ஆளுமை:கலியுகவரதன், இரத்தினம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:28, 4 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலியுகவரதன் இரத்தினம்பிள்ளை
தந்தை இரத்தினம்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு 1941.01.11
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை சைவ பெரியார், ஆத்மீக சிந்தனையாளர், யோகக் குரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆத்மீக சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமான யோக்குரு திருவாளர் இ. கலியுகவரதன் ஐயா அவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இரத்தினம்பிள்ளை, பொன்னம்மா தம்பதியினருக்கு 1941.01.11 ஆம் திகதி மகனாகப் பிறந்தார். தனது கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். தனது 20 ஆவது வயதில் திருகோணமலைக்கு வந்து துறைமுக அதிகாரசபையில் ஊழியராகப் பணிபுரிந்தார். அக்காலத்திலிருந்து ஆத்மிக சிந்தனைகளும் ஊற்றெடுக்க திருகோணமலையே அவரது வாழ்விடமாயிற்று.

இவரது தந்தையாரான பயில்வான் தம்பு இரத்தினம்பிள்ளை அவர்கள் தனது 12 ஆவது வயதில் இந்தியாவுக்குச் சென்று, அங்கே பலவிடங்களிலும் வாழ்ந்து உடற்பயிற்சி, உடல்வித்தைகள், மல்யுத்தம், யோகாசனம், போர்க்கருவி பாவனை, சித்த மருத்துவம், மாந்திரீகம், சாத்திரம் போன்ற பல கலைகளைப் பயின்று பலவருடங்களின் பின்னர் காங்கேசன்துறைக்கு வந்தார். இங்கே வீரமாணிக்கதேவன் துறை என்னும் தனது இடத்தில் "இராமமூர்த்தி உடற்பயிற்சி நிறுவனம்” என்ற பெயரில் கூடமமைத்து இக்கலைகளைப் பயிற்றுவித்து வந்தார்.

தன்னுடைய தந்தையாரிடம் யோகாசனம், உடற்பயிற்சி, மல்யுத்தம் போன்றவற்றை பயின்ற கலியுக வரதன் ஐயா அவர்கள் திருகோணமலையில் இராமமூர்த்தி உடற்பயிற்சி நிறுவனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் யோகக் கலைகளைப் பயிற்றுவித்து வந்துள்ளார். அதே போல் 2002ஆம் ஆண்டு "சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம்", 2016 ஆம் ஆண்டு "HOLISTIC SPECIAL EDUCATION FOUNDATION" போன்ற அமைப்புக்களை ஆரம்பித்தார். இவ் அமைப்புகளினூடாக யோகக்கலையைப் பயிற்றுவித்தல், ஆங்கில போதனை, மானுட மேம்பாட்டு செயற்பாடுகள், சிவதீட்சை வழங்குதல், வறிய மாணவர்களின் கல்விக்கான நிதியுதவி வழங்குதல், ஊனமுற்றவர்கள் பயன்படுத்துவதற்காக துணைக்கருவிகள் வழங்குதல், கணவனை இழந்த குடும்பத் தலைவிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குதல், அறநெறிப் பாடசாலைகள் பற்றி பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், மனவளர்ச்சி குன்றிய விசேட தேவைப்பாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு கல்விச் செயற்பாடுகளோடு உளவிருத்திச் செயற்பாடுகளையும் திட்டமிட்டு நடாத்திவருதல் போன்ற இன்னோரன்ன சமூகம் சார்ந்த பணிகளை தொடர்ந்து செவ்வனே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயத யுத்தம் நிறைவு பெற்ற 2009 க்குப் பின்னரான காலப்பகுதியிலே இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் பரந்துபட்ட வகையில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

மேலும் தன்னுடைய பயிற்சியினதும், அனுபவத்தினதும் காரணமாக “யோக சாத்திரம்" என்னும் நூலை 2007 ஆம் ஆண்டிலும், "அன்பே யோகக் கலை" என்னும் நூலை 2015 ஆம் ஆண்டிலும் வெளியீடு செய்துள்ளார். யோகக் கலையின் முக்கியத்தினையும், மனித வாழ்வில் அது செலுத்தும் தாக்கத்தினையும் யாவரும் விளங்கும் வண்ணம் எளிய நடையில் படங்களோடு சேர்த்து வெளிவந்துள்ள இந்நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தனது குருவாக சிவபெருமானையே உள்ளத்தால் நினைத்து கடமைகளை கொள்ளும் ஐயா அவர்கள் திருகோணமலையில் மட்டுமல்லாது கிளிநொச்சி, மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, பொலன்னறுவை, அம்பாறை என இலங்கையின் பல பாகங்களிலும் பாடசாலைகளினூடாக மாணவர்களுக்கும், அரச திணைக்களங்களினூடாக உத்தியோகத்தர்களுக்கும், கழகங்கள், அமைப்புகளினூடாக பொதுமக்களுக்கும் யோகாசனப்பயிற்சிகளை கடந்த வருடங்களாக மேற்கொண்டு வருகின்றமை பல போற்றுதற்குரிய விடயமாகும்.

கல்வி பொறுப்பதிகாரிகள், பெற்றோர்களின் பெருவிருப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு எமது சைவசமயத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறியும், சமய வாழ்வியலில் சிவதீட்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும், ஏராளமான மாணவர்களுக்கு சிவதீட்சைகள் வழங்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இடப்பெயர்வு காரணமாக 20 வருடங்கள் வன்னியில் தங்கியிருந்த காலப்பகுதியில் மாணவர்களின் அறிவை மேம்படுத்துமுகமாக "அறிவுக்கதிர்" என்னும் காலாண்டு விஞ்ஞான சஞ்சிகை ஒன்றினையும் வெளியீடு செய்வதில் முன்னின்று உழைத்தார்.

2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தங்திருந்த இந்தியாவைச் சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சிதம்பரத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் யோகக் கலையைக் காட்சிப்படுத்தி அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவ்வாறே இராமகிருஷ்ண சங்கம், சின்மயா மிசன் போன்ற இந்து அமைப்புக்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவரும் ஐயா அவர்களின் யோகக்கலை பயிற்சியானது, இலங்கையைத் தாண்டி இந்தியா வரையும் இடம்பெற்று வருகின்றது.

இவர் சைவ முறைப்படி திருமணங்களையும் மேற்கொள்ளும் வழிமுறைகளையும் சமூகத்தில் தற்பொழுது முன்னெடுத்து வருகின்றார்.

இவ்வாறாக பல தேசங்களிலும் தன்னுடைய வயது மூப்பையும் பொருட்படுத்தாது மக்கள் சேவையே மகேசன் சேவை எனக்கருதி இன்றுவரை பல ஆத்மிக செயற்பாடுகளையும், சமூகச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றமை பலராலும் போற்றப்படுகின்ற ஒருவராக கருதப்படுகின்றார்.