ஆளுமை:ஜுல்பிகா ஷெரீப்

From நூலகம்
Name ஜுலிபிகா ஷெரீன்
Birth
Place அம்பாறை
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுல்பிகா ஷெரீப் அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்த எழுத்தாளர். முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை கல்முனை ஜீ.எம்.ஜீ பாடசாலையிலும் உயர்கல்வியை கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை, காமல் பற்றிமாக் கல்லூரியிலும் கற்றார். ஆங்கிலம் இதழியல், உளவியல் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றில் இளமாணிப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். பயிற்றப்பட்ட கல்விமாணி, முதுமாணி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் ஆவார். ஊடகத்துறையிலும் பணியாற்றுகிறார் எழுத்தாளர். தனது ஐந்தாவது வயதில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக கலை இலக்கிய உலகிற்குள் பிரவேசித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பல்வேறு துறைகளில் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஆக்கங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகை சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட மேடை, வானொலி கவியரங்குகளிலும் இவர் கலந்துகொண்டு கவிபாடியுள்ளார். பாடசாலை சாரணியம், சர்வோதயம், தேசிய சேவைகள் மன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து கல்வி கலை இலக்கிய கலாசார சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் கல்முனை மாதர் பணியகம், மாதர் அபிவிருத்தி சங்கம், பெண் எழுத்தார்வலர் சங்கம் ஆகியவற்றின் தலைவியாகவும் இருந்து பணி செய்து வருகிறார். கல்முனை கலை இலக்கிய வட்டத்தினை 1990ஆம் ஆண்டு ஆரம்பித்து சாளரம், இறக்கை எனும் கையெழுத்துச் சஞ்சிகைகளை வெளியிட்ட இவர் 1985ஆம் ஆண்டு இளநிலா எனும் காலாண்டு இதழினையும் வெளியிட்டு வந்தார். 1994ஆம் ஆண்டு தனது வானொலி மேடைக் கவியரங்குகளில் பாடிய கவிதைகளில் சிலவற்றை தொகுத்து கூவிக் களித்தவை எனும் பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார். புதுயுகம் என்னும் சஞ்சிகையின் போஷகராகவும் இருந்துள்ளார். கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பித்த காலங்களில் 1992ஆம் ஆணடு The Moon (த மூன்) எனும் ஆங்கில சஞ்சிகையினையும் 1995ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை குருத்து எனும் காலாண்டு இதழினையும் கல்லூரி சார்பாக வெளியிட்டு வந்தார். இக் கல்லூரியின் 60ஆவது ஆண்டு வைரவிழா நினைவு மலருக்கு இவர் அசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். கல்முனை கிராமோதய சபைத் தலைவராகவும், சமாதான நீதவானாகவும் செயற்பட்ட இவர் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நாயகமாகவும் அம்பாறை மாவட்ட செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராகவும், பெண்கள் தொடர்பாடலுக்குப் பொறுப்பாகவும் இருக்கிறார்.

விருதுகள்

2009ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சாகித்திய விருது. 2009 சாமஸ்ரீ தேசமானிய விருது. 2009 ஒற்றுமைக்கான உறவுப்பாலம் விருது ஊடக விருதும், தேசிய சேவை மன்றத்தினூடாக சிறுகதைக்கான ஜனாதிபதி விருது கவிக்குயில், கலைத்தாரகை, கவிமணி, கவிநங்கை, வரகவி, கலாஜோதி, கலைத்தீபம், சமூகஜோதி, இரத்தின தீபம், கலாரத்னம் போன்ற பட்டங்களையும் பல அமைப்புக்களினால் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் உயரிய விருதான தேசமான்ய விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.