ஆளுமை:சித்திரலேகா, மௌனகுரு

From நூலகம்
Name சித்திரலேகா, மௌனகுரு
Pages கந்தையா
Pages மகேஸ்வரி
Birth
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர்

சித்திரலேகா, மௌனகுரு மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர். இவரது தந்தை கந்தையா; தாய் மகேஸ்வரி. இவர் தமது இளமைக் கல்வியை மட்டக்களப்பு அரசடிப் பாடசாலை, வின்சன்ற் மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள ஹேக் சமூகக் கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றார். பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இவர் எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், கல்வியியலாளர், பெண்கள் சஞ்சிகைகளின் ஆசிரியக்குழு உறுப்பினர், நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பெண்கள் அமைப்புக்களின் நிறுவுனர், சோசலிஷப் பெண்ணிலைவாதி, சமூக சேவகி எனப் பன்முகப் பணிகளிலீடுபட்டு அவற்றில் தனது ஆளுமை, அறிவை வெளிப்படுத்தி வருகின்றார். எழுத்துத்துறையில் இலக்கியம், விமர்சனம், பெண்ணிலைவாதம், பண்பாட்டு ஆய்வு, நாட்டார் வழகாற்றியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகின்றார். இவர் சித்ரா, சங்கரி, ரோகினி, பர்வதகுமாரி, மும்தாஜ், காஞ்சனா முதலான புனைபெயர்களில் கவிதைகளையும் பெண்ணிய ஆக்கங்களையும் படைத்து வருகின்றார்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி இலக்கிய நிகழ்வுகளான படையல். கலைக்கோலம் முதலான நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்துள்ளார். 1976 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் சிந்தனை, பிரவாதம், பெண்ணின் குரல், பெண் முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பெண்ணிலைச் சிந்தனைகள், இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம், பாரதியும் பெண்களும்: காலம் கருத்து இலக்கியம் ஆகிய ஆய்வுத்துறை நூல்களை எழுதியும் சொல்லாத சேதிகள், சிவரமணி கவிதைகள், உயிர்வெளி ஆகிய கவிதை நூல்களைத் தொகுத்தும் இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 57-63


வெளி இணைப்புக்கள்

சித்திரலேகா மௌனகுரு பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்