ஆளுமை:வேலாயுதம், கனகசபை

From நூலகம்
Name வேலாயுதம்
Pages கனகசபை
Pages தங்கம்
Birth 1917.11.17
Pages 2009.05.19
Place தம்பலகாமம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம், கனகசபை (1917.11.17 - 2009.05.19) திருகோணமலை, தம்பலகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், நிருபர் (வீரகேசரி பத்திரிகை). இவரது தந்தை கனகசபை; தாய் தங்கம். இவர் சிறுவயது முதலே இசை, நாடகம், கூத்து என்பவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5 ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாது போனது. இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிர வைத்தது.இவர் ஆர்மோனியம் வாசிப்பவர்.

இவர் முதன் முதலில் வேலுப்பிள்ளை அண்ணாவியார் பழக்கி மேடையேற்றிய "கண்டி மன்னன் ஸ்ரீவிக்ரமசிங்கன்" என்ற நாடகத்தில், குமாரகாமியின் தங்கை ரஞ்சிதபூசனியாக நடித்தார். இந்த நாடகம் கள்ளிமேட்டு ஆலயடி அரங்கேற்ற அரங்கில் மேடை ஏறியது. சிறந்த குரல் வளமும், சங்கீத ஞானமும் கொண்ட இவர் தனது முதல் நாடகத்திலேயே மக்களின் ஆதரவை பெற்றார்.

தொடர்ந்து நளதமயந்தி நாடகத்தில் தமயந்தி ஆகவும், மயில்ராவணனில் தங்கை தூரதண்டியாகவும், அண்ணாவிமார் இணைந்து நடத்திய பவளக்கொடி நாடகத்தில் அர்ச்சுனனின் மகனாகவும் நடித்து புகழ் பெற்றார். இவர் நாடகத் துறையில் ஆர்வம் காணப்பட்டதனால் இவரது கல்வி ஐந்தாம் தரத்துடன் இடைநிறுத்தப்பட்டு, வீட்டில் இருந்தே தேடி கற்று, கல்வி வளத்தை மெருகூட்டிக் கொண்டார். இவர் மேதாவி அமரர் திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களின் வழிகாட்டலில் சுதந்திரன் பத்திரிக்கையில் முதன் முதலில் தனது கவிதையை எழுதி கவிதை, கதை, சிறுகதை, நாவல் கட்டுரை என்று பத்திரிகை துறையில் இணைந்தார். தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காக எழுதப்பட்ட கவிதையூடாக வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார். தொடர்ந்து வீரகேசரியிலும், மித்திரனிலும் ஆக்கங்களை எழுதி பிரசித்ததுடன், இந்தியாவில் இருந்து வெளிவரும் குமுதம் இதழிலும் சிறுகதைகள் எழுதினார். "சொல்லும் செயலும்" என்ற சிறுகதைக்கு குமுதம் சன்மானம் வழங்கியது. குமுதம் பக்தி இதழில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாறு எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய "பேய்கள் ஆடிய இராம நாடகம்" என்ற கதையை சிந்தாமணி பத்திரிகை வெளியிட்டது. அவ்வாறே தினக்குரல் பத்திரிகையில் "அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் அல்ல" என்ற ஆய்வு கட்டுரை பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ஒரு கட்டுரையாகும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு அதிகமாக தம்பலகாம நிருபராக வீரகேசரியில் பணியாற்றிய ஒருவர் இவர் ஆவார். தொடர்ந்து செய்தி கடிதங்களை எழுதி, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் வல்லவர். இவரது ஆக்கங்களை சித்தி அமரசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியச் சோலையின் இருபதாவது வெளியீடாக இவர் எழுதிய "ரங்கநாயகியின் காதலன்" என்ற வரலாற்று குறுநாவலை வெளியீட்டு, இவரது புத்தக வெளியீட்டு கனவை நிறைவேற்றி வைத்தார். பொற்கேணி கிராம முன்னேற்ற சங்கம் இவர் எழுதிய 30 கட்டுரைகளை தொகுத்து "தமிழ் கேட்க ஆசை" என்ற நூலை வெளியிட்டது. அவ்வாறே தம்பலகாமம் சாயிசேவா சங்கம் இவர் எழுதிய "இந்திய ஞானிகளின் ஆன்மீக சிந்தனை" என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டது.

இவ்வாறான ஒரு பல்துறை கலைஞர் 19.05.2009 ஆம் ஆண்டு இந்த மண்ணிலிருந்து உயிர் நீத்தார்.



Resources

  • நூலக எண்: 1008 பக்கங்கள் 11-29

வெளி இணைப்புக்கள்