ஆளுமை:அரியநாயகம், தி.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 2 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தி. அரியநாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி. அரியநாயகம்
தந்தை -
தாய் -
பிறப்பு 1933.09.24
இறப்பு 1988
ஊர் திருகோணமலை
வகை சிறுகதை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலையின் சிறுகதை வளர்ச்சியில் கனதியான, அதேவேளை அமைதியான பங்களிப்புச் செய்தவர் தி. அரியநாயகம். 1933 ஆம் ஆண்டு புரட்டாதி திங்கள் 24 இல் பிறந்த இவர், காதல் மணம்புரிந்து ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, 1988 ஆம் ஆண்டு சீருடைக்காரர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஓர் மூத்த எழுத்தாளர். திருகோணமலை நகராட்சிமன்ற நூலகத்தில் நூலகராக கடமையாற்றிய இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவர்.

இராயப்பு என்னும் நண்பரோடு கொண்ட தொடர்பினால் பேச்சுத்துறை, நடிப்புத்துறை, கவிதைத்துறை அனைத்திலும் பிரகாசித்தவர். தி. மு. க.வின் பகுத்தறிவுக் கொள்கையின்பால் ஈடுபாடு கொண்ட அரியநாயகம், மேடைகளில் பேசுவதிலும் நடிப்பதிலும் அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார்.

'சாவின் மடியில்' என்ற சிறுகதையை எழுதி, சுதந்திரன் பத்திரிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித்துக் கொண்ட இவர் வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளிலும், ஏனைய சஞ்சிகைகளிலும் எழுதி திருகோணமலை சிறுகதை வரலாற்றுக்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளார். 'ஊனம்' என்ற சிறுகதையை வீரகேசரியில் 1963 இல் எழுதிப் புகழ் பெற்றுக்கொண்ட இவருக்கு, உண்மையிலேயே ஒரு கை ஊனம் என்பது பலருக்குத் தெரியாது.

பச்சைநோட்டு, இதயச்சுமை, தெய்வத்தின்சுவடு, ஞானோதயம், ஊனம், பூஜைக்கு வந்தமலர், அவ்வளவுதான், ராதா நீ ஆகிய சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவை தொகுக்கப்படாமல் பத்திரிகைப் பிரசுரங்களாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன .

பொதுவாகவே, திருகோணமலை மண்ணின் வாசனைச் செழுமை கொண்ட கதைகளை எழுதுவதில் வல்லவரான இவரது சிறுகதைகள் தொகுக்கப் பெறாவிட்டாலும், மௌனியைப் போல் குறைவான சிறுகதைகள் மூலம் நிறைவான இலக்கியப்பணி செய்தவர் என்ற தகுதியைப் பெறுக்கின்றார்.

இவரது 'பூஜைக்குரிய மலர்' என்னும் சிறுகதை ஒரு காலத்தில் திருகோணமலைக் கடற்கரையில் இருந்த இலக்கிய கர்த்தாக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த, அந்த 'ஒற்றைப்பனை' மரமே இக்கதையின் முக்கிய பாத்திரமாகும். தாங்கிப்புட்டிக்கும், மனையாவெளிக்கும் இடையில் உள்ள கடற்கரையில், நடுமையமாக நின்ற அந்த ஒற்றைப் பனைக்கென்று ஒரு சரித்திரமே கிடையாது. அது எப்படி அங்கு உண்டாயிற்று? யார் அதை உண்டாக்கினார்? என்று எவருக்குமே தெரியாது. அது பூப்பதுமில்லை, காய்ப்பதுமில்லை.

காலநிர்ப்பந்தம் காரணமாகவோ என்னவோ தி. அரியநாயகம் எழுதிய சிறுகதைகள், காதல் நினைவுகளையும் மனச்சிதறல்களையும் சொல்லும் சிறு கதைகளாகவே இருக்கின்றன. அடுக்குமொழித் தேர்ச்சியுடைய இவரது தமிழ்ச் சொல்வாக்கு, இவரது சிறுகதைகளிலும் பிரவாகிக்கின்றது.

'பச்சை நோட்டு' என்னும் சிறுகதையில் வரும் மனோ என்னும் பெண் வறுமையின் காரணமாக பச்சை நோட்டுக்காக (பத்து ரூபா) ஒரு கணம் தனது காதலை மறக்க நினைப்பதும், பின், உண்மைக்காதல் முன் அது தோற்றுப் போவதுமான காதல் வறுமையை, மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

1988 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி உப்புவெளியில் அகால மரணம் அடைந்தார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரியநாயகம்,_தி.&oldid=604712" இருந்து மீள்விக்கப்பட்டது