ஆளுமை:நௌஸாத், ஆர். எம்.

From நூலகம்
Name ராஸிக் காரியப்பர் முகம்மது நெளஸாத்
Pages ராஸிக் காரியப்பர்
Pages ஹாஜரா
Birth 1960.09.05
Place சாய்ந்தமருது, அம்பாறை
Category எழுத்தாளர், கவிஞர்
Pages தீரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ராஸிக் காரியப்பர் முகம்மது நௌஷாத் காரியப்பர் அவர்கள் (ஆர். எம். நௌஸாத்) (பி. 05.09.1960) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவர் 1959ம் ஆண்டுராஸிக் காரியப்பர் – ஹாஜரா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் இலக்கிய உலகில் தீரன் எனும் புனைப்பெயரில் எழுதி வருகிறார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது கமு/ அல்.கமறூன் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை சாஹிராக் கல்லூரியிலும் பயின்றார். அதன் பின் பேராதனைப் பல்கலைக்கழத்தில் வெளிவாரியாக G.A.Q. முதல் வருடத் தேர்ச்சி பெற்றார்.

இவர் 1984ம் ஆண்டு அஞ்சல் அதிபராக நியமனம் பெற்றார். இவர் மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை, அம்பாறை, ஒலுவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் கடமை புரிந்துள்ளார். இவருக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கம் அதிகமாகவே இருந்ததால் இலக்கியத்தில் வலம் வர உந்துகோலாக இருந்துள்ளது. அத்தோடு தாய் வீட்டில் இருந்த சிறிய நூலகம், தந்தையின் தொடர்சியான பத்திரிகை வாசிப்பு, மாமாவின் வீட்டில் இருந்த பத்திரிகை, நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்ற விடயங்களால் இவர் இலக்கியத்தில் உண்டான ஈர்ப்பு அதிகரித்தது.

அந்நேரங்களில் இவர் மின்னல் எனும் கையெழுத்துப் பத்திரிகையை சிறிய அளவில் நடாத்தினார். பின்னர் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, 1975ல் பாடசாலை வெளியீடான “அம்பு” சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் ஸாஹிரா இலக்கியப் பண்ணையில் இணைந்தார். அதன் பின் பரவலாக, சில பத்திரிகை, சஞ்சிகைகளில் துணுக்குகள், கேள்வி பதில், உருவகக் கதை, குறுங்கதை, ஒன்றிரண்டு சிறுகதைகள் போன்றன எழுதினார்.

இவரின் முதல் சிறுகதையான தீண்டத்தகாத கரங்கள் 1982ம் ஆண்டு மித்திரன் வாரமலர் நடத்திய பாரதி நினைவுச் சிறுகதைப் போட்டியில், பிரசுரத்துக்கு தகுதி பெற்ற கதையாக தெரிவு செய்யப்பட்டு பிரசுரமானது. இவர் பொதுவாக சிறுகதை மட்டுமல்லாது கவிதை, நாவல், நாடகம், பத்தி எழுத்துக்கள், குறும்பாக்கள் போன்றவற்றில் பல எழுத்துக்களை படைத்துள்ளார். இவர் 1983ம் ஆண்டு “தூது” எனும் கையடக்கக் கவிதைச் சிற்றேடு ஆரம்பித்தார். இது மொத்தமாக 16 இதழ்கள் வெளியாகின.

இவர் 1985ம் ஆண்டு பாதா றோணியோ சஞ்சிகையின் ஆசிரியராகவும், 1989ம் ஆண்டு இன்னாலில்லாஹி எனும் தமிழ்/முஸ்லிம் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டோருக்கான அஞ்சலிக் கவிதைகளின் றோணியோ அச்சு தொகுப்பின் தொகுப்பாசிரியராகவும், 1993ம் ஆண்டு வாஷிங்டன் கனவு எனும் பாலஸ்தீன்-இஸ்ரேல் சமாதான ஒப்பந்தம் மீதான கண்டனக் கவிதைகளின் தொகுப்பின் தொகுப்பாசிரியராகவும், 1993ம் ஆண்டு ஈழத்தின் முதல் ஹைக்கூ கவிதைச் சஞ்சிகையான புள்ளி சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும், 2002ம் ஆண்டு நவீன கவிதைகளின் சஞ்சிகையான இரண்டாவது பக்கம் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இவர் 1987 ஆண்டு தொடக்கம் 1999ம் ஆண்டு வரை எழுதிய நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. 1987-1989ம் ஆண்டு காலப்பகுதியில் காகித உறவுகள் நாடகமும் (இது இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான 12 வானொலி நாடகங்களின் தொகுப்பு, பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிறுவனமும், தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 3ஆவது பரிசுபெற்றதாகும்), நினைப்பது ஒன்று, வாக்கு, ஒரு கிராமத்தின் கவிதை, காகித உறவுகள்(பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்தமாக நடத்திய வானொலி நாடகப்போட்டியில் மூன்றாம் பரிசாக ரூபா. 25000 மற்றும் சான்றிதழ் பெற்றது.) போன்ற நாடகங்களாகும்.

அதன் பின் 1990ம் ஆண்டு சீட்டுக்காசு, துயரங்களும் ஓய்வதில்லை, களவெட்டி போன்ற நாடகங்களும் உறுதி (1993), ஆரத்திக் கல்யாணம் (1999), ஓட்டம் (1999) நாடகங்களும் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. இவர் பத்தித் தொடர்களாக 2009ம் ஆண்டு பாவலர் பஸில் காரியப்பரின் படைப்புலகில் சஞ்சரித்தல், விழித்திரையில் விரியும் வெண்திரை, ஆங்கில திரைப்படங்கள் அறிமுகம் போன்றன வெளிவந்தன.

இவர் இதுவரை வல்லமை தாராயோ (2000), பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003), வானவில்லே ஒரு கவிதை கேளு (2005), நட்டுமை (2009), வெள்ளி விரல் (2011), கொல்வதெழுதுதல் 90 (2013), அழித்தாயே ஆழித்தாயே… (2017), குறு நெல் (2017), தீரதம் (2017), வக்காத்துக் குளம் (2021), முத்திரையிடப்பட்ட மது (2022), ஆமீன் (2023) எழுதி வெளியிட்டுள்ளார்.

இவருக்கு 2004ம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகையின் சிறந்த கவிஞருக்கான விருதும், 2007ம் ஆண்டு சாய்ந்தமருது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்காக 2011ம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதும் , 2012ம் ஆண்டு அச்சிறுகதைக்காக கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றுள்ளார்.

இவர் இலங்கை அஞ்சல்துறையில் தபாலதிபராக 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.