ஆளுமை:ஜெயலக்ஷ்மி, உதயகுமார்

From நூலகம்
Name ஜெயலக்ஷ்மி
Pages கிருஸ்ணபிள்ளை
Pages இரத்தினம்
Birth 1965.04.20
Place யாழ்ப்பாணம்
Category கல்வியாளர், எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயலக்ஷ்மி, உதயகுமார் (1965.04.20) யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்றில் பிறந்த கல்வியாளர். ஆரம்பக் கல்வியை மாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ் உடுத்துறை மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ் முத்துதம்பி மகாவித்தியாலயத்திலும் கற்றார். போராதனைப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான ஜெயலக்ஷ்மி பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தை கலாசாரத்தில் பெற்றுள்ளார். பட்டப் பின் முகாமைத்துவ டிப்ளோமை மீபே தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றுள்ளார் ஜெயலக்ஷ்மி. 2000-2002 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகை விரிவுரையாளராகவும் 2002ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளராகவும் நியமனம் பெற்று கடமையாற்றி வருகிறார். 1985ஆம் ஆண்டில் எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை, ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல், சமய ரீதியிலான கட்டுரைகள், பாடல் எழுதுதல், நாடகப் பிரதி எழுதுதல், நடித்தல், பேச்சாளர், விவாதி, நூல் விமர்சகர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவராக தன்னை அடையாளப்படுத்துகிறார். இவரின் கட்டுரைகள் கல்வி, விழுமியங்கள், சமூக பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. நல்லூர் தெற்கு மாதர் சங்கத்தின் தலைவியாக உள்ளார். இம் மாதர் சங்கத்தின் ஊடாக வட்டியில்லா கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், முதியோர் பராமரிப்பின் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளல், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கல், யாழ் தேச வழமை சட்டம் தொடர்பான விளக்கம் என சமூக ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இவர் வடமாகாண சபையின் பெண்கள் அமைப்பின் காப்பாளராகவும் உயர்நீதிமன்றத்தின் ஜுரி சபையின் அங்கத்தவராகவும் நல்லூர் லியோ கழகத்தின் லியோ ஆலோசகராகவும், மனித உரிமை சமூக ஏற்பாட்டாளராகவும், யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் உப செயலாளராகவும் இருந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரின் ஆக்கங்கள் ஈழநாதம் பத்திரிகையிலும் இலங்கையில் வெளிவரும் சில சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. World Vision இனின் அனுசரனையுடன் அனர்த்த முகாமைத்துவம் என்ற நூலை வெளியிட்டுள்ளார் ஜெயலக்ஷ்மி.

விருதுகள்

2004ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இவரின் கவிதை முதலாமிடம் பெற்றமைக்காக நல்லூர் பிரதேச செயலகத்தின் கௌரவிப்பு.

குறிப்பு : மேற்படி பதிவு ஜெயலக்ஷ்மி, உதயகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.