயர்களில் இவர் எழுதிய போதும், 'தருமு சிவராமு' என்ற பெயரே பிற்காலத்தில் பிரபல்யம் பெற்றது.

கவிதைத் துறையில் அதிக நாட்டம் கொண்ட சிவராமு, விமர்சனம், நாடகம், சிறுகதை, கட்டுரை என பலதளங்களிலும் தனது ஆற்றல்களைக் காட்டிவந்தார். அதுமட்டுமன்றி. நுண்கலைகளான சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் தனது திறமையை வெளிக்காட்டி வந்துள்ளார். 1960 ஆம் ஆண்டுகளில் எழுத்து, நடை, ஞானரதம், செய்தி, வீரகேசரி, தினகரன் ஆகியவற்றில் எழுதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

திருகோணமலையைப் பிறந்த மண்ணாகக் கொண்ட சிவராமு 1972 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து சென்னைக்குச் சென்று விட்டதனால், இவர் ஈழத்தைச் சேர்ந்தவரா? என்ற ஐயம் பலருக்கு இருந்து வந்துள்ளது. இவர் திருகோணமலையில் பிறந்து தமிழக மண்ணில் கால் பதித்து இலக்கிய உலகின் ஜம்பவானாக திகழ்ந்தவர்.

படிமக்கவிஞர்: முருகையன், சில்லையூர் செல்வராஜன், மு. பொன்னம்பலம் போன்ற கவிஞர்களின் ஆரம்பகால கவிதைகளுடன், தன்னையும் ஓர் கவிஞனாக ஆக்கிக் கொண்டவர். தமிழ் இலக்கியத்திலும், மேல்நாட்டு இலக்கியங்களிலும் பரிச்சயம் உடையவரான இவர், ஓர் புதுக்கவிதைக் கவிஞனாக பரிணமித்தார். அதேவேளை, மரபுக் கவிதைகளிலும் ஆழ்ந்த பரிச்சயமுடையவராகவும் காணப்பட்டார். புதுக்கவிதை என்னும் வடிவம் தலைநீட்டத் தொடங்கிய காலத்தில், மரபுவாதிகளின் நிபந்தனைகளை எல்லாம் மீறி, புதுக்கவிதையை ந. பிச்சமூர்த்தி, வைத்தீஸ்வரன் போன்றவர்களோடு எழுத ஆரம்பித்தார். புதுக்கவிதைக்கு செழுமையும், அழுத்தமும் சேர்த்த இவர், இத்துறையில் படிமக்கவிஞராகப் புகழ்பெற்றவர். தனிமனித முறுகல்களும், உடைந்துபோன மனக் குமுறல்களும் இவர் கவிதைகளில் உராய்வதைக் காணலாம்.

இவரின் புகழ்பெற்ற விஞ்ஞானக் கவிதையான E=Mc எனும் கவிதை 1972ம் ஆண்டு அஃகு, பத்திரிகையில் வெளியான போது, வானம்பாடி கவிதா மண்டலத்தின் பரிசு இக்கவிதைக்கு வழங்கப்பட்டது. இக் கவிதையானது பல சர்ச்சைகளைத் தமிழ்நாட்டில் கிளப்பிவிட்டது.

இவரது கவிதைகளில் ஆன்மீகம் உறைந்து கிடக்கும் காரணத்தினால், இவரை ஓர் 'ஆன்மீகக் கவிஞர்' என்றும் அழைப்பர். இதற்கு இவரின் வழிகாட்டியாக விளங்கிய திருமலைசாது அப்பாத்துரைச் செட்டியாரின் வழிகாட்டலும், இந்தியத் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தியின் நூல்களைப் படித்த அருட்டுணர்வும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

புதுக்கவிதை வரலாற்றில், தருமுவின் பங்கு அளவிடற்கரியது. இவரது கவிதைகளின் தரிசனநிலை மனப்பிரபஞ்ச உணர்வுலகத்தின் படிமரூபமாக நமக்கு காட்சியளிக்கிறது. கவிதைகள் இன்ன உலகின் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நாம் மொழிவழிச் சிறுவட்டச் சிறைக்குள் இருந்து கொண்டு நிர்ணயிப்பதோ, எதிர்பார்ப்பதோ தவறாகவே முடியும்.

