ஆளுமை:கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 30 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தன் இளைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து
தந்தை கந்தன் இளையக்குட்டி
தாய் நாகம்மா
பிறப்பு 1938.03.18
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை முறிவு வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பலகாமத்தில் முன்மாரித்திடல், சிப்பித்திடல் என்னும் திடல்கள் மிகவும் செல்வாக்குப் பெற்ற திடல்களாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் கிராமதேவதைகளுக்குரிய வழிபாடுகளில் ஒன்றான 'வல்லிக்கண்ணருக்கான மடை வைபவம்' சிப்பித்திடலில் இடம்பெற்று வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இத்திடலுக்கு அருகேயுள்ள பாற்கடலில் பழமையில் 'முத்து' எடுத்ததாகவும், இத்தொழிலில் ஈடுபட்டோர் முத்துச்சிப்பிகளை உடைப்பதற்கு இத்திடலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், இங்கே சிப்பி ஓடுகள் குவியலாகக் கிடந்ததாகவும் இதன் காரணமாகவே இத்திடலுக்குச் 'சிப்பித்திடல்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இத்தகைய சிறந்த சிப்பித்திடலில் கந்தன் இளையக்குட்டி, நாகம்மா தம்பதிகளுக்கு 1938 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முறிவு வைத்தியர் பேச்சிமுத்து பதினெட்டாம் திகதி பிறந்தார்.

'அனுபவம் சிறந்த ஆசான்' என்பார்கள். முறிவு வைத்தியர் திரு.பேச்சிமுத்து அவர்கள் மகேஸ்வரி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டிருந்தபொழுது அவருக்குச் சில அனுபவங்கள் ஏற்பட தனது முயற்சி ஒன்றையே மூலதனமாக நினைத்து இரவு பகல்பாராது கடுமையாக உழைத்ததின் பயனாக இன்று அவர் ஒரு சிறந்த முறிவு வைத்தியராகக் திகழ்கிறார். கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியில் இவர் வீட்டுக்குச் செல்லும் பாதையில் 'முறிவு வைத்தியர்' என்ற பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டிருப்பதையும், இந்த வீதியில் செல்லும் அநேகமானோர் இந்தப் பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட வீதியால் இறங்கிச் செல்வதையும் இன்று காணக்கூடியதாக உள்ளது.

1940 ஆம் ஆண்டளவில் சிப்பித்திடலில் இருந்து இடம் பெயர்ந்த முறிவு வைத்தியர் திரு. பேச்சிமுத்து அவர்கள் தனது குடும்பத்தோடு தம்பலகாமம் பாரதிபுரத்தில் வாழத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு இலங்கை வைத்தியசபையின் 'வைத்திய அத்தாட்சிப்பத்திரம் ' 7146 ஆம் இலக்கத்தில் இவருக்குக் கிடைத்தது. தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி, திரியாய், மதவாச்சி, புத்தளம், புல்மோட்டை, கந்தளாய், மாத்தளை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் இவரிடம் சிகிச்சைபெற தமிழர், சிங்களவர், இஸ்லாமியர்கள் எந்த நேரமும் வருகை தந்துகொண்டேயிருப் பார்கள்.

தம்பலகாமம் வளர்கலை மன்றம் இவரது சேவையைப் பாராட்டிக் கௌரவித்தது. திருகோணமலை இலக்கியச் சோலை பதிப்பகமும் இவரது சேவைக்குப் பாராட்டு வழங்கியது. இங்கு வருகைதரும் நோயாளர்கள் தமது நோயை நீக்கிக் கொள்வதுடன் இவரது கனிவு ததும்பும் பேச்சாலும் மன ஆறுதல் பெற்று மகிழ்ச்சியுடன் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவரது இரண்டு ஆண்பிள்ளைகளில் ஒருவர் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் மற்றவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலும் கடமையாற்றுகின்றனர்.

தனது பணியை காசுக்காக விலைபேசாத இவருக்கு மிகுந்த செல்வாக்குப் பெருகிவருகிறது. எனினும் வைத்திய உதவியைப் பெறுபவர்கள் தங்களாலியன்றதை வழங்கிச் செல்கின்றனர்.