ஆளுமை:ஜெயச்சந்திரன், சந்திரசேகரம்பிள்ளை

From நூலகம்
Name சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன்
Pages தம்பையா அம்பலவாணர்
Pages இரத்தினம்மா
Birth 1933.04.21
Pages -
Place திருகோணமலை
Category ஆன்மீகச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன் அவர்கள் சந்திரசேகரம்பிள்ளை, ஞானாம்பிகை தம்பதியினருக்கு மகனாக 1933.04.21 இல் திருகோணமலையில் பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகச் செயற்பாட்டாளர் ஆவார்.

தனது கல்வியை வெஸ்லி மிசன் மெதடிஸ்த பாடசாலை, புனித சூசையப்பர் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி போன்றவற்றில் கற்றார். அதைத் தொடர்ந்து 1955-56 களில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆங்கில உதவி ஆசிரியராகவும், 1956 தொடக்கம் 1975 வரை இலங்கை நீதி அமைச்சிலும், 1996 முதல் 2004 வரை கனடா ஒன்ராறியோ நீதி அமைச்சிலும் பணியாற்றினார்.

இவருடைய ஆன்மீக ஈடுபாட்டிற்கும், தனது சமஸ்கிருதக் கல்விக்கும் வில்லூன்றி கந்தசுவாமி கோயில் பிரம்மஸ்ரீ பூரணானந்தேஸ்பர குருக்களின் மகன்களான சுப்பிரமணியக் குருக்கள், சண்முகரெத்தினக் குருக்கள், பூரண தியாகராஜக் குருக்கள் ஆகியோரே உதவினார்கள்.

1952 ஆம் ஆண்டில் சுவாமி சச்சிதானந்தாவுடனான குரு-சீட தொடர்பு ஏற்பட்டதன் மூலம் யோகாசனம், பிரணாயாமம், சூரியநமஸ்காரம் போன்றவற்றைப் பயிலும் சந்தர்ப்பம் உண்டாகியது. சுவாமியிடம் சடாட்சர மந்திர உபதேசம் பெற்றார். சுவாமி திருகோணமலையில் மாதாஜியின் தபோவனத்தில் தங்கியிருந்த காலத்தில் நாள் தவறாது சுவாமியைத் தரிசித்து ஆத்மீக உரையாடல்கள் மேற்கொள்ளுவதையும், தனது குடும்ப வாழ்வின் நிகழ்வுகளையும் சுவாமியிடம் அனுமதி பெற்றே நடாத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மாண்டூக்கிய உபநிடதத்தை தமிழில் மொழி பெயர்த்து சுவாமி சச்சிதானந்தாவினுடைய நாற்பத்தி இரண்டாவது பிறந்த நாள் அன்று இலவசமாக வெளியீடு செய்தார்.

அதே போல சுவாமி கெங்காதரானந்தாவுடனான தொடர்பு அவரின் ஆத்மீக நாட்டத்தை மேலும் அதிகரித்தது. சிவயோக சமாஜ வாராந்த கூட்டு வழிபாட்டில் சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவராக விளங்கினார். வாராந்த சத்சங்கங்களில் பக்தர்களினது சந்தேகங்களையும் சுவாமியின் அனுமதியுடன் தீர்த்து வைத்ததுண்டு. சுவாமி கெங்காதரானந்தாவிடம் பஞ்சாட்சர தீட்சையும் பெற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்லாது மேல்நாட்டு ஐரோப்பியர்களுக்கு வேதாந்தம், ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம், வேதாகமம் பற்றிய விளக்கங்களை அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று தொடர்ந்து மூன்று நாட்கள் மேற்கொண்டார்.

சுவாமி தந்திரதேவாவுடனும், பிக்ஷூ அப்புக்குட்டன் சுவாமியுடனும் நீண்டகாலமாக தொடர்புகளை வைத்திருந்து அவர்களுக்கு தன்னால் இயன்ற கருமங்களை செய்து வந்தார்.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் மீது இயற்றிப் பாடிய "அன்னை புகழ் " கவிதை நூலை 1971 ஆம் ஆண்டு கொடியேற்றத் தினத்தன்று அம்பாள் முன்னிலையில் அரங்கேற்றினார். அத்தோடு 2003 இல் "திருகோணமலை பத்திரகாளி அம்மன் பாதாதிகேச துதி", 2012 ஆம் ஆண்டு "ஆத்மீக ரதம்" என்னும் கட்டுரைத் தொகுப்பு போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

வில்லூன்றி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி காலங்களிலும், மேலும் பல ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பல தசாப்தங்களாக சொற்பொழிவாற்றுவதை வழமையாகக் கொண்ட சைவத்தமிழ் அறிஞர் பெருந்தகையாகத் திகழ்ந்தார். இவரது சொற்பொழிவுகளுக்கு திருகோணமலையில் மட்டுமல்லாது கொழும்பு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், கனடா போன்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு காணப்பட்டது.

திருவள்ளுவர் கழகம் திருகோணமலையில் சிறப்பாகச் செயற்பட்ட காலங்களில் அதன் செயலாளராகவும், "கமலை" பத்திரிகையின் இணை ஆசிரியர்களுள் ஒருவராகவும் திறம்பட பணியாற்றினார். அதுமட்டுமல்லாது திருகோணமலையின் கம்பன் கழகத் தலைவராக இருந்து இரண்டு தடவைகள் கம்பன் விழாக்களை தலைமையேற்று நடாத்தியுள்ளார்.

தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்ற 88 வயதையுடைய சைவத் தமிழறிஞர் ஜெயச்சந்திரன் அவர்கள் திருகோணமலையில் வாழ்ந்த காலப்பகுதியில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு காட்டியது மட்டுமல்லாமல் பல செயற்பாடுகளில் தலைமையேற்றும், பங்களிப்புச் செய்தும் திகழ்ந்த ஓர் சைவப் பெரியார் ஆவார். இவரது மகன்களுள் ஒருவரான சுவாமி சங்கரானந்தா அவர்கள் தற்போது கனடாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.