ஆளுமை:ஜமீல், ஏ.

From நூலகம்
Name அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்
Pages அப்துல் றகுமான்
Pages றகுமத்தும்மா
Birth 1969.07.30
Place மருதமுனை, அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் றகுமான் அப்துல் ஜமீல் அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் மருதமுனை எனும் ஊரில் அப்துல் றகுமான் மற்றும் றகுமத்தும்மா எனும் தம்பதிகளுக்கு 1969.07.30 இல் 8ஆவது புதல்வராகப் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்றார். இரண்டாம் நிலைக் கல்வியை அதே பாடசாலையில் பயின்றார். பாடசாலையில் உயர்தரம் கற்கும் காலத்திலிருந்தே கலை இலக்கியச் செயற்பாடுகளில் அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். இவர் தனது ஆக்கங்களில் புனைபெயராக ஜமீல் என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்.

1990 களின் நடுப்பகுதியில் இருந்து இவர் இலக்கிய உலகில் அறிமுகமானார். அந்நேரம் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதத் தொடங்கினார். பின் குடும்ப சுமை காரணமாக சில ஆண்டுகள் கடல் கடந்து தொழில் புரியச் சென்றிருந்தார். ஆனாலும் அவர் கிடைக்கும் நேரங்களில் சில கவிதைகளும் எழுதுவதுண்டு. 2000 ஆம் ஆண்டில் நாடு திரும்பிய இவர் மீண்டும் இலக்கிய செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உண்டு. இதுவரை 11 கவிதைப் பிரதிகளை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலும் இவரது கவிதைகள் அன்றாடம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பாடு பொருளாகக் கொண்டு புனையப்படுகின்றது. அத்தோடு சுற்றுச்சூழல் சார்ந்த கவிதைகளும், போர், வாழ்வியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் வெளியிட்ட தொகுப்புகளாக உடையக் காத்திருத்தல், அவன் பையில் ஒழுகும் நதி, ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம், காற்றை அழைத்துச் சென்றவர்கள், தாளில் பறக்கும் தும்பி, பறவையின் உடையா நிழல், ஆயத், சிறகு முளைத்த ஊஞ்சல், மீதமிருக்கும் சொற்கள், துயர் கவியும் பாடல்,காலம் ஒரு வேட்டை விலங்கு என்பன காணப்படுகின்றன.

இவர் புதுப்புனைவு இலக்கிய வட்டம் எனும் ஒரு அமைப்பை சக நண்பர்களின் ஒத்துழைப்புடன் நிறுவி அதனூடாக இலக்கிய ஒன்று கூடல்களையும், சந்திப்புகளையும், உரையாடல்களையும் முன்னெடுத்தார். இதுவரை இவரது பதிப்பகத்தினூடாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதனைவிட மூன்றாவது மனிதன், பெருவெளி, படிகள், கலைமுகம், சமகாலம் முனைப்பு, ஜீவநதி, கீறல், வெண்ணிலா போன்ற ஈழத்து இதழ்களிலும் தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி, தமிழன் போன்ற பத்திரிகைகளிலும் காலச்சுவடு, கணையாழி, ஆனந்தவிகடன், வேட்டை போன்ற இந்திய இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

இவர் கவிதை மட்டுமல்லாது அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இதுவரை எழுதியவற்றைத் தொகுத்து வெளியிடவுள்ளார். இவரது கவிதைகள் 150க்கு மேலாக ஆங்கிலத்திலும், 30க்கும் மேலாக மலையாளத்திலும், 6 கவிதைகள் சிங்களத்திலும், ஒரு கவிதை ஹிந்தியிலும் மொழி மாற்று செய்யப்பட்டுள்ளன.

இவருக்கு 1993 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஜனாதிபதி விருது கிடைத்தது. முதல் கவிதைப் பிரதியான ‘தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்’ 2007 இல் யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் அய்யாத்துரை விருதையும் தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றார். 2014 ஆம் ஆண்டு ‘காற்றை அழைத்துச் சென்றவர்கள்’ எனும் கவிதைக்காக பேனா கலை இலக்கியப் பேரவையின் விருதையும், கொடகே சாகித்திய விருதின் சான்றிதழையும், அரச சாகித்திய விருதின் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார். 2017 ஆம் ஆண்டு ‘தாளில் பறக்கும் தும்பி’ கவிதைக்காக இந்தியாவின் மதுரையில் கவிஞர் வைரமுத்து அவர்களால் கவிஞர் திருநாள் விருதும் அதே நூலுக்காக கலை, கலாச்சார பேரவையால் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ‘ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம்’ கவிதைக்காக கொடகே சாகித்திய மண்டல விருது, 2020 ஆம் ஆண்டு ‘மீதமிருக்கும் சொற்கள்’ கவிதைக்காக கிழக்கு மாகாண சாகித்திய விருது, 2021 ஆம் ஆண்டு எதிர் பிரதிகள் பதிப்பகத்தினால் சிறந்த கவிஞருக்கான தமிழ் இலக்கிய விருது, 2023 ஆம் ஆண்டு ‘ஆயத்’ கவிதை நூலுக்கு அரச சாகித்திய மண்டல விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 08