ஆளுமை:செல்வநாயகம், ஆறுமுகம்

From நூலகம்
Name ஆறுமுகம் செல்வநாயகம்
Pages ஆறுமுகம்
Pages தங்கப்பிள்ளை
Birth 1955.12.10
Place பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை
Category எழுத்தாளர், கல்விப்புலம் சார் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆறுமுகம் செல்வநாயகம் அவர்கள் பள்ளிக்குடியிருப்பில் பிறந்த கல்விப்புலம் சார் ஆளுமை ஆவார். இவர் அதிபர், கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என பல பதவிகளில் பதவி வகித்த ஒருவராவார்.

ஆறுமுகம் செல்வநாயகம் அவர்கள் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி திருகோணமலை பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் ஆறுமுகம், தங்கப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து ஆண் சகோதரர்களும், இரண்டு பெண் சகோதரிகளும் உள்ளனர்.

தனது ஆரம்பக் கல்வியை பள்ளிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றதுடன், ஐந்தாம் தரம் தொடக்கம் சாதாரண தரம் வரை தோப்பூர் அல்ஹம்ரா மகா வித்தியாலயத்தில் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் விவசாய போதனா கல்லூரியில் இணைந்து தனது கல்வியை தொடர்ந்ததுடன், விவசாய ஆசிரியராகவும் பணியில் இணைந்து கொண்டார். பின்னர் பலாலி பயிற்சி கல்லூரியில் இணைந்து ஆசிரியராக தன்னை தரம் உயர்த்தி கொண்டார்.

தனது முதலாவது நியமனத்தை கண்டி மதினா மத்திய கல்லூரியில் ஆரம்பித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தனது சொந்த ஊரான பள்ளிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக இணைந்து சேவையாற்றத் தொடங்கினார். அந்தப் பாடசாலையிலேயே அதிபராகவும் சேவையாற்றி சுமார் 13 வருடங்கள் குறித்த பாடசாலையின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற பல பணிகளை மேற்கொண்டதுடன், கல்விப்புலத்திலும் தன்னை தரம் உயர்த்திக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக 11 வருடங்கள் பணியாற்றியதுடன் குறித்த பாடசாலையில் மாணவர் கல்வி தொடக்கம் உட்கட்டமைப்பு வசதிகள் வரை பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டார். மேலும் விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தினை விபுலானந்தா கல்லூரியாக தரம் உயர்த்தினார். அத்துடன் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தை கலைமகள் இந்துக் கல்லூரியாக தரமுயர்த்தினார். இதனால் பல மாணவர்கள் கற்று மிக நல்லநிலையில் உயர்வடைந்துள்ளனர்.

அதன் பின்னர் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் அதிபராக SLEAS தரத்துடன் இணைந்து கொண்டு சேவையாற்றினார். குறித்த காலப் பகுதியில் மூதூரை சேர்ந்த பல மாணவர்கள் திருகோணமலையில் வந்து தங்களுடைய உயர்கல்வியை தொடர விடுதிவசதிகளை செய்து கொடுத்தார். பின்னர் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணியாற்றினார். தேசிய கல்வி நிறுவகத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராகவும் சுமார் 12 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

யுத்த காலத்தில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் அபிவிருத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டதுடன், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தும் மாணவர்களை பாதுகாத்தார்.

இவர் தனது 29 ஆவது வயதில் கமலராணி அவர்களை திருமணம் புரிந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இவர் கற்பித்தல் நுட்பங்கள், பள்ளிக்குடியிருப்பு ஒரு வரலாற்றுப் பார்வை, பாடசாலை தலைமைத்துவம் எனும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளதுடன், அகவிழி சஞ்சிகைக்கும் தன்னால் இயன்ற ஆக்கங்களையும் எழுதியுள்ளார்.