ஆளுமை:வெங்கடாசலம்பிள்ளை, திருமேனியார்

From நூலகம்
Name வெங்கடாசலம்பிள்ளை
Pages திருமேனியார்
Birth 1822.12.19
Pages 1892.10.24
Place வல்வெட்டித்துறை
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெங்கடாசலம்பிள்ளை, திருமேனியார் (1822.12.19 - 1892.10.24) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமூக சேவையாளர், வணிகர். இவரது தந்தை திருமேனியார். இவர் திருமேனியாரின் ஆறு புதல்வர்களுக்கும் மூத்தவராகப் பிறந்தமையால் “பெரியதம்பியார்” என அழைக்கப்படலானார்.

இவர் ஆரம்பத்தில் மலேசியாவின் துறைமுக நகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்திலும் 1850 - 1870 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கேரளாவுடன் புகையிலை வர்த்தகத்திலும் ஈடுபட்டுத் தனது வருவாயைப் பெருக்கினார். இவர் ஆங்கிலேயருக்குச் சொந்தமான “King of Atlantic” என்ற இரட்டைப் பாய்மரக் கப்பல், முல்லைத்தீவுக்குக் கிழக்கே வங்கக் கடலில் மூழ்கிய போது மூழ்கிய நிலையில் 1856 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி பல நாட்கள் முல்லைத்தீவிலே தங்கியிருந்து மூழ்கிய கப்பலை மீட்டெடுத்தார். இவர் கப்பற் சாத்திரம் என்னும் மாலுமி சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூரண அறிவு கொண்டவர். இவர் மீட்கப்பட்ட கப்பலை வல்வெட்டித்துறைக்குக் கொண்டு வந்து தமது பரம்பரை வாடியில் அதனைச் சீரமைத்தார். “அத்திலாந்திக் கிங்” என அழைக்கப்பட்ட இக்கப்பல் கெச்சுக் (ketch) கப்பல் எனப்படும் வகையைச் சேர்ந்தது. இவ்வகைக் கப்பல்களின் முன்னிருக்கும் பாய்மரம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே காணப்படும். இதனால் பருவக்காற்றுக்களின் மூலம் நகரும் இவ்வகைக்கப்பல்கள் ஏனைய கப்பல்களை விடவிரைவாக நகரும் தன்மை கொண்டவையாக விளங்கின.

இவ்வாறு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கப்பலை வாங்கித் திருத்தியதன் மூலம் ஆங்கிலேயரின் கப்பல் கட்டும் நுட்பட்தையும் நன்கு அறிந்து கொண்டார். இத்தகைய பட்டறிவின் மூலம் தமிழரின் பாரம்பரியக் கப்பல் கட்டும் முறையினைச் சீர்திருத்தினார். இதன் மூலம் புகழ்பெற்றிருந்த வல்வெட்டித்துறையின் கப்பல் கட்டும் கலையினை மேலும் மெருகூட்டினார். தந்தையிடமிருந்து இரண்டு கப்பல்களை மட்டுமே பெற்றிருந்த இவர், சிவன்கோயிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் 12 கப்பல்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார்.

இவர் இக்காலத்தில் சிறுகொட்டிலாக இருந்த “வற்றாப்பளை கண்ணகி அம்மன்” ஆலயத்தைக் கற்கட்டிடமாக புனரமைத்தார். கோயிலுக்கு அண்மையில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடத்தையும் அமைத்திருந்தார். இவர் கள்ளப்பாட்டில் பிள்ளையார் கோயிலையும் அமைத்திருந்தார். இவர் பாய்க்கப்பல் மூலமாக நடந்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகள் ஓய்வெடுப்பதற்காகக் கள்ளப்பாடு கடற்கரையில் ஒரு மடத்தை அமைத்தார். ஒரே காணியில் இவை இரண்டும் அமைந்திருந்ததனால் அப்பிள்ளையார் கோவில் “மடத்தடிப்பிள்ளையார்” கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. இன்று கள்ளப்பாடு பிள்ளையார் கோவில் என அழைக்கப்படுகின்றது.

இவர் 1852 இல் பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்தார். இவரால் மேற்படி “கெச்சுக்கப்பல்கள்” வல்வெட்டித்துறையில் கட்டப்படத் தொடங்கியதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. அத்தோடு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் அபிமானியமாக விளங்கிய இவர், கோயிலின் சுற்று மதிலைக்கட்டியதுடன் கோவிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு குளத்தையும் வெட்டுவித்தார். வல்வெட்டித்துறையில் முழுமுதற்கடவுளான சிவனுக்குக் கோயில் கட்ட எண்ணி அதுவரை வகித்து வந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்யையார், வைகுந்தப்பிள்ளையார், புட்கரணிப்பிள்ளையார் கோயில்களின் அறங்காவலர் பதவியை ஒன்றுவிட்ட சகோதரனிடம் ஒப்படைத்து விட்டு கடல் வணிகத்தில் வந்த செல்வத்தைக் கொண்டு கோயில் அமைத்தார்.

இவர் தான் தேடிய சொத்துக்களையும் நிலபுலங்களையும் தான் கட்டிய கோவிலின் பெயரில் எழுதி வைத்து அக்கோயிலானது எக்காலத்திலும் நெறிபிரளாது இருப்பதற்காக அதன் நிர்வாகத்தை தனது ஆண்சந்ததிக்காக எழுதிவைத்தார்.

Resources