ஆளுமை:சசிகலா, குகமூர்த்தி

From நூலகம்
Name சசிகலா
Pages பாலசிங்கம்
Pages பத்மாவதி
Birth 1958.03.09
Place நல்லூர்
Category எழுத்தாளர், ஆய்வாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சசிகலா, குகமூர்த்தி (1958.03.09) யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை பாலசிங்கம் தாய் பத்மாவதி. பாடசாலைக் கல்வியை ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக் கழக புகுமுக வகுப்பு வரை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்று 1977ஆம் ஆண்டு பேராதெனியப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 1981ஆம் ஆண்டு புவியியலில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் இதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை வளத்தின் செல்வாக்கு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றினை பேராதனைப் பல்கலைக்கழத்திற்கு சமர்ப்பித்தார்.

1982ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த இவர் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியைப் பூரணப்படுத்துவதற்காக 1993இல் சமூக நகர்வில் சமூகக் கல்விசார் எண்ணக்கருக்களின் தாக்கம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார். கல்வியில் முதுதத்துவமாணி பட்டத்திற்காக யாழ்ப்பாணத்து பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டு ஆய்வு கட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்தார். இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்து பெண்கள் கல்வி ஒரு வரலாற்று நோக்கு என்ற நூலை வெளியிட்டு யாழ்ப்பாணப் பெண்களது கல்விச் சிறப்பை வரலாற்று அடிப்படையில் இன்றைய சமூகத்திற்கு அறியச் செய்தார்.

2004இல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தின் விரிவுரையாளராக இணைந்து, 2007இல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகழத்தில் 2010இல் நிறைவேற்றினார். கலாநிதிப் பட்டத்திற்காக பெண் ஆசிரியர்களின் தொழில் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணிகள் இலங்கையையும் இந்தியாவையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு ஒப்பீட்டு ஆய்வு என்ற ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

2015 முதல் 2017 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நிலை கல்வித்துறையின் தலைராகவும் இருந்ததோடு 2019இல் இருந்து விசேட கல்வித் தேவைகள் துறைக்கான தலைவராக செயற்பட்டு வருகின்றார். இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தினால் வெளியிடப்படும் பார்வை என்ற வருடாந்த கல்விச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக 2012 முதல் இருந்து வருவதோடு காலத்திற்கு காலம் கல்விப்புலத்தில் உள்ள பிரச்சினைகளை, தேவைகளை இனங்கண்டு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் உலகின் பல்வேறு நாடுகளில் தமது ஆய்வு முடிவுகளை சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பித்து உள்ளார். 43 கல்விசார் ஆய்வுக் கட்டுரைகளையும் 36 கல்விசார் கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளதோடு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கல்விசார் ஆய்வுகளிலும் ஈடுபட்டு உள்ளார். இவரே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தின் முதலாவது தமிழ் பெண் பேராசிரியை என்பதுடன் இலங்கையின் கல்விப் புலத்தின் முதலாவது தமிழ் பெண் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

விருதுகள்

1993 ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் அதிகூடிய ஆற்றலுக்கான தங்கப் பதக்கம்.

2017இல் இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆய்வாளருக்கான விருது

குறிப்பு : மேற்படி பதிவு சசிகலா, குகமூர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 14791 பக்கங்கள் 4-6
  • நூலக எண்: 14469 பக்கங்கள் 7-11