ஆளுமை:சாலிஹ், எம். எஸ். எம். (அண்ணல்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எம். எஸ். எம். சாலிஹ்
தந்தை ஜனாப் அ. முகம்மது சுல்தான்
தாய் ஹயாத்தும்மா
பிறப்பு 1930.10.08
இறப்பு 1974
ஊர் கிண்ணியா, திருகோணமலை
வகை கவிஞர்
புனை பெயர் கவிஞர் அண்ணல்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எம். எஸ். எம். சாலிஹ் அவர்கள் திருகோணமலை நகரிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பெரிய கிண்ணியாவில், ஜனாப் அ. முகம்மது சுல்தான் மற்றும் ஹயாத்தும்மா தம்பதிகளின் இளைய மகனாக 1930.10.08 இல் பிறந்தார்.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1953 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டதன் மூலம் ஆசிரியராக தொழில் புரிந்தார். பின்னர் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அம்பாறை சாலம்பைக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் தமிழ் மொழி ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் மதவாச்சி, சிலாபம் போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றியுள்ளார். கிண்ணியாவில் குட்டிக்கராச்சி இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம், அல் அக்ஸா கல்லூரி, வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் அதிபராகப் பணியாற்றி கல்விச் சேவைகள் புரிந்துள்ளார்.

இவர் 'அவள்' என்னும் கவிதையுடன் இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். 1945 ஆம் ஆண்டு முதல் எழுதிவந்த அண்ணலுக்கு ஈழத்து பிரபல்ய கவிஞரான புரட்சிக் கமால், வ. அ. இராசரத்தினம் ஆகியோருடைய நட்பு, இலக்கியச் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்தது. தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்த பத்திரிகைத்துறை ஜாம்பவான் என அழைக்கப்படும் அமரர் எஸ். டி. சிவநாயகம் அவர்கள் தனது கவிதைகளுக்கு களம் அமைத்துத் கொடுத்ததாக கவிஞர் அண்ணல் குறிப்பிட்டுள்ளார்.

12 வருடங்களாக அவர் எழுதிய கவிதைகளில் சில நறும்பூக்களை மாலையாகத் தொடுத்து, கிண்ணியா முற்போக்கு மன்றத்தினர் 1964 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடாத்தப்பெற்ற இலங்கை இஸ்லாமியக் கலை விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஏ. எல். ஏ. மஜீது உதவியுடன், 'அண்ணல் கவிதை' என்ற தலைப்புடன் வெளியிட்டனர்.

வாலிபக் கனவுகளை வடித்துக் காட்டும் கவிதைகளுடன், ஆங்காங்கே சமய நெறிகளும், சமூக வடுக்களும் சொல்லப்பட்டிருப்பது அவர்கால இலக்கியப் பார்வையைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது. இவர் கவிதைகளில் தனிப்பாடல்களின் தாக்கம், சித்தர்களின் வரிகள், பாரதிதாசனின் உணர்ச்சிக் கோலங்கள் ஆகியவற்றையும் கண்டு கொள்ளலாம். மொத்தத்தில் இவரது கவிதைகளில் காணப்படும் வாலிபரசம், கிழப்பருவ முடையவர்களையும் கிள்ளிவிடக்கூடிய துள்ளல் தன்மை கொண்டதாக அமைந்து கிடப்பதைக் காணலாம்.

கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைகளைப் போல அவர் எழுதிய சிறுகதைகளும் கனதியானதாக இருந்தன. இவர் எழுதிய 'மனிதன்' என்ற சிறுகதை பலராலும் சிலாகித்துக் பேசப்பட்டது. 1961 இல் மரகதம் சஞ்சிகையில் வெளியாகிய இக்கதையை தினகரன் மீள்பதிப்புச் செய்திருந்தது. அண்ணல் 1974 இல் இறையடி எய்திய போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையினால் வெளியிடப்படும் யாழ்பிறையில் மறுபதிப்பாகவும் இச்சிறுகதை வெளிவந்தது. அவ்வாண்டுக்கான யாழ்பிறை ஆசிரியராக இருந்த மூதூரைச் சேர்ந்த கலாபூஷணம் எம். எஸ். அமானுள்ளாஹ் இந்தச் சிறுகதையை மறுபதிப்பாக வெளியிட்டார்.

மரபுவழி நின்று கவிதைகளைப் படைத்த அண்ணல் பிறந்த கிண்ணியாக் கிராமத்தில், ஆங்காங்கே அடையாளங்களாக உள்ள நூலகங்கள், வீதிகள் ஆகியன இவரை நினைவுகொள்ள வைத்தாலும், இன்னும் பரந்தளவில் நினைவு கொள்ளப்பட வேண்டிய ஒரு கிழக்கின் தாரகை, அண்ணலாகும்.

தனது 44வது வயதில் 1974 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டும் பிரிந்தார். இவரது ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும் அவரது சிந்தனைகள், எழுத்துக்கள் என்பன இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.