இவரைப்பற்றி சி. சு. செல்லப்பா, எழுத்து பத்திரிகையில் குறிப்பிடுகையில் "புதுக்கவிதை இலக்கியத்தில் தங்கள் தனிப்பார்வைகளால் பங்களிப்பவர்களாக தருமு சிவராமு, வேணுகோபாலன், எஸ். வைத்தீஸ்வரன், டி. கே. துரைசுவாமி சுந்தரம், ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம்" என்று விபரித்துள்ளார்.

தர்மு சிவராமுவின் 'புதுக்கவிதைகள் ஒரு திறனாய்வு ' என்ற தலைப்பில், திருப்பதி திருவேற்கடவன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, கலா சுப்பிரமணியன் என்பவர் 1988ஆம் ஆண்டு கலாநிதிப்பட்டம் பெற்றார். தற்பொழுது, சிவ ராமுவின் அநேகமான ஆக்கங்களையும், அவர் பற்றியதுமான விடயங்களையும் வெளியிடும் பணியை கலா சுப்பிரமணியம் மேற்கொண்டு வருகிறார்.

தலைசிறந்த விமர்சகர் சிவராமு, மிகச் சிறந்த விமர்சகராக தமிழ் கூறும் நல்லுலகத்தால் மதிக்கப்படுபவர். சிறுகதையின் திருமூலரென வர்ணிக்கப்பட்ட மௌனியின் சிறுகதைத்தொகுதிக்கு, 1967ஆம் ஆண்டு முன்னுரை வழங்கிய ஓர் ஈழத்தவர் என்ற வகையில் இவர் மதிக்கப்பட்டது மாத்திரமன்றி, இவர் எழுதிய முன்னுரை, நவீன தமிழ் இலக்கியப் போக்கை, விமர்சன பூர்வமாக நிர்ணயிக்கும் சிறந்த கட்டுரையென குறிப்பிடப்படுகிறது. இவர் எழுதிய முன்னுரை, நகுலனின் 'குருஷேத்திரம்' என்னும் நூலின் தொகுப்பில் மறுபடியும் பிரசுரிக்கப்பட்டது. இது, அவரின் முன்னுரைக்கு வழங்கப்பட்ட மகத்துவம் ஆகும். ஆனால்,மௌனியின் சிறுகதை மறுபதிப்பில் இந்த முன்னுரை நீக்கப்பட்டது.

தமிழின் விமர்சனத்துறையில் முக்கியமானவராகவும், முதன்மையானவராகவும் திகழ்ந்த சிவராமு, விமர்சனத்தை ஒரு கலை வடிவமாக அமைத்தவர். பட்சபாதகமற்ற அவரது விமர்சனம், அறிவுலக இயக்கமாகவே இன்றும் நிற்கின்றது. விமர்சனத்துக்கென இவர் எழுதிய 'விமர்சன மீட்சிகள்', 'விமர்சன ஊழல்கள்', 'விமர்சனாஸ்ரமம்', 'தமிழின் நவீனத்துவம்' ஆகிய நூல்கள், தமிழ் விமர்சக வித்தகர்களால் பெரிதும் சிலாகித்துப் பேசப்படும் நூல்களாகும். பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்களுக்குப் பிறகு, நவீன தமிழ் இலக்கியத் துறையில் தோன்றிய ஓர் மகத்தான ஆளுமை மிக்கவராகப் போற்றப்படுகிறார்.

பக்கச்சார்பற்ற நக்கீரத்தனமான விமர்சனங்களாக அவை இருந்ததனால் அவ்விமர்சனங்கள் எழுத்தாளர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. முகம்பார்த்து விமர்சனம் செய்யாது, வெட்டொன்று துண்டிரண்டு என்ற வகையில் நறுக்குத்தனமாக சொல்வதை நேரே சொல்லிவிடும் தன்மையால் தனது நண்பர்களையே எதிரிகளாக்கிக் கொண்டு கஷ்டப்பட்டுள்ளார். அவரின் இந்த விமர்சனங்கள், தமிழில் புதிய விமர்சனக் கலாசாரத்துக்கே வித்திட்டது. இவரது விமர்சனப் போக்குப் பற்றி இந்தியாவின் பிரபல எழுத்தாளர் நகுலன், குறிப்பிடுகையில் 'இன்றைய தமிழ் இலக்கியநிலை பற்றி விமர்சன பூர்வமாக நிர்ணயிக்கும் முதற்கட்டுரையை, மௌனியின் சிறுகதைக்கு, சிவராமு எழுதிய முன்னுரை தந்துள்ளது' என்று வர்ணித்துள்ளார். நகுலன், இன்னோர் இடத்தில் சிவராமைப் புகழ் பெற்ற மலையாள விமர்சகர் பி. கே. பாலகிருஷ்ணனுடன் ஒப்பிட்டுள்ளார்.

