ஆளுமை:ஸ்ராலினி, இராசேந்திரம்

From நூலகம்
Name ஸ்ராலினி
Pages இராசேந்திரம்
Pages சிவமணி
Birth 1991.01.14
Place யாழ்ப்பாணம்
Category பெண் ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸ்ராலினி, இராசேந்திரம் (1991.01.14) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் பிறந்த இளம் பெண் ஆளுமையாவார். இவரது தந்தை இராசேந்திரம்; தாய் சிவமணி. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் கல்விகற்றார். இசைத்துறையில் மேற்படிப்பைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தும் அதனைத் தொடர விரும்பாது இவர் யாழ்ப்பாணம் IIS City Campus இல் கற்று வியாபார முகாமைத்துவப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் பகுதிநேர ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றும் போது மலேசியா செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மலேசியா சென்று அங்கு பெரும்பாலானோர் தாரா வளர்ப்பில் ஈடுபடுவதை அவதானித்த இவர் யாழ்ப்பாணம் திரும்பியதும் தானும் இயற்கை வழித் தாராப் பண்ணை ஒன்றினை அமைக்கத் தீர்மானித்தார். ஐந்து தாராக்களுடன் ஆரம்பித்த இவர் தற்பொழுது முந்நூறு தாராக்கள் வரை வைத்துள்ளார். ஐந்து இலட்சம் முதலீட்டுடன் ஆரம்பித்துள்ள தனது சுயதொழிலின் ஊடாக இன்று மாதாந்தம் நாற்பதாயிரம் வரை வருமானம் ஈட்டுகிறார். இவருக்கு உதவியாக ஒரு பெண்ணை மட்டுமே பகுதிநேர வேலைக்கு வைத்திருக்கிறார். முற்போக்குச் சிந்தனைக் கொண்ட ஸ்ராலினி வேலை என்ற குறுகிய வட்டத்தினுள் இருக்க விரும்பாமல் ஒரு சுயதொழில் முனைவோராக வரவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இவர் ஆரம்பித்த நிறுவனமான சீர் உயிர் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது Seer Bio (Pvt) Ltd தற்போது தாராப் பண்ணையுடன் மட்டும் நின்றுவிடாமல் ஓர்கானிக் உற்பத்தித் துறையில் பல்வேறு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இயற்கை விவசாயிகளுக்குத் தேவையான உள்ளீடுகள் குறிப்பாக ஐந்திலைக் கரைசல், பழக்கரைசல் போன்ற பதினைந்து வகையான ஊட்டக்கரைசல்களைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறார். அதைவிட இயற்கை உரங்களையும் அதாவது மண்புழு வடிநீர், மண்புழு உரம், அசோலா உரம், உயிர்க்கரி உரம் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார். தாராவிற்கான இயற்கை உணவாக அசோலாவை ஆரம்பத்தில் வளர்த்ததாகவும் அதன் பின்னரே பேரளவில் அசோலாவை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் திட்டம் உருவானதாகத் தெரிவிக்கிறார் ஸ்ராலினி. முருங்கை இலை அரிசிமா, வல்லாரை அரிசிமா, உலர் முருங்கை இலை, உலர் வல்லாரை இலை போன்றவற்றையும் சந்தைப்படுத்துகிறார். தாராப் பண்ணையை நீண்டகால நோக்கில் ஓர் கூட்டுப் பண்ணையாக்கும் திட்டத்தில் ஆடு வளர்ப்பையும் ஆரம்பித்துள்ளார்.

எமது இளம் சந்ததியினருக்கு நஞ்சற்ற ஓர்கானிக் உணவைப் பெற்றுக்கொடுப்பதையும் இயற்கைவழி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்குத் தேவையான உள்ளீடுகள் முதல் ஆலோசனைகள், சந்தைவாய்ப்பு என்பனவற்றைப் பெற்றுக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "சீர் உயிர்" நிறுவனத்தை வளர்த்தெடுப்பதே தன் ஒரே இலக்கு என்கிறார் ஸ்ராலினி. புதிய முதலீட்டாளர்களுடன் இணைந்து பல்வேறு புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் வடக்கில் பெண் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் பணிகளுக்கு எதிர்காலத்தில் கணிசமான நேரத்தினைச் செலவிடத் திட்டமிட்டுள்ளார் ஸ்ராலினி. இவர் தற்போது யாழ் மாவட்டச் சிறுதொழில் முயற்சியாளர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு ஸ்ராலினி, இராசேந்திரம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்