ஆளுமை:ஹிதாயா, ரிஸ்வி

From நூலகம்
Name ஹிதாயா, ரிஸ்வி
Pages யூ. எல். ஏ. மஜீத்
Pages ஸெய்னம்
Birth 1966.04.01
Pages 2020.11.23
Place அம்பாறை
Category எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிதாயா, எம். ஆர். எம். ரிஸ்வி (1966.04.01 - 2020.11.23) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை யூ. எல். ஏ. மஜீத்; தாய் ஸெய்னம். இவர் கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜித், மருதூர்நிஸா ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வந்த எழுத்தாளரும், கவிஞருமாவார்.

இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி, கல்எளிய அரபுக்கலாபீடம் ஆகியவற்றில் கல்வி பெற்றவர். தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னிக் கவிதை (புதுக்கவிதை) 1982-04-01ம் திகதி “மீண்டும்’ எனும் தலைப்பிலும், அதேதினம் 'சிந்தாமணி' பத்திரிகையில் "அன்னை" எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு தசாப்தகாலமாக மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை என தவறாமல் எழுதியுள்ளார். இவர் 560க்கு மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதிக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 22 சிறுகதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் சமரசம், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'தூண்டில்' மற்றும் மல்லிகை, ஞானம், பாசமலர், தூது அல்-ஹசனாத், கலைச்சுடர், இனிமை, கொழுந்து, சிரித்திரன், புதிய உலகம், சுவர், பூ, தூரிகை, யாத்ரா, விடிவு, நயனம், காற்று, கலை ஒளி, நவரசம், புதுயுகம், தினமுரசு, பார்வை, அழகு, இளநிலா, கண்ணாடி, மருதாணி, உண்மைஉதயம், நிதாஉல் இஸ்லாம் ஆகிய சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.

பல்வேறு சமூகசேவை, இலக்கிய மன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத் தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தினையும் வகித்துள்ளார். இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர் ரூபவாஹினிக் கவியரங்குகளிலும் முதன்முதலில் பங்கு கொண்ட முஸ்லிம் பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர், அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இவரின் முதலாவது கவிதை நூல் ‘நாளையும் வரும்’ எனும் தலைப்பில் 1984-ம் ஆண்டு 'ஞெகிழி' வெளியீடாக வெளிவந்தது. அதையடுத்து இரண்டாவது கவிதைத் தொகுதி 2000 ஆண்டு சித்திரை மாதம் 'தேன்மலர்கள்' எனும் மகுடத்தில் வெளிவந்தது. சிந்தனை வட்டத்தின் 99வது வெளியீடான ‘தேன்மலர்கள் இலங்கையில் முஸ்லிம் பெண் கவிஞர் ஒருவரால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைமகள் ஹிதாயாவின் மூன்றாவது கவிதைத் தொகுதி இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் தலைப்பில் சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடாக வெளிவந்தது. கவிதைத் தொகுதியின் தலைப்புக்கேற்ப இத்தொகுதியினை மஸீதா புன்னியாமீனுடன் சேர்த்து எழுதியமை குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் சிந்தனைவட்டத்தின் கவிதைத் தொகுதிகளான 'புதிய மொட்டுகள்', 'அரும்புகளிலும்', காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான 'மணிமலர்கள்' மரபுக்கவிதைத் தொகுதியிலும், சாய்ந்தமருது நூல் வெளியிட்டுப் பணியகத்தின் வெளியீடான "எழுவான் கதிர்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இவரது இலக்கியப் பணியின் முக்கிய கட்டமாக 'தடாகம்' இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்பிடலாம். ஒரு பெண்ணாக இருந்த போதிலும் கூட 12 இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார். இவ்விதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஸி. எல். பிரேமினி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், ஏ.யூ.எம். ஏ. கரீம், கல்ஹின்னை ஹலீம்தீன், புன்னியாமீன் ஆகியோரின் புகைப்படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கெளரவித்துள்ளார். அத்துடன் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கெளரவித்துள்ளார். சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார்.

இவர் கொழும்பு - வெள்ளவத்தை ஹோட்டல் சபயாரில் நாகபூஷணி கருப்பையா எழுதிய ‘நெற்றிக்கண் கவி நூலை வெளியிட்டு சாதனை படைத்தார். ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது. தாரிக்கா மர்சூக் எழுதிய 'மனங்களின் ஊசல்கள்' எனும் கட்டுரைத் தொகுதியின் வெளியிட்டு விழாவை குருநாகலிலும், 'இரட்டை தாயின் ஒற்றைக்குழந்தை' கவிதை நூல் வெளியிட்டு விழாவை கண்டியிலும் நடத்தியுள்ளார்.

பெண்களுக்கான மையத்து குளிப்பாட்டல், கபனிடல் நிகழ்வினை குருநாகல், பொல்காவெலை ஆகிய இடங்களில் நடத்தியுள்ளார். ஹிதாயாவின் இலக்கியச் சேவையை கெளரவித்து 2000 ஆண்டில் மலையக கலை, இலக்கிய ஒன்றியம் 'ரத்தினதீபம்' விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் 1985ம் ஆண்டில் சாய்ந்தமருது இஸ்லாமிய கலை இலக்கிய ஒன்றியம் 'கலைமகள்' பட்டம் வழங்கியது. மேலும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பரிசில்களை பெற்றுள்ளார்.

கலை, இலக்கியத் துறைக்கு பலவகைகளிலும் பங்களிப்பை நல்கிய இவர், 1988 இல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் முதலாம் இடத்தைப் பெற்று ஜனாதிபதி விருது பெற்றார். 2002 இல் இளம் படைப்பாளிகளுக்கான விருது, 2007 இல் 'கலை அரசி' விருது, 2009 இல் 'கவித்தாரகை' விருது, 'கலைமுத்து' விருது, 'கவிதைச் சிற்பி' விருது, 'சாமஶ்ரீ தேசக்கீர்த்தி' விருது, 'கலாசூரி', 'சமூக ஜோதி', 'பாவரசு', 'காவியத்தங்கம்', 'இலங்கையின் சிறந்த பெண் கவிஞர்' ஆகிய விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளார். இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற கலை இலக்கிய மாநாடுகளிலும் கலந்து கொண்டு பங்களிப்புக்களை நல்கியுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக கலை இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்பு நல்கி வந்துள்ள ஹிதாயா ரிஸ்வி கடந்த 23.11.2020 அன்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.


Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 151-155


வெளி இணைப்புக்கள்