நவீன நாடக ஆக்கி இவராவார். 'நட்சத்திரவாஷி' என்னும் நாடகம், நவீன நாடக மேடைகளில் சிறப்பாகப் பேசப்படும் ஓர் உத்திவகை நாடகமாடும் குறியீட்டு நுட்பம் நிறைந்த இந்த நாடகத்தை, இவர் 1972ஆம் ஆண்டு, டில்லியில் வைத்து எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கப் பொன்விழாவில் (1976) மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், பல பாராட்டுக்களைப் பெற்றது. இலண்டனில் உள்ள த. பாலேந்திரா குழுவினர் இதனை பல்வேறு மேடைகளில் மேடையேற்றியுள்ளனர் எனத் தெரியவருகிறது. உலக நாடக இலக்கியங்களின் போக்கில் தமிழ் நாடகமும், குறிப்பாக மேடை நாடகம் வளர்க்கப்பட வேண்டும் என்ற இவரது ஆவலை 'தட்ஷத்திரவாஷி' என்னும் நாடகம் காட்டுகிறது.

கலை, எழுத்து, வாசிப்பு என்பதையே தன் வாழ்வாகக் கொண்ட சிவராமு, நவீன பெயின்டிங், சிற்பங்கள் செய்வதிலும் வல்லவர். இவரது நவீன பெயின்டிங், பலரைக் கவர்ந்ததுடன் வெளிநாட்டவர்களின் உயர்ந்த விலை கொடுப்புக்கும் காலாகியது. கண்டி, பிரெஞ்சு கலாசார நிலையத்தில் ஒரு காலத்தில் தனிமனித ஓவிய கண்காட்சியை நடாத்திய இவருக்கு, பிரெஞ்சு மொழியிலும் ஓரளவு பரிச்சயமுண்டு, இவரது ஆங்கிலப் புலமையும், மேல்நாட்டு இலக்கியப் பரிச்சயமும், இவரை ஓர் மாபெரும் எழுத்தாளனாக மதிக்க வைத்த போதும், இவரது வாழ்வு, சிக்கலும் சோகமும் நிறைந்ததாகவே அமைந்து விட்டது.

இவர் எழுதிய நூல்களான, 'கைப்பிடியளவு கடல்' (கவிதை), 'மேல் நோக்கிப் பயணம்' (கவிதை), 'லங்காபுரி ராஜா' (குறுநாவல்), 'விமர்சன ஊழல்கள்' (விமர்சனம்), 'தமிழின் நவீனத்துவம்' (விமர்சனம்), 'விமர்சன மீட்சிகள்' (விமர்சனம்), 'ஆயி' (குறுநாவல்), 'படிமம்', 'தியனதாரா', 'நட் சத்திரவாஷி' (நவீன நாடகம்), 'கண்ணாடியுள்ளிருந்து', 'ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை' (கட்டுரை) தமிழகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களுக்கு மத்தியில், ஓர் இலக்கிய நட்சத்திரமாக விளங்கிய சிவராமு என்னும் தலைசிறந்த கவிஞனையும், விமர்சகனையும், நாடக முன்னோடியையும் பெற்றெடுத்த பெருமை திருகோணமலையையே சாரும்.

வாசிப்பையும், எழுத்தையும் தவிர வேறெந்த வேலையையும் தன் வாழ்வில் செய்திராத, ஒரு நாளின் இருபத்திநான்கு மணி நேரத்தையும் கவியாகவே வாழ்ந்து கழித்த சிவராமுவின் கடைசி நாட்கள் பற்றிய தகவல்கள் திகிலூட்டுவதாக அமைந்துள்ளது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தன்னுடைய அறையில் கவனிக்க யாருமின்றி கிடந்தபோது, அவரைச் சூழ, குவிந்திருக்கக் கூடிய தனிமையும், அமைதியும் நட்சத்திரங்களை விட நிறையவே பேசும். அவற்றிடையேயுள்ள இருளைவிடப் பயங்கரமானதாக நிசப்தம் இருக்கும் என்று தோன்றுகிறது" என சேரன் குறிப்பிட்டிருப்பதை இங்கு கூற வேண்டியுள்ளது.

இவர் 06.01.1997இல் மரணமடைந்தார். இவரது உடல் வேலூருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.